Friday, June 28, 2013

சமையலில் உள்ள சங்கடங்கள் -நீயா நானா நிகழ்ச்சி- ஒரு பார்வை

நீயா நானா ப்ரோமோ-வில் சமையலில் உள்ள சங்கடங்கள் என்பது தான் தலைப்பு என்று தெரிந்தவுடன் ஹவுஸ் பாஸ் " அவசியம் இந்த நிகழ்ச்சி பார்க்கணும் " என சொல்லி வந்தார்.
ஒரு பக்கம் - சமையல் செய்வது அவசியமே என சொல்லும் பெண்கள் (இவர்கள் பெரும்பாலும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்கள்) ; இன்னொரு பக்கம் - வேலைக்கும் சென்று கொண்டு சமையலும் செய்வது ரொம்ப கஷ்டம் என சொல்லும் இளம் பெண்கள் (அந்த அணியிலும் ஓரிரு வயதானவர்கள் இருந்தனர்)

இருவர் சொன்ன கருத்துகளிலும் ஒப்பு கொள்ள தக்க விஷயங்கள் நிறையவே இருந்தன..

ஒரு பெண்மணி சொன்னது :

"ஒவ்வொரு வேளைக்கும் சமைக்கணும் என்பது பெரும் கஷ்டமா இருக்கு. அதிலும் என் வீட்டு காரர் நைட்டு சாப்பாடு வைக்கும் போதே " நாளைக்கு என்ன சாப்பாடு ? " என கேட்பார். செம கடுப்பா வரும். அதை விடிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம் என்பேன். 2 நாள் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஊருக்கு போகலாம்னா அப்ப கூட குழம்பு, காய் எல்லாம் தயார் பண்ணி பிரிட்ஜில் வச்சிட்டு போகணும் " ( ஹீ ஹீ ... இந்த ரெண்டும் எப்பவும் அய்யாசாமியும் செய்து வாங்கி கட்டி கொள்வார் )

வேலைக்கு போகும் பெண்மணி ஒருவரின் கருத்து

" சமையலுக்கு ஆள் வச்சிட்டேன். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைக்குது. பசங்க கூடவும் கணவர் கூடவும் நேரம் செலவு செய்ய முடியுது. ஒரு காபி குடிச்சிகிட்டு டிவி பார்க்க முடியுது. ஆபிசில் இருந்து வந்த உடனே அப்படியே சோர்வுடன் கிச்சனில் நுழையும் அவசியம் இல்லை. குழந்தை பசியா இருக்குமே என்று கவலை பட வேணாம். சமையல் செய்யும் பெண்மணி ஏதாவது செய்து தந்திருப்பார் "

(இந்த பெண்ணை எதிர் அணியில் பலரும் எதிர்க்க - அவர் இந்த கருத்தை பின் சொன்னார் )

" சமையலுக்கு ஆள் இருப்பதால் ஏழரை எட்டுக்கேல்லாம் வேலை முடிஞ்சிடுது; அதனால் பசங்களை சீக்கிரம் தூங்க வச்சிட்டு கணவரோட நேரம் செலவு செய்ய முடியுது. நாமளே எல்லாம் செஞ்சிட்டு போனா - அவர் "அது வேணும்னு கேட்டா, மனசு உடம்பு ரெண்டும் சோர்வா இருக்கிறதால் நோ -ன்னு சொல்ல கூடும். இப்போ அந்த பிரச்சனை இல்லை "

ரொம்ப காம்ப்ளிகேட் விஷயத்தை பூடகமா - ஆங்கிலத்தில் சொன்னார் அவர்.

எதிரணியில் ஒரு பெண்மணி யோசித்து விட்டு இப்படி பதில் சொன்னார் : " உங்களுக்கு உங்க கணவரை மயக்க ஒரு விஷயம் தான் (உடல் !) இருக்கு. எனக்கு 2 விஷயம் இருக்கு. (சமையல் + உடல் !)

அடேங்கப்பா ! நம்ம அறிவு ஜீவிகள் எல்லாம் இதுக்கு எப்படி வேண்ணா கருத்து சொல்லலாம் ! ஆனா அவர் சொன்னதில் நிச்சயம் ஓரளவு உண்மை இருக்கவே செய்யுது !

