Thursday, December 20, 2012

யானைப் பாகன் வாழ்க்கை - அறியாத தகவல்கள் - பேட்டி

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வணங்கிவிட்டு அவர்கள் தந்த சூடான சர்க்கரை பொங்கலை சாப்பிட்டவாறு (தேவாமிர்த சுவை!)  அந்த யானையை ரசிக்க துவங்கினேன்

பல சிறு குழந்தைகள் யானைக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அதனை தொடவும் செய்தனர். யானையின் காலருகே இரு வெளிநாட்டு குழந்தைகள் அமர்ந்தவாறு இருந்தது மிக ஆச்சரியத்தை தந்தது. அக்குழந்தைகள் யானையின் தும்பிக்கையை பிடித்து விளையாடியதோடு, அதிலிருந்து பணத்தையும் அவ்வப்போது எடுத்து யானை பாகனிடம் தந்து கொண்டிருந்தனர். யானை பாகனை அணுகி யானை பற்றி சற்று கேட்க,  என்னையும் யானையின் கால் அருகே அமர்த்தியவாறு பேசத் துவங்கினார்.


என் பேர் சக்திவேல் எங்க குடும்பத்தில் நாலு தலைமுறையா இதே தொழில் தான் செய்றோம். நாங்க திருவனந்த புரத்தை சேர்ந்தவங்க. அப்பா ரொம்ப வருஷம் முன்னாடி திருக்கடையூரில் வந்து செட்டில் ஆகிட்டார். திருச்செந்தூர் உட்பட தமிழ் நாட்டின் பல கோயில்களில் என்னோட சித்தப்பா பெரியப்பா பசங்க தான் யானை பாகனா இருக்காங்க.

இந்த கோவிலில் யானை பாகன் வேலைக்கு ஆள் தேவைன்னு பேப்பரில் விளம்பரம் கொடுத்து என் தம்பி செந்தில் குமார் இன்டர்வியூ அட்டென்ட் செய்தான். இன்டர்வியூவில் கலந்துகிட்ட 19 பேரில் ஒருவனா செலக்ட் ஆனான்.

யானைகள் பொதுவா கேரளாவில் தான் மிக அதிகம். அங்கு யானையை வீட்டில் வைத்து வளர்க்கவே அனுமதிப்பாங்க. தமிழ் நாட்டில் பெரும்பாலும் வீட்டில் யாரும் யானை வளர்க்கிற மாதிரி தெரியலை கோயிலில் இருப்பது தான் அதிகம். சிலர் யானையை கேரளாவில் மரம் தூக்கும் வேலைக்கு கூட பயன்படுத்துவாங்க. யானைக்கு கோயில்களில் அங்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. எல்லா விழாவுக்கும் யானை வந்துடும்.

யானை வாங்கும்போது நல்ல யானையான்னு பார்த்து வாங்குவாங்க. எப்படி மாட்டுக்கு பல் பார்த்து வாங்கணுமோ அது போல யானைக்கும் சில விஷயம் சரியா இருக்கான்னு பார்த்து தான் வாங்கணும்.

குட்டி யானையா இருந்தா பழக்குறது ஈசி. அதை நேரே கோயிலுக்கு இப்படி கூட்டி வந்து கூட பழக்கிடலாம் வளர்ந்த யானை என்றால் முதலில் பழக்கிட்டு அப்புறம் தான் கூட்டி வரணும்.

ஒரு யானையை பார்த்ததுக்க எப்பவும் ரெண்டு பாகன் இருப்போம். ஒவ்வொரு பாகனுக்கும் ஒரு மாசத்துக்கு எட்டு நாள் லீவு உண்டு. நவம்பர் கடைசியில் எட்டு நாள், டிசம்பர் முதலில் எட்டு நாள் இப்படி 16 நாள் லீவு சேர்த்து எடுத்துட்டு எங்க சொந்த ஊரான கேரளா போவோம். அந்த 16 நாளும் குடும்பம், பசங்க இவங்க பத்தின சிந்தனை தான் இருக்கும். அவங்களுக்கும் இப்படி நாங்க ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை 16 நாள் வந்து இருக்குறது பழகிடுச்சு

யானைகள் ரொம்ப புத்திசாலி. நாம சொல்றதை நல்லா புரிஞ்சிக்கும். பேச மட்டும் தான் தெரியாதே ஒழிய மற்ற எல்லாம் தெரியும். வளர்க்கிறவங்க சொல்றதை மட்டும் தான் கேட்கும். மத்தவங்க சொல்றதை கேட்காது எங்க வாயில் இருந்து வரும் ஸ்மெல் வச்சு தான் எங்களை முக்கியமா அடையாளம் கண்டு பிடிச்சிக்கும்

நம்ம லட்சுமி யானை இங்கே 16 வருஷமா இருக்கு.  யானைக்கு ஆயுள் காலம் மனுஷங்க மாதிரி 100 வருஷம். அதுக்கு கூட குறைய இருக்கலாம்.

