Wednesday, November 23, 2011

தென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட் : சில அனுபவங்கள்

சென்னை ரயிலில் தினம் செல்வோர் "மாதாந்திர பாஸ்" வாங்கிவிடுவர். எப்போதோ ஒரு முறை செல்பவர்கள் பாடு தான் சற்று திண்டாட்டம். டிக்கட் வாங்க வால் போல் நீளும் கூட்டத்தில் நின்று டிக்கெட் வாங்குவதற்குள் ஒரு சில ரயில் சென்று விடும். நாம் டிக்கெட் வாங்கிய பிறகு சோதனையாக நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருப்போம். இத்தகைய மனிதர்களின் கஷ்டம் தீர்க்க வந்தது தான் தென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட்.

நான் ரயிலில் மாதம் ரெண்டு, மூன்று முறை செல்பவன். சென்னையில் ரொம்ப தூர பயணம் எனில் ரயிலை விட விரைவாக வேறு எந்த விதத்திலும் செல்ல முடியாது என்பதாலும், இந்த பயணம் தரும் இனிய அனுபவங்களுக்காகவும் செல்வேன். அப்போதெல்லாம் அடிக்கடி கியூவில் நின்ற அனுபவம் தான் ஸ்மார்ட் கார்ட் வாங்க யோசிக்க வைத்தது. ரொம்ப நாள் யோசனைக்கு பின் தான் "சரி முயற்சித்து தான் பார்ப்போமே" என்று வாங்கினேன்.

இந்த இடத்திலேயே ஒரு விஷயத்தை விளக்கி விடுவது உசிதம். ஸ்மார்ட் கார்ட் சில முறை எனது BP எகிற வைத்தது உண்மை தான். அது பற்றி இக்கட்டுரையில் நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் .........
*******
பார்ப்பதற்கு நமது ATM கார்ட் போல இருக்கும் இந்த ஸ்மார்ட் கார்ட் பற்றிய சில தகவல்கள் இதோ:

முதல் முறை நூறு ரூபாய் தந்து ஸ்மார்ட்கார்ட் வாங்கினால், எழுபது ரூபாய்க்கு டிக்கெட் ரீ-சார்ஜ் செய்து தருகிறார்கள். மீதம் முப்பது? ப்ராசசிங் சார்ஜ்! பயப்படாதீர்கள் ! இது முதல் முறை மட்டும் தான். அடுத்த முறையிலிருந்து நாம் தரும் பணத்துக்கு மேல் 5% ரீ-சார்ஜ் செய்கிறார்கள். (நூறு ரூபாய் தந்தால் -105-க்கு ரீ-சார்ஜ் !)

Smart card உபயோகிக்கும் முறை கிட்டத்தட்ட நாம் ஏ. டி.எம் கார்ட் உபயோகிப்பது போல் தான். இந்த மெஷினில் குறிப்பிட்ட இடத்தில் கார்டை வைக்க வேண்டும். பின் கம்பியூட்டர் ஸ்க்ரீனில் நாம் செல்ல வேண்டிய ரூட்டின் மேல் விரல் வைத்தால் அந்த ரூட்டில் உள்ள அனைத்து ஸ்டேஷன் பெயர்களும் தெரியும். நாம் செல்ல வேண்டிய இடம் தேர்ந்தெடுத்து விட்டு எத்தனை டிக்கட், ரிட்டர்ன் டிக்கட் வேண்டுமா என அழுத்தி விட்டு "பிரிண்ட்" அழுத்தினால் டிக்கட் வந்து விழுந்து விடும். கியூவில் நிற்காமல் உடனடியாக சில நொடிகளில் டிக்கட் கிடைத்து விடும்.

கேட்க நல்லா தான் இருக்கு. நிஜத்தில் உள்ள பிரச்சனைகள்??

