Tuesday, November 15, 2011

வர வர கிரிக்கெட் போர் அடிக்குதா?

டிஸ்கி: கிரிக்கெட் பிடிக்காதவர்கள்  நேராக இறுதி டிஸ்கி வாசிக்க செல்லலாம்

சச்சின் நூறாவது செஞ்சுரி அடிக்க திணறுராரு. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அப்படிங்கற சுமாரான டீம் கூட டெஸ்ட் ஆடுது. கிரிக்கெட்டில் ஒண்ணுமே சுவாரஸ்யமா இல்லியே? அப்படின்னு நினைக்கிறீங்களா? என்னை மாதிரி கிரிக்கெட் fan-க்கு எவ்ளோவோ சுவாரஸ்ய நியூஸ் இருக்கு. சாம்பிளுக்கு 4 செய்திகள் :

செய்தி 1 :

ரஞ்சி டிராபி மேட்ச்கள் நடக்குது இல்லையா? இதில் தமிழ் நாடு Vs ஹரியானா மேட்ச் ரெண்டு நாளைக்கு சாதாரணமா போச்சு. இரண்டாவது நாள் முடிவில் ஹரியானா 348 ரன் எடுக்க, தமிழ் நாடு 150-ரன்னுக்கு ஒரு விக்கட் மட்டும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸ் லீட் மட்டும் எடுக்கும்; மேட்ச் டிரா ஆகும் என அனைவரும் நினைக்க, அதன் பின் பல ட்விஸ்ட். முதல் இன்னிங்க்சில் தமிழகம் திடீரென விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது. முதல் இன்னிங்க்ஸ் லீட் கிடைப்பதே பெரும் பாடு என இருந்த போது துவக்க ஆட்டக்காரர் முகுந்த் பொறுப்பாக ஆடி லீட் வாங்கி தந்தார். சரி இனி டிரா தான் என நினைத்தால் கடைசி நாளில் தான் பல ஆச்சரியங்கள்.

ஹரியானா ரெண்டாவது இன்னிங்க்சில் 200 ரன்னுக்கு ஆள் அவுட் ஆகி விட்டது. தமிழகம் 136 ரன் எடுத்தால் வெற்றி. இருப்பதோ 13 ஓவர் மட்டுமே !! 20 - 20 மேட்ச் போல ஆடவேண்டும். 20 - 20 என எளிதில் சொன்னாலும் இது கடைசி நாள் கடைசி 13 ஓவர் !! இருந்தும் தமிழகம் வெளுத்து எடுத்தது. விக்கட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும் முயற்சியை கை விட வில்லை. நம்ம முரளி விஜய் கடைசி கட்டத்தில் 19 பந்தில் 42 ரன் எடுத்தார். கடைசி ரெண்டு பந்தில் ஆறு ரன் தேவை. விஜய் ரன் அவுட் ஆகிட்டார். கடைசியாக இறங்கிய நபர் சிக்ஸ் அடிக்கணும். அவரால் முடியலை. 4 ரன் குறைவாக எடுத்ததால் மேட்ச் டிரா ஆனாலும் தமிழகம் முதல் இன்னிங்க்ஸ் லீடால் அதிக பாயின்ட் எடுத்தது ! இந்த ரஞ்சி டிராபி மேட்ச்கள் எல்லாம் இலவசமாக பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஞாயிறு விடுமுறை நாள்.. சேப்பாக்கம் போயிருக்கலாமே என நினைக்க வைத்தது இந்த மேட்ச் ரிசல்ட் !