பெண்கள் சமையல் அவசிய செய்யணும் என சொன்ன பெண்கள் இப்படி கூறினர் :
## சமையல் கட்டு என்பது நம்ம ராஜ்ஜியம்; கோட்டை. அது நமக்கே நமக்கான இடம்ங்கிற பீலிங் வரும். அதை எப்படி விட்டு கொடுக்க முடியும்?

** சமையல் என்பது ஒரு பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீப். அது ஒரு கிரியேட்டிவ் அனுபவம்

## நேரத்தை பிளான் பண்ணி செய்தால் சமையலை நிச்சயம் ஈசியா முடிக்கலாம். குறிப்பா காலை நேரம் - ஒரு மணியில் எல்லா சமையல் வேலையும் முடிச்சிடலாம்

** இப்படி சமையல் அவசியம் என்று சொன்ன அதே பெண்களிடம் " உங்கள் மகள்களுக்கு சமையல் சொல்லி தந்து விட்டீர்களா? " என்று கேட்டதற்கு அனைவரும் கற்று தரலை என்றே ஒருமித்து கூறினர் ! " படிக்கிறா; அதுவே பெரிய கஷ்டம். இது வேறயா? "

" சமையல் கட்டுக்கு வந்தா, அங்கேயே உட்கார வச்சிடுவாங்க அவ முன்னேற முடியாது நான் தான் கஷ்டப்பட்டேன் அவளாவது வேலைக்கு போகட்டும்" என்று பேசினர் சமையலை ஆதரித்த அதே பெண்கள் !

****
விருந்தினராக வந்த தமிழ் செல்வனுக்கு ஏனோ உட்கார சீட் தரவே இல்லை. அவர் ஆண்கள் சமைப்பதன் அவசியம் பற்றி ஒரு புத்தகமே எழுதிருக்காராம் ! அவர் சொன்னது :

" சமையல் என்கிற விஷயம் நிச்சயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இருவருமே அதை செய்யணும். ஆனால் முக்கால் வாசி ஆண்கள் அந்த காலம் தொட்டு சமையலில் அதிகம் உதவலை. கணவன் மார்கள் மட்டும் உருப்படியா ஏதும் செய்யாம - சும்மா உலாத்தி வந்திருக்காங்க. "

நான் அப்படித்தான் செய்யுறேன், காலை நேரம் நான் தான் சமைப்பேன். மனைவியை உள்ளே கூட விடுவதில்லை நாங்கள் சார்ந்துள்ள தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் - ஆண்கள் அனைவரும் சமையலில் பெரிதும் உதவ வேண்டும் என்று முடிவெடுத்து செயல் படுத்தியும் வருகிறோம் "

" குழம்பு வைப்பது, காய் செய்வது இவற்றை விட, மேல் வேலைகள் தான் வீட்டில் அதிகம் இருக்கும். அவற்றையும் சேர்த்து பெண்கள் செய்வது மிக மிக கஷ்டமான விஷயம் "

" ஆண் கண்டிப்பா சமைக்கணும். வெறும் உதவி என்று சொல்லி தப்பிக்க கூடாது. பெண்களை கிட்சன் பக்கமே விடாமல் முழுதும் சமைக்கிற அளவு ஆண்கள் கற்று கொள்ளணும் "
****
சரி இதில் நம் கருத்து + வேலைக்கு செல்லும் தம்பதியான நம்ம அனுபவம் எப்படி இருக்கு ?

