Wednesday, November 2, 2011

வேளாங்கன்னி:பயண கட்டுரை

இந்தியா முழுதும் உள்ள கிறித்துவர்களின் முக்கிய புண்ணிய தளம் வேளாங்கன்னி. மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்றும், வேண்டுதல்களை நிறைவேற்றும் கடவுள் என்பதும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை.

எங்கள் ஊரான நீடாமங்கலத்திலிருந்து வேளாங்கன்னி அறுபது கிலோ மீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸில் செல்ல ரெண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. எங்கள் ஊர் தஞ்சை மற்றும் வேளாங்கண்ணிக்கு நடுவில் உள்ளது. தஞ்சை வழியே வேளாங்கன்னி செல்வோர் இந்த ரூட்டில் தான் செல்ல வேண்டும். ஆங்காங்கு திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தும் போது மிக அசுத்தமான சுற்று புறத்தால் மூக்கை பொத்தி கொண்டு நெளிய வேண்டியுள்ளது. அந்த பேருந்து நிறுத்தங்களில் வண்டியை பத்து நிமிடமாவது நிறுத்தி விட ஒரே நாற்ற மயம் தான். பேசாமல் ரயிலில் சென்று விட்டால், இந்த பிரச்னையை மட்டுமல்ல மோசமான சாலைகளையும் தவிர்த்து விடலாம் !

வேளாங்கன்னி முழுக்க முழுக்க மாதா கோயிலையும் அதற்கு வரும் சுற்றுலா பயணிகளையும் நம்பியே உள்ளது. நூற்று கணக்கில் உள்ள லாட்ஜுகள் வார கடைசியில் நிரம்பி விடுகிறதாம். வார நாட்களில் கூட அவை பெரிதும் நிரம்பி உள்ளதாக சொல்கிறார்கள்.

வருடா வருடம் செப்டம்பர் முதல் வாரம் நடக்கும் 9 நாள் திருவிழாவிற்கு குறைந்தது 20 லட்சம் பேர் வருகிறார்கள். இந்த நேரத்தில் வேளாங்கன்னியில் தரையில் கால் வைத்து நடப்பதே சிரமம் !! ஊர் முழுதும் மனித தலைகளால் நிரம்பி இருக்குமாம்.

இந்து கோயில்கள் அனைத்திலுமே கியூ வரிசையில் செல்வோம். புகழ் பெற்ற கோயில்கள் என்றால் தரிசனம் கிடைக்கவே சில மணி நேரம் ஆகும். ஆனால் வேளாங்கன்னியில் மட்டுமல்லாது கிறித்துவ கோயில்களில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் அமர்ந்து " மாஸ்" அட்டென்ட் செய்கிறார்கள். இப்படி காத்திருக்காமல் கடவுளை கும்பிடுவது நிச்சயம் அவர்களை அடிக்கடி (குறைந்தது வாரம் ஒரு முறை) சர்ச்சுக்கு வர வைக்கிறதோ என்று தோன்றியது.
வேளாங்கன்னி கோயில் முன்பு (தலை மீது கை வைத்திருக்கும் அம்மணி யாருன்னு தெரியலை!)
 இந்து கோயில்களில் இருப்பது போல் கொடி மரம் இங்கும் உள்ளது. இந்த கம்பியை சுற்றி வரிசையாக ஏராளமான பூட்டுகள். ஏன் என்று விசாரித்த போது குடும்பத்தில் சண்டை இன்றி இருக்க நிறைய பேர் வேண்டி கொண்டு பூட்டு போடுவார்கள் என்றும், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும், சிலர் புது வீடு வாங்கவும் கூட இந்த வேண்டுதல் செய்வார்கள் என்றும் கூறினர்.

வேளாங்கன்னியில் ஜீசசுக்கு தனி கோயில், மாதாவிற்கு தனி கோயில் என்று உள்ளது. மாதா கோயில் தான் அதிக முக்கிய துவம் என நினைக்கிறேன். இங்கு உள்ளே செல்லும் போது தீர்த்தம் போல் தண்ணீர் வைத்துள்ளனர். அதை தலையில் தெளித்து கொண்டு உள்ளே செல்கிறார்கள்.

ஏராளமான பேர் மலர் மாலைகள் வாங்கி வருகின்றனர். அவை மாதா மேல் போட்டு விட்டு சற்று நேரம் கழித்து அந்த மாலையை வந்தவர்களுக்கு நறுக்கி குடுத்து விடுகிறார்கள். ஒரு இடத்தில தேங்காய் எண்ணை வைக்கப்பட்டுள்ளது. அதை தீர்த்தம் அல்லது பிரசாதம் போல் பாவித்து தலையில் தடவி கொள்கிறார்கள்.

நிறைய பேர் உடைத்த தேங்காய் கையில் வைத்திருந்தார்கள். இந்து கோயில்களில் தான் தேங்காய் உடைக்கிற வழக்கம் இங்குமா என மிக ஆச்சரியமாக இருந்தது. அது பற்றி மேலும் விசாரிக்க மறந்து விட்டேன்.

