Tuesday, June 18, 2013

பதிவர்களின் "சார் தந்தீ...." அனுபவங்கள்...

ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறது என்று படித்தவுடன் -மனது என்னவோ போல் ஆனது. தந்தி குறித்தான அனுபவங்கள் மனதில் ஓடின

பதிவர் நண்பர்கள் தங்கள் தந்தி அனுபவங்களை இங்கு பகிர்கிறார்கள்.

"தபால் -துறையில் தந்தி அலுவலகத்தில்" பணியாற்றிய ஒரு பதிவரின் அனுபவம் - நிறையவே உள்ளதால் வியாழன் அன்று தனி பதிவாக வெளிவருகிறது


ஸ்ரீராம் (எங்கள் ப்ளாக்)

"ஸார்... தந்தி!" இந்தக் குரல் எழுப்பும் திகில் அந்தக் காலத்தில் மிக அதிகம். அகாலத்தில் வீட்டு வாசலில் அடிக்கும் சைக்கிள்மணி பெரும்பாலும் தந்தி சேவர்கர்களுடயதே என்பதால் அந்தச் சத்தமும் சிலீர் என்று அடிவயிற்றில் இறங்கும்.

"யாரோ தெரியலையே ..." இது முதல் திகில்.

பெரும்பாலும் தந்தியின் தந்தியின் வாசகங்கள் 'ஸ்டார்ட் இம்மீடியட்லி... ஸோ அன்ட் ஸோ சீரியஸ்' தான்! இப்போதெல்லாம் நம்முடைய அலைபேசியில் ஒரு எஸ் எம் எஸ் போதும். ஏன், பேசவே செய்து விடலாம். அந்தக் காலத்தில் லேண்ட் லைன் தொலைபேசி கூட மிகச் சில வீட்டில்தானே இருந்தன?

அப்படி உதவிய ஒரு சேவை, தற்சமயம் டெக்னாலஜி ,முன்னேற்றத்தால் விடைபெற்றுச் செல்வது இயற்கைதான். நன்றி சொல்லி விடை கொடுப்போம். சில நாட்களுக்கு முன்னால் பழைய மாடல் புகைவண்டி எஞ்சின் விடை பெற்றதே, அது போல! இவைகள் காலத்தின் கட்டாயம்!

இப்போதெல்லாம் நாடு இரவில் அலைபேசி அடித்தால் பயமாகத்தான் இருக்கிறது.

எங்கள் ப்ளாக்கில் கூட எங்கள் அலுவலக அனுபவங்கள் தொடரில் ஒரு தந்தி அனுபவம் பகிர்ந்திருக்கிறோம்! தலைப்பு 'சார் தந்தி' தான்!

எனக்கு இண்டர்வியூவுக்கு சென்னை வரச் சொன்ன செய்தியும், வேலை கிடைத்த செய்தியும் தந்தி மூலம்தான் வந்தது!

எங்கள் தாத்தா-அப்பா காலத்தில் நடந்த ஒரு சிறு தந்திச் சம்பவம் பற்றி...

ஒரு தீபாவளி காலையின் பட்சண, வாண வேடிக்கைக் கனவுகளைச் சிதைக்க வந்தது ஒரு தந்தி. சம்பந்தி காலமாகி விட்ட செய்தி. சம்பந்தியாச்சே...! உடனே 'கடனை-உடனை' வாங்கி ஊருக்குக் கிளம்பியிருக்கிறார் தாத்தா.

மறுநாள் ஒரு தந்தி. தாத்தா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வந்த தந்தி பீதியூட்டியது. சாவுக்குப் புறப்பட்டுச் சென்றவருக்கு என்ன ஆயிற்றோ... தொலைபேச வேண்டுமென்றால் கூட அலுவலகத்துக்குத்தான் பேச முடியும். அலுவலகம் அன்றும் அதற்கு மறுநாளும் விடுமுறை. கவலை, மற்றும் குழப்பங்களுக்கிடையே நேரம் செல்ல, அடுத்த தந்தி வந்தபோது எல்லார் இதயமும் துடிக்க மறந்தது. ஆனால் இந்த தந்தி நல்ல வேளையாக தாத்தா உடல்நலம் தேறி வீடு திரும்பிய கதையைச் சொன்னது.

