Monday, November 21, 2011

வாசனை நினைவுகள் :உயிரோசையில் வெளியானது

நீங்கள் ஒரு வாசனை பிரியரா ? நான் அப்படி தான் ! வாசனை என்பது ஒரு தனி ரசனை. இது வரை அந்த ரசனை இல்லா விடில் இனியும் கூட ஏற்படுத்தி கொள்ளலாம். தப்பில்லை ! இந்த ரசனை, வாழ்க்கையை இனிமையாக்கும் ! வாழ்க்கையில் ரசிக்க, என்ஜாய் செய்ய எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என நமக்கு காட்டும் ! எல்லோருக்கும் பிடித்த வாசனைகள் சில பார்ப்போமா?

 ** சின்ன வயதில் டீச்சர்கள் வாசனையை ரசிக்காமல் யாராவது இருந்திருக்க முடியுமா? அவர்கள் போடும் சோப்பு, பவுடர், தலையில் உள்ள பூ, புடவை வாசனை என அனைத்தும் கலந்து அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருக்கும். ஒரு பக்கம் பாடம் மனதுக்குள் போனாலும், இன்னொரு பக்க மனது இந்த வாசனையை ரசித்து கொண்டு தான் இருக்கும்.

**கோயில்களுக்கென்று பிரத்யேக மணம் இருக்கிறது. விபூதி, குங்குமம், அங்கு உள்ள மரங்கள், பூக்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு கலவையான மணத்தை தரும். நிறைய கூட்டம் இல்லாத கோயில்களில் தான் இதை முழுவதுமாக ரசிக்க முடியும் !


**சின்ன குழந்தைகளை தூக்கும் போது அப்போது தான் பாட்டிலில் பால் குடித்து விட்டு அதில் பாதியை தங்கள் மீது ஊற்றி கொண்டு பால் வாசனையுடன் இருப்பார்கள். அந்த வாசனையே இன்னும் கொஞ்சம் அவர்களை கொஞ்ச வைக்கும்.

**அதே குட்டி குழந்தைகள் குளித்து விட்டு வந்தவுடன் வரும் மணம் ... சூப்பர் !! பூ மாதிரி சாப்ட்டா அவர்களுக்கே உரித்தான சோப் போட்டு குளித்து விட்டு வாசனையுடன் சிரிப்பார்கள். பவுடர் போடுவதற்குள் அவர்களை முத்தம் குடுத்து எச்சில் பண்ணிட வேண்டியது தான் !

**பள்ளியில் படிக்கும் போது புது புத்தக வாசனை இருக்கே! புத்தகத்தை மெதுவாக பிரித்து அதன் அற்புத வாசனையை நுகர்ந்தால் அது தரும் உணர்வுகள் க்ளாஸ் ! இப்போதும் கூட என்னோட பெண்ணின் புது புத்தகம் அல்லது நோட்டு எடுத்து வாசனை பார்ப்பது தொடரவே செய்கிறது.

**மழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அல்லது மழை பெய்ய ஆரம்பித்ததும், வரும் மண் வாசனை தனி சுகம் ! அதிலும் செம்மண் சாலையா இருந்தா மண் வாசனை இன்னும் மயக்கும்.

**பெர்பியூம்கள் (Perfume)  தரும் வாசனை நிச்சயம் அசத்தல் தான் ! எனக்கு தெரிந்து இந்திய பெர்பியூம்களை விட வெளி நாட்டு பெர்பியூம்கள் தான் நல்லா இருக்கு. நாம அடிச்சிக்கிற பெர்பியூம் மணம் நமக்கு நல்லா தெரியாது. மத்தவங்களுக்கு தான் தெரியும். போலவே மத்தவங்க அடித்த பெர்பியூம் தான் நாம ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட பெர்பியூம் இருப்பதால் (பெரும்பாலும் வெளிநாட்டு நண்பர்கள் தந்தவை  ! ) ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று அடிப்பேன். "இவன் வந்தாலே இந்த வாசனை தான் வரும்" னு யாரும் நினைக்க கூடாது பாருங்க .. அதுக்கு தான் !