இங்கு தினசரி மாஸ் பெரும்பாலும் தமிழில் தான் நடக்கிறது. இது தவிர காலை ஒன்பது மணி மாஸ் மலையாளத்திலும் பத்து மணி மாஸ் ஆங்கிலத்திலும் நடக்கிறது.

வேளாங்கன்னிக்கு வருவோர் மாதாவிடம் தங்கள் வேண்டுதல் பலித்தால், நிறைய பொருட்கள் காணிக்கையாக தருகிறார்கள். இதற்கென்று தனி கண்காட்சியே (Museum) உள்ளது. டாக்டர் சீட்டு கிடைத்தோர் பலர் தங்கத்தில் ஸ்டெதாஸ்கோப் செய்து போட்டுள்ளனர். வீடு கட்டியவர்கள் வீட்டு மாடல்களும் உடல் நலம் குன்றி பின் சரியானோர் அந்த உறுப்பு உருவில் தங்கம் அல்லது வெள்ளியிலும் தங்கள் சக்திக்கேற்ற படி காணிக்கை செய்கின்றனர். மிக பெரிய பில்டிங்கில் இதை சுற்றி பார்க்கவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் நாங்கள் இங்கு பார்த்த ஆயிரக்கணக்கான காணிக்கை அனைத்தும் சென்ற இரு மாதங்களில் வந்தவை மட்டுமே. அதற்கு முன் வந்தவை அங்கிருந்து எடுத்து விட்டார்கள். அப்படி எனில் எவ்வளவு பேர் காணிக்கை செலுத்துகிறார்கள் என்று பாருங்கள்!

கோயிலுக்கு சற்று அருகிலேயே பீச் உள்ளது. கோயிலுக்கும் பீச்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் பெரிய கடை தெரு உள்ளது. பெண்கள் தான் ஷாப்பிங் செய்வார்கள் என்கிற விஷயத்தை நன்கு உணர்ந்து அவர்கள் விஷயங்களான தோடு, வளையல், Bag போன்றவை தான் நிறைய கிடைக்கிறது. கிளிஞ்சல்களில் தோடு போன்ற அங்கு மட்டுமே கிடைக்கும் சில பொருட்கள் சற்று பார்கெயின் செய்து வாங்கலாம்

வேளாங்கன்னி பீச் ஓரளவு சுத்தமாக உள்ளது. ஆனால் தண்ணீர் நிறம் மண் நிறத்திலேயே உள்ளது. சென்னையில் கடலையும், தண்ணீரையும் நீல நிறத்தில் பார்த்து பழகிய நமக்கு அது என்னவோ போல் உள்ளது. மிக மிக அதிகமான கூட்டம் அங்கு குளித்து கொண்டிருந்தது.


பீச் அருகே ஊர் உள்ளதால் மீன்கள் கண் முன்னே சமைத்து சுட சுட தருகிறார்கள். ஒரு கடையில் மீனுக்கு பேன் (Fan) போட்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஈ மொய்க்காமல் இருக்க இந்த ஏற்பாடு. இங்கு ஒரு வீடியோ எடுத்தேன். இதில் நீங்கள் வேளாங்கன்னி பீச்சையும் பார்க்கலாம் ! 

வேளாங்கன்னி மிக பெரிய சுற்றுலா தளம். இருந்தும் போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லை. மிக அருகிலுள்ள நாகப்பட்டினம் திரும்ப வரவே நாங்கள் பதினைந்து நிமிடம் பஸ் டெர்மினசில் நின்றிருந்தோம். அப்போது வேறு எந்த ஊருக்கு செல்லும் பஸ்சும் இல்லாமல் பஸ் டெர்மினஸ் வெறிச்சோடி கிடந்தது. பேருந்துகளில் மிக அதிக கூட்டம் ஏறுகிறது. நீண்ட தூரம் செல்லும் ஊர்களுக்கு கியூ வரிசையில் நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் அனுப்புகிறார்கள்.

வேளாங்கன்னியில் ரயில் நிலையம் கிடையாது. நீங்கள் வேளாங்கன்னி வர வேண்டுமெனில், நாகப்பட்டினம் வரை ரயிலில் வந்து பின் பேருந்தில் தான் வேளாங்கன்னி வர வேண்டும்.

இங்குள்ள ஹோட்டல்கள் பெரும்பாலும் நான் வெஜ் ஹோட்டல்கள் தான். சைவம் மற்றும் அசைவம் என்று போர்டுகள் சொன்னாலும் சைவ ஓட்டலை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது. (நாங்கள் புரட்டாசி என்பதால் அப்போது அசைவம் சாப்பிட வில்லை.இல்லா விடில் பிரச்சனை இருந்திருக்காது). ஓட்டல்களில் விலை சற்று கூடுதலாக உள்ளது. தண்ணீர் அவசியம் மினரல் வாட்டர் வாங்கி குடித்து விடுவது உசிதம்!