சில இடங்களில் இந்த மெஷின் வேலை செய்வதில்லை. குறிப்பாக செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் உள்ள மெஷின் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. இது பற்றி அங்கு டூட்டியில் இருப்போரிடமும், ஸ்டேஷன் மாஸ்டரிடமும் கம்ப்லெயின்ட் செய்து செய்து வெறுத்து போச்சு. எப்ப கேட்டாலும் "கொஞ்ச நேரம் முன்னாடி கூட வேலை செஞ்சுதே?" என்பார்கள். பின் வந்து பார்த்துட்டு, "ஆமாம் இப்ப வேலை செய்யலை" என ஊர்ஜிதம் செய்வார்கள். ஒரு முறை " Complaint Register" -ல் எழுதணும் என்றதும் அதை தவிர்க்க எவ்வளவோ போராடினார்கள். நான் விடாப்பிடியாக நின்று எழுதி விட்டு வந்தேன். அதன் பின் சில முறை வேலை செய்தது. நான் கூட " சரி தான். நம்ம Complaint -கொஞ்சம் வேலை செய்யுது போல" என நினைத்தேன். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி மெஷின் வேலை செய்வதில்லை.

இது போன்ற நேரங்களில் நமக்கு வரும் எரிச்சல் சொல்லி மாளாது. இந்த  கார்ட் வாங்குவதே கியூவில் நிற்காமல் வேகமாய் டிக்கட் வாங்கத்தான். ஆனால் மெஷினில் ஐந்து நிமிடம் செலவழித்து அதன் பின் ரெகுலர் கியூவில் நிற்கிற கொடுமை இருக்கே ! வெறுத்து போகும் !!

இதற்கு மேலும் ஒரு பிரச்சனை ரொம்ப அரிதாக நடக்கிறது. மெஷின் சரியாக வேலை பார்க்காத சில நேரம், நீங்கள் எடுக்க முயற்சிக்கும் போது . உங்கள் கார்டில் பணம் குறைந்து விடும். ஆனால் டிக்கெட் வராது ! ஒரு முறை இப்படி நடந்து டிக்கட் கவுண்டரில் சென்று கேட்ட போது அங்கிருந்த மேதை " மெஷின் வேலை செய்யாதப்போ நீங்க ஏன் கார்ட் போட்டீங்க" என நம்மை கடித்தார். " மெஷின் வேலை செய்யலைன்னு எப்படிங்க தெரியும்? நீங்க மெஷின் வேலை செய்யாதுன்னு போர்டா போட்டிருக்கீங்க? எப்பவும் போல தான் யூஸ் செய்தேன்" என்றால், " எனக்கு தெரியாதுங்க. அதுக்கு வேற ஆள் வரணும்" என்று எஸ்கேப் ஆனார் அவர்.

இப்படி பணம் டெபிட் ஆகி டிக்கட் வராத சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என நெட்டில் வாசித்தால் தெரிகிறது.

இவ்வளவு நடந்தும் இன்னும் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்கிறேன் தான்.

மும்பை போன்ற இடங்களில் Smart Card முறை மிக பெரிய வெற்றி. சென்னையிலோ மாபெரும் தோல்வி. மும்பையில் மொத்த பயணிகளில் 18 % இந்த முறையை பயன் படுத்துகின்றனர். சென்னையில் 1 % கூட இல்லை.

சரியான முறையில் பராமரித்தால் இந்த ஸ்மார்ட் கார்ட் மெஷின்கள் நிச்சயம் டிக்கெட் எடுக்க நிற்கும் கூட்டத்தை குறைக்க உதவும். ஏ. டி. எம் மெஷின்கள் பிரபலமானது போல் இவையும் பிரபலமாகும் நாள் வரும். அதற்கு தென்னக ரயில்வே ஒழுங்காக இயங்கும் மெஷின்களை அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும்.

அது முடியா விட்டால், இயங்காமல் இருக்கும் மெஷின்களை வைப்பதற்கு பதில், இந்த முறையையே பேசாமல் எடுத்து விடலாம்.

மக்களுக்கு பணமும் நேரமும் மிச்சம் செய்ய வந்த இந்த Smart Card தேவையற்ற மன சங்கடங்களை தந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை !

15 comments:

 1. ஒரு முறை இப்படி நடந்து டிக்கட் கவுண்டரில் சென்று கேட்ட போது அங்கிருந்த மேதை " மெஷின் வேலை செய்யாதப்போ நீங்க ஏன் கார்ட் போட்டீங்க" என நம்மை கடித்தார்

  Ha ha.. Always people are like that.. Your experience is an eye opener

  ReplyDelete
 2. நேற்றைக்கு ‘எங்கள் பிளாக்’ ல யுனிட் டிரெயின் பற்றி படிச்சதும் யுனிட்டிரெயின்னல பயணம் போகணும்கிற ஆசை வந்தது.(ரொம்ப வருடங்களுக்கு முன் காலேஜ் மற்றும் அலுவலகங்களுக்கு போனது).