**அலுவலகத்தில் சின்ன கான்பரன்ஸ் ரூமில் ஏழெட்டு பேர் உட்கார்ந்து மீட்டிங் நடக்கும் போது, ஒன்று அல்லது ரெண்டு பெண்கள் தலையில் வைத்திருக்கும் மல்லிகை பூ மணம் தூக்கலா, செம வித்தியாசமா நம்மை என்னமோ பண்ணும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் மீட்டிங்கை கவனிக்கணும். என்னா diversion-டா இது !!


**நித்ய மல்லிகை பூவுக்குன்னு ஒரு மணம் இருக்கு பாருங்க. ச்சே ! சான்சே இல்லை !! எங்க மாமனார் வீட்டில் இந்த பூ இருக்கு ! நித்ய மல்லிகைக்கும் சிறப்பு + ஸ்பெஷம் மணம் பெண்கள் தலையில் இருக்கும் போது தான் !

**பிரியாணி நிறைய பேருக்கு பிடிக்கும். இதற்கு அது தரும் வாசனையும் ஒரு காரணம் ! சமையல் நடக்கும் போதே வரும் வாசனை "எப்படா குக்கரை திறப்பாங்க" என ஏங்க வச்சிடும். ஏலக்காய், கிராம்பு, பட்டை மாதிரி நிறைய வாசனை சமாச்சாரங்கள் போட்டு இப்படி நம்மை பிரியாணி பைத்தியம் ஆகிடுறாங்க மை லார்ட் !


**பைக்கில் அவசரமா போய்கிட்டு இருப்போம். அப்போ ரோட் சைட் கடையில் சுட சுட மெது வடை போடுவாங்க. எவ்ளவோ அவசர வேலையா போனாலும் வண்டியை ஓரம் கட்டிட்டு வடை சாப்பிட செய்வது அது கிளப்பும் வாசனை தான். வடை கைக்கு வந்தோன வாசனை மறந்துடும். ஆனா அந்த கடைக்கு நம்மை இழுத்து வருவது வடையின் வாசனை தான் !

**தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையிலும் வாசனை எண்ணெய் வந்து விட்டது. சும்மா சொல்ல கூடாது ! சாதா எண்ணெய் தடவுவதை விட இது நல்ல உணர்வை  தரவே செய்கிறது !
**சோப்புகள் தரும் வாசனை தனி ரகம். வித்தியாச அனுபவம் + வாசனைக்காக சோப்பை அடிக்கடி வேறு பிராண்டுக்கு மாற்ற வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஹவுஸ் பாஸ் சும்மா சும்மா பிராண்ட் மாற்ற கூடாது; ஸ்கின்னுக்கு நல்லது இல்லை என்று சொல்லி விடுவார் :((

**ஷாம்ப்பூக்கள் தரும் வாசனை யாருக்கும் பிடிக்கவே செய்யும். குளிக்கும் போது நாமே ரசிப்போம். குளித்து முடித்து விட்டு வந்தால் மற்றவர்கள் ரசிப்பார்கள். செம !!

** அலுலகத்தில் பெரிய ஆட்களுக்கு கேபின் இருக்குள்ள ! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரூம் ஸ்ப்ரே தந்திருப்பாங்க ! சில பேர் ரூமுக்குள் போகும் போது ரூம் ஸ்ப்ரே மணம் அருமையா இருக்கும். இதில் என்னா காமேடின்னா நான் பார்த்த வரை, யாரும் தங்கள் ரூம் ஸ்ப்ரேயை ரசிப்பதில்லை. மற்றவர்கள் ரூமுக்கு உபயோகிக்கும் ரூம் ஸ்ப்ரே தான் நன்றாக இருப்பதாக நினைக்கிறார்கள் !!
 

**பழங்களுக்கென்று தனி வாசனை உண்டு. பிரெஷ் ஆக உள்ள போது அவற்றின் வாசனை அசத்தும். குறிப்பாக கொய்யா பழ வாசனை பிடிக்காதவர் இருக்க முடியுமா? மாங்காய் வாசனை பெண்களுக்கு மசக்கை காலத்தில் மட்டுமன்றி  மற்ற நேரத்திலும் பிடிக்கிறது !!