இங்கே வர்ற நிறைய பேரு யானைக்கு வாழைப்பழம் தர்றாங்க. ஒரு ஆளு ஒரு பழத்துக்கு மேலே தர விட மாட்டேன் ஒவ்வொண்ணா தந்தாலே ஒரு நாளைக்கு இருநூறு பழம் ஆயிடும்; அதுக்கு மேலே சாப்பிட்டா யானைக்கு வயித்துக்கு ஒத்துக்காது. அருகம்புல் எவ்ளோ வேண்ணா சாப்பிடலாம் ; அதுக்கு லிமிட்டே தேவை இல்லை.

கோயில் அருகே உள்ள கடையில் இது ரெண்டுமே நம்ம யானைக்காகவே நிறைய விற்கும். பார்க்க வர்றவங்க தர்ற பழம்/ அருகம் புல் தவிர கோயிலில் யானைக்கு ரெகுலரா நிறைய உணவு கொடுப்பாங்க 30 தென்னை மட்டை , 3 கிலோ வெண் பொங்கல், கேழ்வரகு களி, அரை கிலோ சாதம் இப்படி நேரா நேரத்துக்கு கோவிலில் இருந்து அதுக்கு சாப்பாடு வரும்.

லட்சுமி காலுக்கு வெள்ளியில் கொலுசு பண்ணி போட்டிருக்காங்க இது மாதிரி 14 செட்டு இருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு போட்டு விடுவோம். நகை கடையில் நம்ம லட்சுமிக்காக ஸ்பெஷலா செய்த கொலுசு இதெல்லாம் !

               

நம்ம யானை மாதிரி எல்லார் கிட்டேயும் அன்பா பழகுற யானை நீங்க எங்குமே பார்க்க முடியாது. பொதுவா யானைங்க ஆசீர்வாதம் மட்டும் தான் செய்யும். நம்ம யானையை பார்வையாளர்கள் தொடலாம் ; கட்டி புடிச்சு கொஞ்சலாம். ஒண்ணும் செய்யாது. கால் அருகே உட்கார்ந்திருக்கே இந்த பசங்க.. இது மாதிரி வெளி நாட்டு ஆட்கள் கோவில் பார்க்க வரும்போது விட்டுட்டு போயிடுவாங்க அதுங்களும் கால் அருகே உட்கார்ந்து விளையாடும். நம்ம கிட்டே இருந்தா குழந்தை பத்தி பயம் இல்லாம கோயிலை சுத்திட்டு வருவாங்க வெளிநாட்டு ஆளுங்க.

(இந்த வீடியோவில் யானையின் அன்பை நீங்கள் காணலாம் ! பின்னணியில் ஒலிக்கும் குரல்களை புறக்கணியுங்கள் :)))


யானை தங்கும் இடம் இங்கிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கு அதுக்கு தனி ஷெட் மற்றும் மணல் திட்டு இருக்கு. வெய்யில் காலத்தில் மணல் திட்டில் இருக்கும் மழை என்றால் ஷெட்-டில் விட்டுடுவோம்.

இரவுல அது விட்டு, விட்டு தான் தூங்கும். ஒரு மணி நேரம் தூங்கும் . அப்புறம் முழிச்சிட்டு தென்னை மட்டையெல்லாம் கொஞ்ச நேரம் சாப்பிடும். மறுபடி தூங்கும். கை, கால் இரண்டையும் விரிச்சுகிட்டு மனுஷன் மாதிரி படுத்து தூங்கும். நாம படுத்த வாக்கிலேயே புரண்டு படுப்போம் இல்லையா. அது மட்டும் யானையால் செய்ய முடியாது.  எழுந்து புரண்டு படுத்துட்டு தூங்கும். நைட்டு முழுக்க யானை பக்கத்திலே தான் இருக்கணும். நாம இல்லாட்டி அது கத்த ஆரம்பிச்சுடும். எங்க தூக்கமும் இதனால் விட்டு விட்டு தான் இருக்கும். அது தூங்கும் போது நாங்க தூங்கிக்கணும்

காலையில் கோயிலுக்கு வர்றதுக்கு முன்னாடி யானையை கூட்டிட்டு ஒண்ணரை மணி நேரம் வாக்கிங் போவேன். அப்ப தான் யானை ஆரோக்கியமா இருக்கும். எனக்கும் அந்த நேரம் வாக்கிங் போன மாதிரி ஆச்சு.