  //இவ்வளவு நடந்தும் இன்னும் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்கிறேன் தான். //

  இப்ப உங்களோட அனுபவத்தை படித்ததும் என்னதான் கஷ்டம் இருந்தாலும் அதுல பயணிக்கற அனுபவம் இருக்கே!அதுக்காகவாவது திரும்பிப்போகணும் அப்படீன்னு ஆசை அதிகமாயிடுத்து.

  ReplyDelete
 3. எல்லாம் 'ஸ்மார்ட் ' மகிமை..

  ReplyDelete
 4. ஸ்மார்ட் கார்டுக்கு வேலிடிட்டி இருக்குல்ல? குறிப்பிட்ட காலத்துக்குள்ள ரீசார்ஜ் செய்யலைன்னா இருக்கற பாலன்ஸும் போய்டும்னு நினைக்கறேன்.

  ReplyDelete
 5. ரிஷபன் சார்: நன்றி
  **
  ராம்வி: உங்கள் ஊரில் கூட லோக்கல் டிரையின் ஓட ஆரம்பிச்சிடுச்சு போல தெரியுதே?
  **
  மாதவா: நன்றி
  **
  ஷங்கர்:Validity ஆறு மாதம் என நினைக்கிறேன். நூறு ரூபாய் ஆறு மாதத்துக்குள் செலவழிக்க மாட்டோமா என்ன?

  ReplyDelete
 6. சீக்கிரமே மெட்ரோ வரட்டும். எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும். நீங்கள் சொல்வதிலிருந்து நான் புரிந்து கொண்டது... பயனீட்டாளர்கள் பெருகினாலே, எந்த திட்டமும், வெற்றி அடையும் என்று . இன்னும் எ.டி.எம் கார்டு கூட உபயோகிக்க தெரியாத (மருத்துவ) தோழிகள் சிலர் எனக்கு தமிழகத்தில் உண்டு!!! மெட்ரோ ரயில் வந்த அதையாவது எல்லாரும் சேர்ந்து ஹிட் ஆக்குவோம்!

  ReplyDelete
 7. மோஹன் குமார்,

  ஸ்மார்ட் கார்ட் எல்லாம் பேருக்கு தான் போல, அந்த மஷின் பல நிலையங்களில் இல்லையே? இல்லை யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சு இருக்காங்களா? எனகு தெரிந்து பெருங்களத்தூர், உரபாக்கம், கூடுவான்சேரி . சூளைமேடு நிலயங்களில் அந்த மெஷின் இல்லை.

  சென்ரலில் 5 ரூபாய் காயினாக போட்டால் டிக்கெட் வரும் என்று ஒரு மெஷின் வைத்திருந்தார்கள் அதுவும் வேலை செய்வதில்லை. ப்ளாட்போர்ம் டிகெட் வாங்க மெஷின் வைத்தார்கள் அதுவும் வேலை செய்வதில்லை!

  ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் இன்னும் ஸ்மார்ட் கார்ட நம்புறிங்க! :-))

  ReplyDelete
 8. வவ்வால் said:

  //ஸ்மார்ட் கார்ட் எல்லாம் பேருக்கு தான் போல, அந்த மஷின் பல நிலையங்களில் இல்லையே? இல்லை யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சு இருக்காங்களா? எனகு தெரிந்து பெருங்களத்தூர், உரபாக்கம், கூடுவான்சேரி . சூளைமேடு நிலயங்களில் அந்த மெஷின் இல்லை.//

  சூளை மேடு (நுங்கம்பாக்கத்தில்) இருக்கு நானே எடுத்துள்ளேன். அடுத்த முறை கவனியுங்கள். தாம்பரம் தாண்டி உள்ள ஊர்களில் இருக்கா என தெரியலை. தாம்பரம் டு பீச் அனைத்து ஸ்டேஷன்களிலும் உள்ளது. போலவே வேளச்சேரி டு பீச் அனைத்து ஸ்டேஷன்களிலும் உள்ளது. அது பற்றி தெரியாததால் உங்கள் கண்ணில் பட்டிருக்காது

  இன்னும் அந்த கார்ட் வைத்திருக்க காரணம், ஒரு சில நேரம் வேலை செய்யா விட்டாலும், பாதி நேரமாவது கியூவில் நிற்காமல் டிக்கெட் எடுக்கலாமே என்று தான் !!