**நமக்கு பிடித்த மனிதர்களிடமிருந்து வரும் வாசனை நமக்கு எப்போதும் பிடிக்கிறது. உதாரணமாக பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவின் வாசனையை மிக விரும்புவதும், பசங்க அம்மா அம்மா என அம்மா வாசனைக்கு அலைவதும் Idibus Complex என்றாலும், இயல்பு தான் !

**முதலில் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் புது நூறு அல்லது ஐநூறு ரூபாய் நோட்டுகள் கையில் வரும். அப்போது அதனை நுகர்ந்து பார்த்து விட்டு, செலவு செய்ய மனமின்றி பீரோவில் வைத்து விடுவோம் !  

**எங்க அலுவலகத்தில் டாய்லட்டில் கிளீன் செய்யும் நபர் ஒருவர் இருந்து, எப்போதும் கிளீன் செய்து ஏதோ லிகுவிட் போட்டு வாசனையாக வைத்திருப்பார். அட ! இந்த இடத்தை கூட இவ்வளவு சுத்தமா வாசனையா வச்சிக்க முடியுமா என ஆச்சரியமாய் இருக்கும் !

**சில வீடுகளில் அருமையான தோட்டம் வைத்திருப்பார்கள். அங்கு போனாலே அனைத்து செடிகளும் பூக்களும் சேர்ந்து ஒரு மயக்கும் வாசனை நமக்கு தரும். செடிகளை, பூக்களை பார்த்து ரசிப்பது மட்டுமன்றி இந்த வாசனையும் நம்மை அங்கு நெடு நேரம் இருக்க வைக்கும் !
 

**ஊர் பக்கத்தில் கடைகளுக்கு முஸ்லீம் பாய் சாம்பிராணி எடுத்து வந்து போடுவார். என்னமா இருக்கும் தெரியுமா? என்ன தான் நம்ம வீடுகளில் சாம்பிராணி போட்டாலும் முஸ்லீம் பாய் சாம்பிராணி போல் வராது ! கடை முழுதும் சுற்றி எல்லா இடங்களுக்கும் போடுவார். கிளம்பும் முன் அப்பா தன் முகத்தை குனிந்து காட்டுவார். பாய் அவருக்கு தனியாக சாம்பிராணி போடுவார். அடுத்து நான் !! அப்பா தரும் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு அடுத்த கடை போவார் பாய் !

**
வாசனை என்பது ஒரு தனி ரசனை. என்ன.. உங்களுக்கு பிடித்த வாசனைகள் சில நினைவுக்கு வருகிறதா? வாழ்க்கையை அனுபவிங்க சார் !

21-11-2011 தேதியிட்ட உயிரோசையில் வெளியானது  

21 comments:

 1. பிடித்த உணவினை நினைத்தால் சுவையை உணர்வது போலவே வாசனையும்! ரசித்தேன்

  ReplyDelete
 2. பிஸ்கட் கம்பனியில் இருந்து வரும் வாசனையை வைத்து ஒரு முழு சஸ்பென்ஸ் கதையையே சுஜாதா எழுதியிருந்தார் (வஸ்ந்த், வஸ்ந்த் என நினைக்கின்றேன்)

  ReplyDelete
 3. வாசனை பற்றி அருமையான பகிர்வு
  ரசித்தேன்

  ReplyDelete
 4. நன்றி மாதவி.
  **
  வாசகன்: அப்படியா? வசந்த் வசந்த் வாசித்துள்ளேன். நினைவில்லை !!
  **
  நன்றி K.S.S. ராஜா !

  ReplyDelete
 5. >>**அலுவலகத்தில் சின்ன கான்பரன்ஸ் ரூமில் ஏழெட்டு பேர் உட்கார்ந்து மீட்டிங் நடக்கும் போது, ஒன்று அல்லது ரெண்டு பெண்கள் தலையில் வைத்திருக்கும் மல்லிகை பூ மணம் தூக்கலா, செம வித்தியாசமா நம்மை என்னமோ பண்ணும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் மீட்டிங்கை கவனிக்கணும். என்னா diversion-டா இது !!