இங்கு இந்தக் கதை என்றால், இதே சம்பவத்தில், தாத்தாவின் பெரிய மகன் வெளியூரில் - குன்னூரில் - வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, 'இப்போது தேவலாம், தாத்தா உடல்நிலை முன்னேற்றம், இரண்டொரு நாளில் வீடு திரும்பி விடுவார்' என்ற தந்தி (முதலில்) அவரை அடைய, அவர் அடைந்த குழப்பத்துக்கு அளவே இல்லை. முன்னர் வர வேண்டிய தந்தி எல்லாம் அப்புறம் ஒவ்வொன்றாக பின்னால் வந்து சேர்ந்தபின்தான் அவர் குழப்பம் தீர்ந்திருக்கிறது!

இன்னொரு மாமாவுக்கு ஜப்பானில் ஒரு பயிற்சி எடுக்க கொஞ்சம் (அந்தக் காலத்தில்) பெரிய தொகை தேவையாய் இருக்க, சகோதரர்களுக்கு தந்தி அடித்து உதவி கேட்டிருக்கிறார். அவர்களும் உறவு வட்டத்தில் கலந்து பேசி ஓகே சொல்லித் தந்தி அடித்தது, பயிற்சிக்கு சம்மதம் சொல்ல வேண்டிய நேரம் கடந்து கிடைத்து வெறுப்பேற்றியது!

ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு எல்லோரையும் கும்பல் கும்பலாக தந்தி கொடுக்கச் சொல்லி தந்தி ஆபீஸ் கிளர்க்குகளை வெறுப்பில் ஆழ வைத்த நேரங்கள் உண்டு.

இத்தனை எழுத்துக்கு இவ்வளவு பைசா என்ற கணக்கால் நிறைய வார்த்தைகளைச் சுருக்கி தந்தி அடிப்பது வழக்கம். அதுவும் கூடக் கொஞ்சம் குழப்பம் கொடுக்கும்.

சாதாரண தபால்காரர்கள் தீபாவளி, பொங்கலுக்கு இனாம் வாங்க வருவார்கள். தந்தி அலுவலரால்தான் இப்படி வர முடியாது! ஆனால் இவர்கள் மிகவும் வாழ்த்தப் பட வேண்டியவர்கள். செய்தியின் முக்கியத்துவம் கருதி, இரவு நேரங்களில் கூட, மழை புயல் என்று பார்க்காமல் ஒரு காலத்தில் பாதை இல்லாத ஊர்களுக்கெல்ல்லாம் கூட மிதி வண்டியில் தந்தியைச் சேர்ப்பித்தவர்கள் உண்டு.

உழவன்’ நவநீத கிருஷ்ணன்

இன்னும் சில வாரங்களில் ஜெயா தொலைக்காட்சி ஆரம்பிக்கப் பட்டுவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்த நேரம் அது. காரணம் நான் தமிழ் செய்தி வாசிப்பாளனாக தேர்ந்த்தெடுக்கப் பட்டிருந்தேன். தினமும் செய்தி வாசிக்க பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

                                               

அப்போது வந்தது ஒரு சோதனை. நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகத்தின் மேலாளர் என்னை உடனடியாக டெல்லி அலுவலகத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த வேலைதான் சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தது.

நான் என்னுடைய நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் அவரோ “மூன்று மாதமாவது நீ அங்கு வேலை பார்த்தாக வேண்டும். மூன்று மாதம் கழித்து வந்து சேர்ந்து கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு போ” என கூலாக சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்னால் அதனை மறுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டு, அதற்குப் பின்னர் யோசிக்க ஆரம்பித்தேன்.