யானைக்கு 15 நாளைக்கு ஒரு முறை சில வகை மருந்துகள் நாங்க குடுப்போம். முதல் 15 நாள் முடிஞ்சோன பால்காயம் என்கிற மருந்து தருவோம். அடுத்த 15 நாள் கழிச்சு அஷ்டசொர்ணம் தருவோம். இதெல்லாம் யானைக்கு நோய் வராம பாத்துக்கும். வருஷம் ஒரு முறை கேரளாவில் இருந்து டாக்டர் வந்து பரிசோதனை செய்வார். இங்கே உள்ளூரிலேயே ஒரு டாக்டரும் இருக்கார் . அவசரத்துக்கு அவரிடம் காட்டுவோம்

யானைக்கு வயசானவுடனே எலும்புருக்கி நோய் வந்து தாக்கும். வயதான யானைகள் அது தாக்கி இறப்பது உண்டு

எனக்கு ஒரே பையன். அவன் அஞ்சாவது படிக்கிறான். நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வச்சிருக்கேன். விட்டா வெள்ளை காரங்க கிட்டேயே இங்க்லீசில் பேசுவான். அவ்ளோ அருமையா இங்க்லீஸ் பேசுறான். பொண்ணு ரெண்டாவது படிக்குது.

பையனை நல்லா படிக்க வச்சு நல்ல வேலைக்கு அனுப்ப ணும்னு தான் நினைக்கிறேன் ; அவன் இந்த தொழிலுக்கு தான் வரணும்னு ஆண்டவன் எழுதியிருந்தா மாத்த முடியாது

இந்த வேலையை நான் ரொம்ப மகிழ்ச்சியோட செய்யுறேன். யானை எனக்கு குழந்தை மாதிரி தான். 16 வருஷமா இரவும் பகலும் அது கூடவே இருக்கேனே ! இந்த தொழிலில் வருமானத்துக்கும் குறைவில்லை. வீட்டை விட்டு தள்ளி இருக்கோம். ஆனாலும் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 15 நாள் அவங்க கூட இருக்குறதால பெரிய விஷயமா தெரியலை.

இந்தியாவிலேயே இது மாதிரி மக்கள் மத்தியில் பிரபலமான யானை எதுவும் கிடையாது. இது ஒண்ணு தான் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எப்பவும் இதைத்தான் காப்பாத்த நினைக்கிறேன் !

****
இங்கு தொடர்ச்சியாய் அவர் பேசியது போல் எழுதி விட்டேனே ஒழிய இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் ! நடுநடுவே லட்சுமி யானையுடன் பேசிக்கொள்கிறார். கோமியம் வாங்க யாரோ ஒரு பெண்மணி  வந்து முன்பணம் தந்து செல்கிறார். பழம் தருவோரிடம் தொடர்ந்து " ஒரு பழம் மட்டும் தாங்க" என சொல்லி கொண்டே இருக்கிறார். கோவிலில் இருந்து சிலர் வந்து பேசி செல்கிறார்கள். இத்தனைக்கும் நடுவில் நம்மிடம் மனம் விட்டு பேசிய அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி விடைபெற்றேன்.
****
அதீதம் டிசம்பர் 15, 2012 இதழில் வெளியானது
****
அண்மை பதிவு :

வானவில்: வண்ணாரபேட்டை -ஸ்னேஹா - ஹார்ட் அட்டாக்

47 comments:

 1. //என்னையும் யானையின் கால் அருகே அமர்த்தியவாறு பேசத் துவங்கினார்.//

  ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்லாதீங்க. யானை கீழே அமர்வதெல்லாம் கொஞ்சம் ரிஸ்க்தான்!


  சமீபத்தில் ஒரு நாள் கால் டாக்சியில் பயணிக்க வேண்டியிருந்தது. யதேச்சையாக ட்ரைவரிடம் பேச்சு கொடுத்தேன்.

  "உங்களுக்கு எப்படி டே ஷிப்ட், நைட் ஷிப்ட்லாம் இருக்கா?"

  "அப்படிலாம் கிடையாது. கூப்ட்ட நேரத்துக்கு போகணும்."

  "அப்போ தூக்கம்லாம் எப்படிங்க?"