செய்தி 2 :

டிராவிட் வர வர என்னமா ஆட ஆரம்பிச்சிட்டார் !! டெஸ்டில் சச்சின் ரிட்டையர் ஆனால் கூட டிராவிடை ரிட்டையர் ஆக விட மாட்டங்க என நினைக்கிறேன். என்ன விதமான பவுலர் என்றாலும், பிட்ச் எவ்வளவு மோசம் எனினும் நின்று ஆடும் நபர் நம்ம டிராவிட் தான். You can rely upon him under any circumstance!! என்ன ஒரு consistency !! அனைத்து அணிகளுக்கும் சேர்த்து இந்த வருடம் டெஸ்டில் அதிக ரன் எடுத்தது டிராவிட் தான்! பொதுவாய் கட்டை போடுபவர் என டிராவிடை அதிகம் பிடிக்கா விட்டாலும் தற்போதெல்லாம் மானம் காப்பவர் என பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தடவை டெஸ்ட் மேட்ச் செஞ்சுரியில் ரெண்டு சிக்சர் அடிச்சிருக்காருன்னா பாத்துக்கங்களேன் !!

செய்தி 3 :

சவுத் ஆப்ரிகா Vs ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் மேட்ச் பல ஆச்சரியங்கள் தந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 214 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்திருந்தது. இது வழக்கமான ஆட்டம் போல் தான் இருந்தது. இந்த மேட்சின் ரெண்டாவது நாள் மறக்க முடியாத நாள் ஆகி விட்டது.

ரெண்டாவது நாள் பற்றி பத்திரிக்கை தலைப்புகள் 
 ரெண்டாவது நாளில் ஆஸ்திரேலியா 284 ரன்னுக்கு முதல் இன்னிங்க்சில் ஆள் அவுட் ஆனது. பின் ஆடிய சவுத் ஆப்ரிகா 24.3 ஓவரில் 96 ரன்னுக்கு ஆள் அவுட் ! பின் ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 21 ரன் எடுப்பதற்குள் 9 விக்கெட் இழந்து விட்டது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைவாக New Zealand எடுத்த 26 ரன்னை விட குறைவாக ஆள் அவுட் ஆகும் என நினைத்தனர். ஆனால் கடைசி விக்கெட் ஜோடி மட்டும் 26 ரன் சேர்க்க ஆஸ்திரேலியா 47 ரன்னுக்கு ஆள் அவுட். இப்போது சவுத் ஆப்ரிகா 236 ரன் எடுத்தால் வெற்றி. கடைசி ரெண்டு இன்னிங்சும் மிக குறைந்த ரன்களுக்கு டீம்கள் ஆள் அவுட் ஆனதால் 236 என்கிற ஸ்கோர் அடிப்பது மிக சிரமம் என நினைப்போம். ஆனால் சவுத் ஆப்ரிகா மிக எளிதாய் இந்த ஸ்கோரை அடித்து ஜெயித்தது. இரண்டரை நாளில் முடிந்த இந்த டெஸ்ட், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத டெஸ்ட் ஆகி விட்டது !

செய்தி 4 :


பீட்டர் ரீபோக் என ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர். ஆஸ்திரேலியா சவுத் ஆப்ரிகா மேட்சை கமெண்டரி தந்து கொண்டிருந்தவர். திடீரென தன் ஹோட்டல் ரூமில் மரணம் அடைந்துள்ளார். தற் கொலை என்று சந்தேகம் !! செக்ஸ் குற்ற சாட்டு (ஒரு ஆணிடம் தவறாக நடந்ததாக) இவர் மீது உள்ளதாகவும், அது பற்றி போலிஸ் வந்து விசாரிக்கும் போது திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

இவர் இந்தியர்களுக்கு மிக பிடித்தமான ஒருவர் ! ஏன் தெரியுமா? சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது பல கசப்பான சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக சிட்னி கிரிக்கெட் மேட்சின் போது ஆஸ்திரேலியா வெற்றி பெற மிக மோசமான உத்திகளை கையாண்டது. ஹர்பஜன் மற்றும் சைமண்ட்ஸ் இடையே வந்த " மங்கி" சண்டை இந்த மேட்ச்சின் போது தான். இதில் இந்தியா தோற்றது. அப்போது பீட்டர் ரீபோக் ஆஸ்திரேலியாவை மிக கடுமையாக விமர்சித்தார். "ஆஸ்திரேலிய வீரர்கள் ரவுடிகள் போல் நடந்து கொண்டனர். பாண்டிங்கை உடனே நீக்க வேண்டும். இந்தியர்கள் எப்படி தான் பொறுமையாக இன்னும் மீதம் உள்ள மேட்ச்கள் ஆட உள்ளனரோ? ஆஸ்திரேலியர் செய்த கூத்துக்கு இந்தியர்கள் பாதியில் விளையாடுவதை நிறுத்தி விட்டு ஊருக்கு போயிருக்க வேண்டும்" என்று எழுதினார் ! இத்தனைக்கும் இவர் ஒரு ஆஸ்திரேலியர்!