நன் போட்ட திட்டம் என்னவென்றால், டெல்லி சென்று ஒரு பத்து நாள்கள் ஆனபின்பு, என்னுடைய வீட்டிலிருந்தே, யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை; உடனே கிளம்பி வா என தந்தி அடிக்கச் சொல்லிவிட வேண்டியதுதான் என்பதுதான்.

டெல்லி போயாச்சு. தாத்தாவுக்கு சீரியஸ்; பாட்டிக்கு சீரியஸ் எனத் தந்தி வந்தால், இதனை பொய் என நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம் வேறு. அதனால் “அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை; உடனே வா” என்றே தந்தி அடிக்க சொல்லிவிட்டேன்.

திட்டம் போட்ட படி, தந்தி வந்தது. அழுது புலம்புவது போல் நடித்து, தட்கலில் டிக்கெட் எடுத்து சென்னைக்கு வந்தேன்.

தொலைக்காட்சி ஆரம்பித்த முதல் நாளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

தந்தி சேவையை வருகிற ஜூலை 15ம் தேதியோடு நிறுத்தப் போகிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், இந்த தந்தி ஞாபகம் நினைவிற்கு வந்துவிட்டது.

ரத்னவேல் நடராசன் (ஸ்ரீ வில்லி புத்தூர் )

[-H.JPG]

நான் 1965லிருந்து தீப்பெட்டி தொழிற்சாலையில் பணி புரிகிறேன். அந்த தொழிற்சாலை வட மாநிலங்களுடன் தொடர்புடையது. அதன் வியாபாரத் தொடர்புகள் எல்லாம் தந்தி அடிப்படையில் தான்.

எங்களுக்கு பணம் வருவது தந்தி மூலம் தான் (T/T – Telegraphic Transfer). தந்தி வந்ததிலிருந்து பணம் வங்கிக்கணக்கில் வரவேண்டியது வரை தொடர்ந்து கொண்டிருப்போம். வங்கிக்கு தந்தி வரவில்லையெனில் தபால் அலுவலகத்தில் காத்திருந்து தந்தி சேவகரை தாஜா செய்து வங்கியில் சேர்ப்பது வரை செய்வோம். சில நேரம் தந்தியில் code tally ஆகாமல் போகும். திரும்ப வங்கியில் உள்ள அதிகாரிகளை பதில் கொடுக்க சொல்லி வங்கி பியூன்களை சரிக்கட்டி தந்தி உடனே ஏற்பாடு செய்வோம். Trunk Call போட்டு சென்னை தாண்டி பேசியதில்லை.

லாரி போக்குவரத்து தந்தியை நம்பித் தான். Jalgaon (Maharashtra) லிருந்து லாரி கிளம்பியவுடன் எங்கள் அலுவலகத்திற்கும், லாரி முதலாளிக்கும் தந்தி கொடுத்து விடுவார்கள். எப்போது வரும் என்ற அனுமானத்தில் லோடு தயார் செய்து வைப்போம். சில நேரம் போன் போட்டு கிடைக்காமல் திருமங்கலத்திலிருந்து ஒரு கண்டக்டர் கிளம்பி வந்து விடுவார். தந்தியும் கொடுத்து விடுவார்.

எல்லா ஊர்களிலும் எங்கு தந்தி அலுவலகம் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம். பகல் நேரங்களில் தான் தந்தி கொடுக்க முடியும்; மிகவும் பெரிய ஊர்களில் இரவுப் பணிக்கு ஆட்கள் இருப்பார்கள்.