  வீட்டம்மா கவனத்துக்கு...
  அய்யாசாமி ரொம்ப ரொமான்டிக் என்று தெரிகிறது :-)))

  ReplyDelete
 6. ம‌ழை விட்ட‌ பின் வ‌ரும் ம‌ண் வாச‌னை

  தீபாவ‌ளி நாட்க‌ளில், தெருவில் எல்லோரும் வெடி வெடித்த‌பின் வ‌ரும் க‌ல‌வையான‌ வாச‌னை...உட‌ல் ந‌ல‌த்திற்கு தீங்கு எனினும்.. :)

  ReplyDelete
 7. சின்ன குழந்தைகளை தூக்கும் போது அப்போது தான் பாட்டிலில் பால் குடித்து விட்டு அதில் பாதியை தங்கள் மீது ஊற்றி கொண்டு பால் வாசனையுடன் இருப்பார்கள். அந்த வாசனையே இன்னும் கொஞ்சம் அவர்களை கொஞ்ச வைக்கும்

  கொஞ்ச வைக்கும் எழுத்து வாசனை

  ReplyDelete
 8. அருமை. மண்வாசனை எனக்குப் பிடிக்கும்.

  ReplyDelete
 9. எனக்கும் சில வாசனைகள் ரொம்பவே பிடிக்கும். மழைத்துளி மண்ணில் வீழ்ந்த உடன் வரும் மண்ணின் வாசத்திற்கு ஈடுஇணை இதுவரை இல்லை....

  ReplyDelete
 10. வாசனையான பதிவு.

  டீச்சரோட வாசனை நினைவுகள் அருமை.நானும் அனுபவித்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. நல்லாயிருக்குங்க.

  ReplyDelete
 12. கிராமங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு வித வாசனை காற்றில் கலந்து வரும். அது எதுவென்றோ எதனால் என்றோ எனக்கு தெரியாது. ஆனால், அந்த வாசனை எனக்கு மிக பிடிக்கும். அது தான் மண்ணின் வாசனையோ?

  வீடு திரும்பலை தினமும் நுகரும்=படிக்கும் போது கிடைக்கும் சுகம் கூட நன்றாக தான் இருக்கும். தினமும் நுகர்கிறேன்=படிக்கிறேன்.

  ReplyDelete
 13. நல்ல ரசனையான பதிவு.

  வார்னிஷ், பெயிண்ட்,யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றின் வாசனைகளும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 14. பால ஹனுமான் : Why this கொலை வெறி? :))
  **
  ரகு: ஆம். வெடி வாசனை நானும் கூட நினைத்தேன். பகிர மறந்து விட்டேன்
  **
  ரிஷபன் said
  //கொஞ்ச வைக்கும் எழுத்து வாசனை//

  சார். மகிழ வைக்கும் பின்னூட்டம்
  **
  நன்றி ராம லட்சுமி. மண் வாசனை பலருக்கும் பிடிக்கிறது
  **

  ReplyDelete
 15. நன்றி வெங்கட். மகிழ்ச்சி
  **
  ராம்வி: நன்றி
  **
  செல்வராஜ் ஜெகதீசன்: தங்கள் வரவு மகிழ்ச்சி தருகிறது. தங்கள் கவிதைகள் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மகிழ்ச்சி நன்றி
  **
  ஆதி மனிதன்: அசத்தீட்டீங்க. நன்றி
  **
  கோவை டு தில்லி மேடம்: நன்றி

  ReplyDelete
 16. அதெல்லாம் சரி.. பெண்களோட கூந்தலுக்கு இயற்கையிலே வாசனை உண்டா இல்லையா ?

  ReplyDelete
 17. நன்றி மாதவன்
  **
  மிக்க மகிழ்ச்சி.. நன்றி தனபாலன் !

  ReplyDelete
 18. அட கேபிள் ! வாங்க நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. ஒவ்வொரு வருடமும் தீபாவளி மலர் வாங்குவேன்..தீபாவளி அன்று தான் அதனை எடுப்பேன்..முதலில் அதன் வாசம் முகர்வேன்..
  அடுத்தது IGNOU BOOKS அதன் வாசனையே அலாதி..
  அடுத்தது, மோகன் எழுத்து ..அதுவும் தனி வாசம் தான்!


  அன்புடன்,
  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...