நம்ம ஹர்ஷா போக்லே போல புகழ் பெற்ற ஒரு commentator ஆன இவர் மரணம் ஒரு புதிராக உள்ளது !

***
டிஸ்கி: நம் ப்ளாகில் அடுத்த பதிவு :

வீட்டில் பீட்ஸா செய்வது எப்படி?
படங்களுடன் விளக்கம்
(அய்யாசாமியின் சீரியஸ் பதிவு)

12 comments:

 1. டெண்டுல்கர் தனது நூறாவது செஞ்சுரியை நினைக்காமல்.. சாதாரணமாக விளையாடி தனது 52 வது டெஸ்ட் செஞ்சுரியை நிறைவேற்றினால் போதுமே.. -- அவரும் டென்ஷன் பார்டிதான் என்பது இதன்மூலம் எனக்குத் தெரிகிறது.

  ReplyDelete
 2. டிராவிட் அலட்டிக் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார்

  ReplyDelete
 3. நேராக டிஸ்கி வாசித்து விட்டேன்:)!

  ReplyDelete
 4. //பொதுவாய் கட்டை போடுபவர் என டிராவிடை அதிகம் பிடிக்கா விட்டாலும்//

  நம்ம தானைத்தலை ராகுலைப் பற்றி என்னா நினைத்துவிட்டீங்க......
  அவரது முதலாவது (மற்றும் ஒரே ஒரு) international 20/20 இங்கிலாந்திற்க்கு எதிராக ஆடும்போது அவருக்கு வயது 38.
  அதில் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார், 3 சிக்ஸர் உட்பட. ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்

  ReplyDelete
 5. செய்தி 1: நான் பேப்ப‌ர் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். டிரா ஆன‌து ப‌த்தி கூட‌ க‌வ‌லை இல்ல‌. ட்ரை ப‌ண்ண‌து ந‌ல்ல‌தொரு பாஸிட்டிவ் ஆட்டிட்யூடை காண்பிக்கிற‌து. என்ன‌ ப‌ண்ணி என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம், ஒவ்வொரு வ‌ருஷ‌மும் முக்கிய‌மான‌ ஸ்டேஜ்ல‌ ந‌ம்மாளுங்க‌ சொதப்பிட‌றாங்க‌ :(

  செய்தி 2: ச‌ச்சின் இருக்கும் கால‌கட்ட‌த்தில் இருப்ப‌துதான் ராகுல் ட்ராவிடின் மைன‌ஸ். ச‌ச்சினுக்கு அப்புற‌ம் என‌க்கு ரொம்ப‌ புடிச்ச‌து ட்ராவிடும், ஸ்டீவ் வாஹ்ஹும்தான் (இவ‌ரும் என்னா மாதிரி கேப்ட‌ன் இல்ல‌!)

  செய்தி 3: ச‌வுத் ஆஃப்ரிக்கா எப்ப‌டியும் சொத‌ப்பிடுவாங்க‌ன்னு நினைச்சேன். ஆஸ்ட்ரேலியா தோற்ற‌தில் எனக்கு கொஞ்ச‌ம் வ‌ருத்த‌ம்தான். நியூஸ் பார்த்தீங்க‌ளா, எல்லாரும் பாண்டிங், மிட்ச‌ல் ஜான்ச‌ன் த‌லையை உருட்டிகிட்டு இருக்காங்க‌. சீக்கிர‌ம் நிறைய‌ மாற்ற‌ம் வ‌ரும்னு நினைக்கிறேன்.