10.8.85 இரவு ஒரு பங்குதாரர் இறந்து விட்டார். 11.8.85 காலை 5 மணிக்கு எல்லோருக்கும் போன் செய்ய வேண்டும். எங்கள் அலுவலகத்திலும், பங்குதாரர் வீட்டிலும் மின்சாரமும், போனும் போய் விட்டது. அபசகுனம் என்பார்களே – இது தான். எல்லோருக்கும் தந்தி கொடுக்க முடிவானது. தந்தி அலுவலகம் காலையில் சென்றேன். தந்தி கொடுத்து விட்டேன். தொலைபேசி அலுவலகம் (Telephone Exchange) பூட்டியிருந்தது. (தூங்கி விட்டார்கள்). தந்தி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். எங்கள் அலுவலக கணக்கில் தொலைபேசி அலுவலகத்திலிருந்து பேசலாமா என்று கேட்டேன். நல்ல மனிதர் – துயரத்தை கேட்டு ஒத்துக் கொண்டார். அங்கு சென்று எங்கள் கணக்கில் – சிவகாசி, சாத்தூர், தூத்துக்குடிக்கு போன் செய்தேன். 10 நிமிடங்களில் தொடர்பு கிடைத்தது. இது என்னைப் பொறுத்த வரை பெரிய சாதனை. அந்த நண்பருக்கு நன்றி சொல்லி, அந்த சாதனைக்காக கிட்டத்தட்ட 25 வருடங்கள் புதுவருட வாழ்த்து சொல்லி டைரி கொடுத்துக் கொண்டிருந்தேன். மிக்க நெருங்கிய நட்புடன் இருந்தேன்.

தொலைத் தொடர்பு –இப்போது உள்ள மக்களுக்கு கைபேசி இருப்பதால் முன்பு நாம் பட்ட துயரங்கள் தெரியாது. சாவுச் செய்திகள் தந்தி மூலம் தான். ஏனென்றால் தெருவுக்கு ஒரு வீட்டில் போன் இருந்தால் அதிசயம். அதனால் trunk call போட தபால் தந்தி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்; பணம் கட்டி காத்திருக்க வேண்டும். கிடைக்கலாம், அல்லது கிடைக்காமல் போகலாம். தந்தி போய்க் கொண்டாவது இருக்கும்.

மதுரைக்கு காலையில் தந்தி கொடுத்தால் 3 மணி நேரங்கள் கழித்து கிடைக்கும். அவர்கள் அது பார்த்து கிளம்பி வந்து எடுக்க மறு நாள் ஆகி விடும். இப்போது உயிர் பிரியும் போது எல்லோருக்கும் தகவல் போய் விடுகிறது. எனவே இறுதிச் சடங்குகள் சீக்கிரம் முடிந்து விடுகிறது.

கிராமங்களுக்கு தந்தி செல்ல படி கட்ட வேண்டும்; விடுமுறையென்றால் டெலிவரி ஆகாது.

எங்கள் வியாபார அனுபவத்தில் தந்தி முக்கிய பங்கு வகித்தது. New technology overtakes previous one. It”s Ok. தொலைபேசித் தொடர்புகளும் எளிதில் கிடைக்காது. எங்கள் மேனேஜர் லாரி ஏற்பாடு செய்வதற்காக காலை 9 மணிக்கு சிவகாசி கிளம்புவார் (20 KM). நாங்கள் 10 மணிக்கு Trunk Call சிவகாசிக்கு போடுவோம். அவர் 11 மணிக்குள் ஏற்பாடு செய்தால் லாரி விபரம் தெரிந்து கொள்ள. சில நேரம் கிடைக்கும், சில நேரம் கிடைக்காது. அவர் 1 மணிக்கு வந்து விடுவார்; வந்த உடன் call ஐ cancel செய்து விடுவோம்.

எங்கள் குஜராத் பார்டி வருவார். கன்யாகுமரி செல்வதற்கு முன் call போடுவார். அவர் வர 3 நாட்கள் ஆகும். அப்பவும் கிடைக்காது. கான்சல் செய்து விடுவார். இப்போது இருப்பவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

ரிஷபன்

‘ஸார் தந்தி’ என்றாலே தந்தி அடிக்கிற சுபாவம் தான் பெரும்பாலும் அந்த நாட்களில். நல்ல விஷயத்திற்கு தந்தி வராது என்றே முடிவு கட்டிய புத்தியும் பக்கத்து வீட்டுக்காரர்களும் நிரம்பிய சூழல்.