  ReplyDelete
 9. மும்பையில் இருப்பது போல வீக் எண்ட் பாஸ், 3 டேஸ் பாஸ் கொடுத்தா கூட நல்லா இருக்கும். தினம் டிக்கெட் வாங்குவதை விட இந்த மாதிரி பாஸில் காசும் மிச்சம், 2 அல்லது 3 தடவை கூட போய் வர முடியும்.

  ReplyDelete
 10. பூங்கா - நிலையத்தில் காலை நேரத்தில் டிக்கெட் வாங்க பெரிய வரிசை இருக்கும்.

  அங்கே ஒரு மெஷின் இருக்கிறது. அங்கே சில இளைஞர்கள் நின்று கொண்டு இருப்பார்கள் - சார் எங்க போகணும், நான் டிக்கெட் வாங்கித் தருகிறேன் - ரெண்டு ரூபாய் அதிகம் கொடுங்கள் என்று வாங்கிக் கொடுப்பார்கள் - பார்த்திருக்கிறேன்....

  அப்படி ஒரு இளைஞரை கேட்டபோது ஒரு நாளில் 50-100 பேருக்கு வாங்கிக் கொடுத்து சுமாராக 100-200 சம்பாதிப்பதாகச் சொன்னார்....

  ReplyDelete
 11. பெரும்பாலான‌ அர‌சுத் துறைக‌ளில் ந‌ம‌க்கு ந‌ல்ல‌ப‌டியா ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நினைச்சீங்க‌ன்னா நீங்க‌ இன்னும் அப்பாவியா இருக்கீங்க‌ன்னு அர்த்த‌ம்.

  ஸ்மார்ட் கார்ட் உண்மையாவே ஒரு ந‌ல்ல‌ ஆப்ஷ‌ன். ஆனால் இதை ச‌ரியான‌ முறையில் ப்ரொமோட் ப‌ண்ணாம‌ விட்டுட்டாங்க‌. நிறைய‌ பேர்கிட்ட‌ ரீச் ஆகியிருந்தா இன்னைக்கு இந்த‌ நிலைமை இருந்திருக்காது

  ReplyDelete
 12. அதிகம் நண்பர்கள் வாசித்த தமிழ் மணத்தின் சூடான இடுகைகள் லிஸ்டில் இந்த இடுகையும் இடம் பெற்றது :

  //
  வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
  சூடான இடுகைகள்

  இன்று இந்த வாரம்
  அமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு! ஒரு எச்சரிக்கை!!!
  Avargal Unmaigal

  விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் உண்மையான பின்னணி...
  கவிதை வீதி... // சௌந்தர் //

  சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்
  Jackiesekar

  ஈழத்தின் இறுதிப் போரைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரங்கள்!
  நிரூபன்

  தென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட் : சில அனுபவங்கள்
  மோகன் குமார்//

  ReplyDelete
 13. டாகடர். வடிவுக்கரசி: நீங்கள் சொல்வது உண்மையே. நிறைய பேர் உபயோகித்தால் நிச்சயம் improve ஆகும்.
  **
  புதுகை தென்றல் said:
  //மும்பையில் இருப்பது போல வீக் எண்ட் பாஸ், 3 டேஸ் பாஸ் கொடுத்தா கூட நல்லா இருக்கும்//
  முழுக்க சரி ! நிச்சயம் இது உதவும்
  **
  வெங்கட்: தகவலுக்கு நன்றி. நான் டிக்கெட் அதில் எடுக்கும் போது கூட சிலர் வந்து எனக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுங்க என கேட்பாங்க
  **
  நன்றி துரை டேனியல்
  **
  ரகு :
  //ஸ்மார்ட் கார்ட் உண்மையாவே ஒரு ந‌ல்ல‌ ஆப்ஷ‌ன். ஆனால் இதை ச‌ரியான‌ முறையில் ப்ரொமோட் ப‌ண்ணாம‌ விட்டுட்டாங்க‌. நிறைய‌ பேர்கிட்ட‌ ரீச் ஆகியிருந்தா இன்னைக்கு இந்த‌ நிலைமை இருந்திருக்காது//
  உண்மை தான் ரகு. சரியா சொன்னீங்க !

  ReplyDelete
 14. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...