  செய்தி 4: இவ‌ர் எழுதின‌து ஹிந்துல‌ கூட‌ வ‌ந்திருக்குன்னு நினைக்கிறேன். ஒரு திருத்த‌ம். பீட்டர் ரோப‌க், ஆஸ்ட்ரேலியா இல்லை, இங்க்லேண்ட்.

  ReplyDelete
 6. நேராக டிஸ்கி வாசிக்கச் சென்று விட்டேன்.

  அய்யாசாமியின் பீட்ஸாவுக்கு ஆவலுடன் waiting...

  ReplyDelete
 7. ராகுல் திராவிட் ஆட்டம் ரசிக்கும்படியாய் இருந்தது.

  ReplyDelete
 8. நல்ல அலசல். இதைப் பற்றி நான் என் வலையில் இங்கு (http://kaialavuman.blogspot.com/2011/11/blog-post_15.html#en) எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படிக்கவும்.

  சச்சின் அழுத்தத்தில் இருக்கிறார். அதனால் அவரின் cross batted அடிகள் timing இல்லாமல் சொதப்புகின்றன. பொதுவாக கல்கத்தா wrist ஆடுபவர்களுக்கு உதவும் (அசார், லக்ஷ்மண்). அதாவது பந்து வந்து மட்டையில் பட்ட பிறகு storke செய்ய வேண்டும். cross batted-ல் அது முடியாது.

  இந்நேரத்தில் பொறுமையின் தேவை சச்சினைவிட அதிகமாக அவரது ரசிகர்களுத் தான் வேண்டும் போல இருக்கிறது

  ReplyDelete
 9. மாதவன்: உண்மை தான் நன்றி
  **
  ரிஷபன் சார்: ஆம் டிராவிட்
  **
  நன்றி ராமலட்சுமி. பெண்களில் பலருக்கு கிரிக்கெட் பிடிப்பதில்லை. (நல்லது தான்; நிறைய நேரம் மிச்சம் )
  **
  வாசகன்: நன்றி :))
  **
  விரிவான அலசுலுக்கு மிக நன்றி ரகு.
  **
  நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன் உங்கள் பதிவும் வாசித்தேன். நன்று

  ReplyDelete
 10. பால ஹனுமான். நன்றி பீட்ஸா கதை பிரசுரம் ஆகி விட்டது :))
  **
  ஆம் ! நன்றி ஸ்ரீ ராம்.

  ReplyDelete
 11. கிரிக்கெட் ரசிகர் அய்யாசாமிக்கு...

  சென்ற ஞாயிற்றுக்கிழமை, புகழ்பெற்ற கிரிக்கெட் நிபுணரான பீட்டர் ரொபாக் பாலியல் குற்றச்சாட்டுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிக்கெட் பற்றி எழுத ஆயிரக்கணக்கில் கட்டுரையாளர்கள் இருந்தாலும் பீட்டர் ரொபாக்குக்கு நிகர் யாருமில்லை. பல கிரிக்கெட் கட்டுரையாளர்களுக்கு ரொபாக், ஆதர்சமாக இருந்தவர். ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு நிகராக அவருடைய கருத்துகளும் அலசல்களும் இருக்கும். எந்த ஒரு நாட்டின் சார்பாகவும் அவர் பேசமாட்டார். அவர் ஆஸ்திரேலியாவில் வசித்திருந்த போதும் 2008 சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்களின் மோசமான நடத்தையைக் கடுமையாகக் கண்டித்து, பாண்டிங்கை ஆஸ்திரேலிய அணிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கட்டுரை எழுதினார். எந்தவொரு கிரிக்கெட் வீரருடனும் நட்பு வைத்துக்கொண்டது கிடையாது. யாரையும் பேட்டிகூட எடுத்ததில்லை. கண்ணியமான கட்டுரையாளராகத் தன்னை அமைத்துக்கொண்டதால் உலகம் முழுக்க அவருடைய எழுத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