சிறுகதைப் போட்டியில் பரிசு என்று எனக்கு வந்ததற்கே .. தந்தியைப் பிரித்து படிப்பதற்குள்.. தற்கால சீரிய்ல பெண்மணிகள் போல.. மாலை மாலையாய் கண்ணீர் விட்டுக் கொண்டு (அது ஏன் மாலை.. மாலையாய்.. ஈவ்னிங் சீரியல் என்பதாலா !) கும்மியடித்தவ்ரகள் அது பரிசுதான் என்று தெரிந்ததும் இன்னும் சோகமாய் அழுதது வேறு கதை !

பெயர்க் குழப்பத்தில் (சாவுத் தந்தி) வேறு யாரையோ நினைத்துக் கொண்டு அங்கே போய்ப் பார்த்தால் அன்னார் உயிரோடு இருந்ததில்.. ‘அப்போ நீ போகலியா’ என்று அசடு வழிந்த தருணங்களும் உண்டு.

’ஸ்டார்ட் இம்மீடியட்லி’ என்கிற தந்தி வராத வீடுகள் உண்டோ ?! நம்மை பரபரப்பாக்குகிற மாய வார்த்தைகளின் சொந்தக்காரர் தந்திக்காரர் அல்லவா..

தந்தி வார்த்தைகளைத் தப்பாகப் புரிந்து கொண்டு.. பின்னர் சரியான அர்த்தம் கிடைக்கும்போது வருகிற நிம்மதி.. பக்கத்து வீட்டு பாட்டியம்மாவிடம் தந்திக்காரர் மாட்டி விழித்ததையும்.. ‘எனக்கு என்ன தெரியும் பாட்டியம்மா.. அவங்க அனுப்பினதை படிக்கிறேன்..’ ‘கட்டேல போறவனே.. ஒழுங்கா படிடா’ இன்னபிற சணடைகள் அப்புறம் ஓய்ந்து வந்தவருக்கு பக்‌ஷீஷும் மோரும் கொடுத்து அனுப்பி.. தபால்.. தந்தி துறையும் மக்களும் உறவு முறையில் இருந்த பொற்காலம் !

’நாளை வருகிறேன்’ ‘தேர்வில் பாஸ்’ ‘கல்யாணம் செட்டில்டு’ இப்படி பல சுப செய்திகள் தாங்கிய தந்திகள் வந்திருந்தாலும் அடிமனதில் தந்திக்கு கொடுத்த இடம் ‘இன்னார் காலமானார்’ தான்.. இன்று தந்தியே காலமாகிறது.. தந்தி அடிக்க முடியவில்லை அதைச் சொல்ல !

14 comments:

 1. தந்தியால் இப்படி எதும் கெட்ட செய்திகள் எங்க வீட்டுக்கு வந்து நான் பார்க்கலை.., ஆனா, தந்தி நிறைய வந்திருக்கு..,

  ReplyDelete
 2. ஊருக்கு கொஞ்சநாள் போகாம இருந்ததாலே, அம்மாவுக்கு சீரியஸ் என்று எங்க அண்ணன் எனக்கு மும்பைக்கு தந்தியனுப்பி [[பொய்]] ஊருக்கு வர வச்சது இப்போதும் காமெடியா சொல்லி சிரிப்போம்.

  ReplyDelete
 3. Thanthi enrathum Rajaji pethikku pEr vaiththu asigal anuppiya nigazhvu ninaivukku varugirathu! Ippothu thevaippadatha onrai iniya ninaivukalodu vidai koduppom!

  ReplyDelete
 4. தந்தி அனுபவங்கள் ஒவ்வொன்னும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த காலம்.


  தந்தி இந்தியாவில் போனாலும் நியூஸியில் நாங்கள் தந்தியை விடமாட்டோம். குளிரில் பற்களே தந்தியடிக்குதே!!!!!