நீங்கள் இதுவரை வேளாங்கன்னி செல்லா விடில், தஞ்சை அல்லது பாண்டிச்சேரி பக்கம் செல்லும் போது அப்படியே ஒரு எட்டு வேளாங்கன்னியும் அவசியம் சென்று வாருங்கள் !

17 comments:

 1. நல்ல பயணக்கட்டுரை. பல விஷயங்கள் சொல்லிப் போனது உங்கள் கட்டுரை. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 2. அழகிய படங்களுடன் அருமையான பயண கட்டுரை. வேளாங்கன்னி ஊரைப்பற்றி நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 3. சுனாமியில் இறந்தவர்களில் வேளாங்கன்னி அருகே இறந்தவர்கள் தான் மிகுதி, க்ரேன் வைத்து குழி தோண்டி புதைத்தார்கள்.

  ReplyDelete
 4. வேளாண் கண்ணியைப் பற்றிய அருமையான பதிவு. நாங்களும் முப்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறோம். பொதுவாக எல்லா சுற்றுலாத் தளங்களையும் ஆள்புழக்கம் அதிகமாக இருப்பதால் சுகாதாரக் குறைவாகி விடுகிறது.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

  ReplyDelete
 5. நல்ல பயணக் கட்டுரை. உங்களிடமிருந்து பயணக் கட்டுரை எழுதுவது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 6. பயணத்தில் கூடவே பிரயாணித்தது போன்ற கட்டுரை!! அருமை!

  //சர்ச் உள்ளே மாஸ் நடக்கும் போது எடுத்த வீடியோ இது. எடுத்து முடித்து விட்டு வெளியே வந்த பின் தான் "உள்ளே கேமிரா அனுமதி இல்லை" என்கிற வாசகம் பார்த்தேன். தெரியாமல் எடுத்து விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. // விதியை மீறி எடுத்ததைப் பதிவிடாமல் தவிர்த்திருக்கலாமோ?

  ReplyDelete
 7. அருமையாக விவரங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் பயண அனுபவத்தை.

  ReplyDelete
 8. அருமையான பதிவு.

  ReplyDelete
 9. மோகன்,

  வேளாங்கண்ணி என்பதுதான் சரி. வேளாங்கன்னி அல்ல.

  ReplyDelete
 10. very nice,sir,as usual. this shows how well you focus on your holiday trip too! yes the lady was not clear in the photo. i hope the gentleman standing is you.not clear either. but the church view was fantastic.hope you had a nice trip.

  ReplyDelete
 11. முழுமையான தகவல்களுடன் எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்று.

  புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் நிலையமும தயாராக உள்ளது என்கிறார்கள். இன்னும் செயல்படத் துவங்கவில்லை, என்ன காரணம் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 12. வேளாங்கண்ணி பற்றிய தகவல்களுக்கு நன்றி! ரொம்ப நாட்களாய் போக வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும் இடம்!
  புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete
 13. Anonymous8:23:00 PM

  மின்விசிறி மீன்விசிறி ஆனதைக்கண்டு ரசித்தேன். இந்துக்கோவில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை என்று மாறுமென்று தெரியவில்லை. வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றதற்கு நன்றி.

  ReplyDelete
 14. நன்றி வெங்கட்.
  **
  ராம்வி : மிக்க மகிழ்ச்சி. நன்றி
  **
  கோவி. கண்ணன். பதிவெழுதுவதில் உள்ள நல்ல விஷயம் இது மாதிரி புது விஷயங்கள் பின்னூட்டம் மூலம் அறிய பெறுவது தான். நன்றி
  **
  முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 15. மாதவா: ஏஏஏஏன் ?? :))
  **
  நன்றி மாதவி மேடம். நீங்கள் சொன்னது சரியே எடுத்து விட்டேன்
  **
  நன்றி ராம லட்சுமி
  **
  காஞ்சனா மேடம்: நன்றி
  **
  நன்றி வித்யா

  ReplyDelete
 16. உலக்ஸ்: தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வெப்சைட் வேளாங்கன்னி என்று தான் சொல்கிறது. ஆனால் விக்கி பீடியா நீங்கள் சொன்னது போல் வேலாங்கண்ணி என்கிறது. எனக்கெனவோ கன்னி என்பது மாதாவை குறிக்கும் என்பதால் அது சரி என தோன்றியது
  **

  ReplyDelete
 17. டாக்டர் வடிவுக்கரசி: நன்றி ஆம் அது நான் தான் தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி
  **
  அமைதி அப்பா : இங்கு ரயில் நிலையம் வருகிறது என்பது புது தகவல். நன்றி
  **
  மனோ மேடம்: மகிழ்ச்சி நன்றி. அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள்
  **
  சிவ குமார் : மின் விசிறி - மீன் விசிறி மிக ரசித்தேன் நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...