  கிரிக்கெட்டில் எது நடந்தாலும் இதை ரொபாக் எப்படி அணுகுவார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வீரர்களிடமே இருந்தது. சச்சினின் 100வது செஞ்சுரி, அஸ்வினின் டெஸ்ட் அறிமுகம் பற்றியெல்லாம் அவருடைய கருத்துகளை அறிந்துகொள்ள நமக்குக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

  * டெஸ்ட் மேட்ச் ஆடுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பார்கள். அதை நவம்பர் 13 அன்று, முழுமையாக உணர்ந்திருப்பார் அஸ்வின். கொல்கத்தா டெஸ்ட்டுக்கு முதல்நாள் அஸ்வின் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை முடித்த அன்றே, மாலையில், கொல்கத்தாவுக்குப் பறந்து விட்டார் (மனைவியுடன்தான்). கிட்டத்தட்ட எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் கொல்கத்தா டெஸ்ட் ஆடச் சென்றதற்கு, பெரிய விமர்சனங்கள் எழாமல் இருந்தது அஸ்வினின் அதிர்ஷ்டம்.

  ஒருமுறை, ஐ.பி.எல். மேட்சுகளில் தொடர்ந்து ஆடி, டெஸ்ட் மேட்ச் நடப்பதற்கு இரண்டுநாள் முன்பு மைதானப் பயிற்சிக்குச் சென்ற க்ரிஸ் கேய்லேவை கிரிக்கெட் உலகம் கடுமையாக விமர்சித்தது. இதனால் பெரும்பாலான வீரர்கள், இதுபோன்ற ஒரு நிலைமை வரும்போது குறிப்பிட்ட டெஸ்ட்டிலிருந்து விலகி விடுவார்கள். ஆனால், அஸ்வினுக்கு அந்தப் பாக்கியங்கள் இல்லை. அணியில் ஹர்பஜனின் இடத்தைப் பிடித்து ஒரு டெஸ்ட்தான் ஆடியிருந்தார். அதிலேயே மேன் அஃப் தி மேட்ச் விருது. அடுத்த டெஸ்ட்டில் ஆடாமல் போனால் ஒரு வேளை இருக்கைக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிற நிலைமையில், திருமணம் முடிந்த அன்றே அடித்துப் பிடித்து கொல்கத்தாவுக்குப் பறந்திருக்கிறார் அஸ்வின். (திருமணம் முடித்த சில மணி நேரங்களில், அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, தன் ட்விட்டரில் ஒரு செய்தி கொடுத்திருந்தார்! Hello Ashwin. Welcome to the madness:)

  * போட்டிக்குப் பணம் கொடுத்து நேரில் பார்க்க வரும் ரசிகர்களும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பவர்களும் மைதானத்தில் நடக்கும் திருப்பங்களுக்கும் அபாரமான திறமைக்கான மோதல்களுக்காகவும்தான் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். ஆனால், மைதானத்தில் நடப்பதெல்லாம் ஏற்கெனவே ஃபிக்சிங் செய்யப்பட்டவை என்றால் அது எவ்வளவு அதிர்ச்சிகரமானது; ஏமாற்றமானது.

  பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குக்கி, மனம் நொந்துபோய் சொன்ன வார்த்தைகள் இவை. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஹேன்ஸி குரோன்யே, பாகிஸ்தானின் சலீம் மாலிக், இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஆகியோர் சூதாட்டப் புகாரில் சிக்கினாலும், அவர்களுக்கு விளையாட மட்டுமே தடை விதிக்கப்பட்டது.

  யாரும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படவில்லை. முதல் முறையாக, சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  எட்டு மணி நேரத்தைச் செலவழித்து, கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் கிரிக்கெட் வீரர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டையும் ரசிகர்களையும் அலட்சியமாக எண்ணிய வீரர்களுக்கு பச்சாதாபம், பரிவு என்ன வேண்டியிருக்கிறது?

  --ச.ந.கண்ணன் (கல்கி வார இதழ்)

  ReplyDelete
 12. இந்த செய்தி வாசித்ததும் அய்யாசாமியை நினைத்து பகிர்ந்தமைக்கு நன்றி பால ஹனுமான்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...