  ReplyDelete
 5. எங்க வீடுக்கு தந்தியே வந்தது இல்ல

  ReplyDelete
 6. சே... இப்படி ஜூலை 15-வோட தந்தி சேவை முடியும்-ன்னு தெரிஞ்சிருந்தால் என் திருமணத்திற்கு வந்த வாழ்த்து தந்தியெல்லாம் சேகரிச்சு வச்சிருந்திருக்கலாம்.. சுமார் 20 - 30 தந்திகள் வந்தன..... தந்தி சுமந்து வந்த தபால்காரருக்கு இனாமாக நிறைய கொடுத்ததாக நினைவு.

  விமானப்படையில் சேர அழைப்பு வந்ததும் தந்தி மூலம்தான்....

  ReplyDelete
 7. தந்தி என்றாலே... லப் டப்..... இருந்தது.

  நாங்கள் வசித்தது கிராமம் .தந்தி கொடுப்பதாக இருந்தாலும் ஒருமைல் தள்ளியுள்ள தபால் ஆபீஸ் இல்தான் கொடுக்கவேண்டும். சைக்கிளில் செல்வார்கள். அது எல்லாம் ஒருகாலம்.

  இங்கும் நிறுத்த எண்ணுகிறார்கள்.

  ReplyDelete
 8. தந்தி சேவை நிறுத்தப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. இப்பொழுது எல்லாம் கார்டு, இன்லண்ட் கவர் ஆகியவை விற்பனை எல்லாமே வெகுவாக குறைந்து போயிற்று.

  எல்லாமே எஸ்.எம்.எஸ். ஆக இருக்கையில் கார்டு யாரேனும் எழுதுகிறார்களோ என்று எனக்கொரு சந்தேகம்.

  அண்மையில், என்னுடன் நாகையில் 1977 முதல் 1979 வரை கூட வேலை பார்த்த நண்பர் ஒருவர், அவர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அவரது நண்பர்கள் எல்லோருக்கும், ஒரு ஐநூறு அனுப்புவார். இந்த 78 வயதிலும் கையால் வாழ்த்துக்கள் எழுதி அனுப்புகிறார்.

  நான் ஒய்வு பெற்று 12 வருடமாகிறது. அவர் ஒய்வு பெற்று 18 வருடமாகிறது. இந்த வருடமும் எனக்கு கார்டில் வாழ்த்து வந்தது.

  இந்த கார்டாவது தொடர்ந்து நிலைக்கவேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. கார்டு இன்லண்ட் பார்த்த/ எழுதிய ஆனந்தம் இப்போது மிஸ்ஸிங்.


   இந்த கார்டாவது தொடர்ந்து நிலைக்கவேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

   இந்த வரி என்னை உலுக்கி விட்டது !

   Delete
 9. தந்தி - தினத்தந்தி அல்ல - Telegraph பற்றிய திரு மோகன் குமார் அவரின் தொகுப்புகள்; பேட்டி மாதிரி நிறைய நண்பர்களின் அனுபவத்தை வாங்கி கொடுத்திருக்கிறார், நானும் இருக்கிறேன். இது வித்தியாசமான முயற்சி.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Mohan Kumar எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்.
  தலைப்பு:
  பதிவர்களின் சார் தந்தீ...அனுபவங்கள்.

  ReplyDelete
 10. என் பார்வையில் இதைப்பற்றி நானும் எழுத இருக்கிறேன்

  ReplyDelete
 11. திருச்சியில் வேலை கிடைத்ததும் ஒரு பொய்த் தந்தி மூலம்தான் முன்பு பார்த்த கம்பெனியை விட முடிந்தது எனக்கும் !

  ReplyDelete
 12. தந்தி அனுபவங்கள் சுவாரஸ்யமாக உள்ளன.....விஞ்ஞான முன்னேற்றத்தால் விடைகொடுத்த பல விஷயங்களுக்கு நடுவில் தந்தி சேவையும் இடம் பெறுகிறது...

  ReplyDelete
 13. சுவையான தந்தி அனுபவங்கள்! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என இப்போ தொலைபேசினால் சதாரணமாகத் எடுத்துக்கொள்ளும் மனசு அப்போதெல்லாம் ’அம்மா சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லி’ என்ற் தந்தியால் வெலவெலத்து,பட படத்திருக்கிற்து

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...