  கொஞ்சம் அலட்சியம் ப்ளஸ் விரக்தியுடன், "இந்த தொழிலுக்கு வந்தாச்சு. என்ன பண்றது? தலையெழுத்து"

  அதற்கு பிறகு எந்த கேள்வியும் கேட்கவில்லை. பேட்டி எடுப்பதெல்லாம் நண்பர் மோகனுக்கு மட்டுமே 'மைக்' வந்த கலை போல என்று நினைத்துக்கொண்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. ரகு: நமக்கும் சில நேரம் மனம் விட்டு பேசாத ஆள் இருப்பார் அப்படி இருந்தா அடுத்த ஆளிடம் பேட்டி எடுக்க வேண்டியது தான் அதுக்கா க பார்த்தா முடியுமா :)

   Delete
 2. :)
  என்னோட பையன் யானைய லக்ஷ்மி அப்டின்னு பேர் சொல்லிகூப்டுவான். யானையும் கரெக்டா திரும்பி பாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி லட்சுமியை பார்க்கும் கொடுத்து வைத்த ஆள் நீங்கள் :)

   Delete
 3. பொதுவாகவே எனக்கு யானை மேல ரொம்ப பிரியம். ஜெய மோகன் யானை டாக்டர் படிச்சதுக்குப்புறம் அது ரொம்ப அதிகம் ஆயிடுச்சி. யானை பகன் பற்றிய உங்க பதிவு படிச்சதுல ரொம்ப சந்தோசம். யானை பக்கத்துல உட்காற்றதுக்கு ஒரு தில் வேணும். :)-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராகவாச்சாரி

   Delete
 4. சார் நாங்க எல்லாம் காட்டு யானைக்கே பழம் கொடுத்தவங்க.....! கூட்டமா இருக்கிற யானை சாதுவானதுதான்..சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் பாதையில் வெயில் காலங்களில் பஸ்சை வழி மறிச்சு யானைகள் தண்ணீர் பாட்டில் கேட்கும்...! ஒத்தை யானைகள் தென் பட்டா பைக்கோ..,காரோ பஸ்சோ திருப்பிட்டு ஓடனும்...!

  ReplyDelete
  Replies
  1. அட ! உங்கள் அனுபவம் சொன்னதுக்கு நன்றி சுரேஷ்

   Delete
 5. யானையை மட்டும் எவ்ளோ நேரம் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. லக்ஷ்மியின் கொலுசு ஒன்னு இங்கே இருக்கு. நேரம் கிடைக்கும்போது பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/blog-post.html

  ReplyDelete
  Replies

  1. நன்றி துளசி மேடம் பார்க்கிறேன்

   Delete
 6. கும்கி பார்த்த எஃபெக்டா...........!!

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்கோ அதுக்கு முன்னாடி பாண்டி போய் பேட்டி எடுத்தாச்சு நன்றி :) கும்கி படம் வரப்போகுதே தெரியுமா என பாகனிடம் கேட்க, ஆம் நல்ல படமா வந்துட்டு இருக்குன்னு சொல்றாங்க என்றார் மகிழ்ச்சியுடன் !

   Delete
 7. Anonymous10:45:00 AM

  சூடான, சுவையான சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டு விட்டு நீங்கள் பேட்டியைத் தொடங்கியதாலோ என்னவோ, பேட்டி மிக இனிமை...

  யானையைப் பார்த்ததுமே குழந்தையாகி விடுமோ மனசு ?

  ரகு சொல்வது போல் பேட்டி எடுப்பதில் எக்ஸ்பெர்ட் ஆகி விட்டீர்கள் :-)

  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. ஆம் யானை பார்த்தால் மனம் குழந்தையாகிடுது ; இப்படிப்பட்ட மனிதர்கள் பேட்டி முடிந்து நான் ரொம்ப மகிழ்ச்சியோடு வந்தது இதில் மட்டும் தான்

   Delete
 8. யானை பிரம்மாண்டத்தின் உருவகம்.அதை அடக்கி ஆளும் பாகன்தான் அதுக்கு உண்மையான சிநேகன்..யானைப் பாகனின் பேட்டி இதுவரை எந்தப் பத்திரிகையிலும் படித்தததாக நினைவில்லை.வித்தியாசமான பேட்டி. நிறையத் தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மகிழ்ச்சி முரளி சார்

   Delete
 9. உங்க பதிவை வாசிச்சு காட்டியிருக்கலாம்....
  ஒரு ஓட்டு போட்டிருக்கும்.....ஹிஹி!

  நல்ல பதிவு..!