வருடம் 365 நாளும் - 3 வேளையும் சமைக்கணும் என்பது பெண்கள் மேல் ஏற்றிய சிலுவை மாதிரி தான். (வாரம் ஒரு முறை ஹோட்டலில் வாங்கலாம் ; அது ரொம்ப ரொம்ப சின்ன அளவே; )

பல ஆண்களை சமைக்க தெரியாமலே அம்மாக்கள் வளர்த்து விடுகிறார்கள். எனக்கு திருமணத்தின் போது அடுப்பு பற்ற வைக்க கூட தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு - ஓரளவு உதவி வருகிறேன்

நாட்கள் போக போக வீட்டு வேலையில் நான் செய்யும் உதவிகள் அதிகமாக தான் ஆகிறது . ஆனாலும் எனது பங்களிப்பு 25 % தான். 75 % மனைவி தான் செய்கிறார். காரணம் எனக்கு முழுதாய் சமைக்க தெரியாததே ! எனக்கு கற்று தரும் பொறுமையும் - வேலைக்கு செல்லும் மனைவிக்கு இல்லை. மிக மெதுவாக கற்று கொள்ளும் என்னை போன்ற ஆளை திட்டினால் " நான் எதுக்கு கத்துக்கணும். நீ திட்டுறே போ " என ஓடி வந்து விடுவேன் !

துணிகள் வாஷிங் மிஷினில் போடுவது காய வைப்பது; மடித்து வைப்பது, அயனுக்கு தந்து வாங்குவது

பெண்ணின் படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகள் - பாடம் சொல்லி தருவது - பள்ளிக்கு கூப்பிட்டால் செல்வது

வெங்காயம் - பூண்டு போன்றவை உரிப்பது ; கட் செய்வது

காலை சமையல் முடித்து விட்டால் - மூவருக்கும் எடுத்து வைத்து பேக் செய்வது
அவசரத்துக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தயார் செய்வது (மாவு ரெடியாய் இருக்கணும் !)

போன்றவையே நான் செய்யும் வேலைகள் !

இது மிக குறைவு தான் ! இன்னும் நிறைய உதவணும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ம்ம் பார்க்கலாம் ..
**********
நீயா நானாவில் வெற்றி பெறுவோரை " மஞ்ச சட்டை போட்டவருக்கு பரிசு; சிகப்பு புடவை கட்டிய பெண்மணிக்கு பரிசு " என்கிற ரீதியில் சொல்வதேன்.. பெயர் சொல்லி பரிசு தர கூடாதா என ஆதங்கப்பட்டு எழுதியது நினைவிருக்கலாம் ! இந்த எபிசோடில் பரிசு பெறுவோரை பெயர் சொல்லி அழைத்ததை காண ஆச்சரியமாய் இருந்தது ! (பெரும்பாலும் இப்போதெல்லாம் கடைசி வரை பார்ப்பதில்லை மற்ற எபிசோடில் இது தொடர்கிறதா தெரியவில்லை )
**********
இந்த எபிசொட் பார்க்காதவர்கள்க்கு முழுதாக இதோ ....

6 comments:

 1. மனைவிக்கு வீட்டில் உதவ முயற்சிக்கும் உங்களைப்போன்ற அனைத்து ஆடவர்க்கும்.. சபாஷ்! (எழுத்தாளர் பாலகுமாரன் - சமைக்கத்தெரிந்த ஆண்கள், பெண்களை மதிக்கத்தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்)

  ReplyDelete
 2. //"நான் எதுக்கு கத்துக்கணும். நீ திட்டுறே போ " என ஓடி வந்து விடுவேன்!//

  ஹா..ஹா.. ஜூப்பரு :-).

  இதை எங்கூர்ல வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாக்கு என்று சொல்வார்கள்..

  ReplyDelete
 3. வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாக்கு!

  புதியதோர் விஷயம் தெரிந்துகொண்டேன் அமைதிச்சாரல்..

  சமைப்பதில் தவறில்லை மோகன். சுலபமும் கூட!

  ReplyDelete
 4. நன்றி உமா மகிழ்ச்சி

  ஆஹா அமைதி சாரல் ; புதிய சொல்லாடல் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி

  நன்றி வெங்கட்

  ReplyDelete
 5. அப்ப யாருமே - சமையலுக்கு ஆதரவானவர்கள்கூட - ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு (வீட்டுச்)சமையல் எவ்வளவு முக்கியம் என்று பேசவேயில்லையா? :-(((

  வேலைக்குச் செல்வதே பெண்களின் முன்னேற்றம் என்கிற மிகத் தவறான எண்ணத்திலிருந்து எப்போது மக்கள் விடுபடுவரோ!!??

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...