  ReplyDelete
  Replies
  1. நண்பா எங்கே ஆளையே காணோம் .சவுக்கியாம .

   Delete
  2. ஹா ஹா நன்றி தமிழ்சேட்டுபையன்

   Delete
 10. லக்ஷ்மி குட்டி அழகா இருக்கா. அதைவிட அழகா கொலுசு போட்டிருக்கா. எல்லாத்துக்கும் மேல அவளை ஆசையா கவனிச்சுக்கிற அப்பா இருக்கிறார்

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையா சொன்னீங்க நன்றி உமா

   Delete
 11. Replies
  1. நன்றி கந்தசாமி சார்

   Delete
 12. யானை என்றாலே சுவாரஸ்யம்தான். நல்லபல தகவல்கள். கோமியம் என்பது பசுவுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மையாய் இருக்கும் ஆனால் யானையின் சிறுநீர் பெயர் தெரியலை அதை ஒரு பெண்மணி வந்து புக் செய்துட்டு போனார் பேர் மறந்துட்டேன்

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. நன்றி மோகன், மலையாளம் கைரளி சேனல்லில் E FOR ELEPHANT என்று ஒரு ப்ரோக்ராம் இருக்கிறது அதில் கேரளத்தில் உள்ள எல்லா யானைகளை பற்றியும் நன்றாக விவரித்து சொல்லுவார்கள் , மிக அருமையாக இருக்கும் , திருச்சூர் பூரம் மிக பிரபலமானது என்பதால் அந்த கோவில் பூரதிற்கு அதிக அளவு யானைகள் பங்கெடுக்கும் , யானைகள் ஓட்டப் பந்தயம் எல்லாம் நடக்கும் , எல்ல மலையாள சேனல் களும் அதை நேரடி ஒலி பரப்பு செய்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அடடா நன்றி அஜீம் பாஷா அடிஷனல் தகவல்களுக்கு

   Delete
 15. திரு மோகன் குமார் அவர்களின் "யானைப்பாகன் வாழ்க்கை" அற்புதமான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.
  நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா முக நூலில் பகிர்ந்தமைக்கு

   Delete
 16. இந்தப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. பலவிஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.


  //கோமியம் என்பது பசுவுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைக்கிறேன்.//
  என்று நினைப்பதாக ஸ்ரீராம் சொல்வதும் சரியே. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் ; மகிழ்ச்சி

   Delete
 17. நல்லதொரு பகிர்வு! தெரியாத பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது! நன்றி!

  ReplyDelete
 18. ஆஹா எங்க ஊரு மணக்குள விநாயகர் கோயிலும் லட்சுமி யானையை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஆமாங்க லட்சுமி ரொம்ப நல்ல யானை,ரொம்ப பாசமா இருக்கும்..உங்கள் கட்டுரை படித்ததில் பாகனை பற்றியும் தெரிந்துக் கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!! ரத்னவேலு ஐயாவுக்கும் நன்றிகள்.முகநூலில் இந்த பதிவை பகிர்ந்ததால்தான் இந்த பதிவை படிக்க நேர்ந்தது.மிக்க நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊரை பற்றி எங்கு எப்போது படித்தாலும் மகிழ்ச்சி தானே
   நன்றிங்க

   Delete
 19. புதிய தகவல்கள் பல. சாதுவான யானை என்றாலும் குழந்தைகள் காலைப் பிடித்து விளையாடுவதெல்லாம் ஆச்சரியம். எனக்கு படம் எடுக்கப் பக்கத்தில் போகவே கிலி:)!

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. அடடா அப்படியா? நன்றி ராமலட்சுமி

   Delete
 20. சுவையான பேட்டி....

  லக்ஷ்மியை நானும் பார்த்திருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் . மகிழ்ச்சி

   Delete
 21. துள்சிக்கா தளத்துலேர்ந்து ஒண்ணு இங்க வந்துருச்சா :-))

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? நீங்க சொன்னதும் மேடம் பதிவு படிக்க இன்னும் ஆர்வம் வருது

   Delete
 22. மிக நல்ல பதிவு....புதுமையாகவும் இருக்கிறது....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 23. யானை மற்றும் அதன் பாகன் பத்தின ருசிகர தகவல்கள் அருமை!! எனக்கும் அந்த லக்ஷ்மி யானை பார்க்க ஆசையாக உள்ளது...
  பகிர்விற்கு நன்றிகள் சார்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சமீரா ; மகிழ்ச்சி

   Delete
 24. யானை பற்றி அருமையான பேட்டி .. பாராட்டுக்கள்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...