Thursday, June 13, 2013

ஜிம் டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் Part II

ஜிம் டிரைனர் வாழ்க்கை அறியாத தகவல்கள் - முதல் பகுதி - இங்கு
***
நண்பர் மோகனுடனான நமது பேட்டி தொடர்கிறது
***
ஆணழகன் போட்டியெல்லாம் நடக்குதே.. அது பத்தி கொஞ்சம் சொல்லுங்க 

இயற்கையா உடல் பயிற்சி மட்டும் செஞ்சு எந்த ஆணழகன் போட்டியிலும் ஜெயிக்க முடியாது. சப்ளிமென்ட் உணவு சாப்பிட்டால் மட்டும் தான் ஜெயிக்க முடியும்.

ஒரு காம்பெடிஷனில் கலந்துக்கணும்னா, அதுக்கு ஆறு மாசம் தயாராகணும். அந்த 6 மாசம் சாப்பாடு, சப்ளிமென்ட் உள்ளிட்ட விஷயங்களுக்கு மட்டும் குறைஞ்சது 15,000 செலவு செய்யணும்.அந்த போட்டியில் நமக்கு பெருசா பணம் ஒண்ணும் கிடைச்சிடாது. வெறும் ஷீல்ட் மட்டும் தான் கிடைக்கும். ஆனா சர்க்கிளில் நாம ரொம்ப பிரபலம் ஆகிடுவோம். இது மாதிரி போட்டியில் ஜெயிச்சா ICF மாதிரி அரசாங்க வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

ஸ்போர்ட்ஸ் கோட்டான்னு சொல்றாங்களே.. அதில் ஜிம்மையும் எடுத்துக்குறாங்களா ?

ஆமா. நிச்சயம் சேர்த்துக்குறாங்க. என் கூட இருந்த 2 பசங்க இப்படி தான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜேப்பியார் காலேஜ்ஜில் ஒருத்தனும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்னொருத்தனும் இஞ்சினியரிங்க் சேர்ந்து படிச்சாங்க

இன்னொரு விஷயம். இந்த ஜிம் வேலைக்கு வர்ற என்னை மாதிரி ஆட்களை பார்த்தீங்கன்னா அவங்க ஸ்கூல் காலேஜில் சரியா படிக்காதவங்களா இருப்பாங்க. படிப்பு சரியா வராம தானே, இதுலேயாவது ஷைன் பண்ணுவோம்னு வந்துடுறோம் !


உங்களுக்கு இந்த வேலையாலேயே லவ் Proposal வந்திருக்கா ?

வந்திருக்கு. என் மனைவியே கூட என் உடம்பை பார்த்து தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டா

சில பேர் பழகுற விதத்தில் அவங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு நமக்கு தெரியும். ஆனா நம்ம குடும்ப சூழல் அது மாதிரி விஷயத்தில் ஈடுபடாமலே முதலில் இருந்து வச்சிடுச்சு.

இந்த தொழிலில் பொம்பளையை தொட்டான்.. அத்தோட அவன் கெட்டான். எனக்கு தெரிஞ்சு ஒரு டிரைனர் ஓஹோன்னு வந்துகிட்டு இருந்தார். அப்புறம் பொண்ணுங்க சகவாசம் வந்தது. பேரு சுத்தமா கெட்டு போச்சு. இப்ப சாப்பாட்டுக்கு வழியில்லாமல் உட்கார்ந்திருக்கார். ஒருத்தரும் வேலை குடுக்கலை.

தண்ணி, தம்மு இந்த மாதிரி பழக்கங்கள்?

யாரு சார் தண்ணி அடிக்காம இருக்கா? என்ன என்னை மாதிரி ஆளுங்க கண்ணு மண்ணு தெரியாம குடிக்க மாட்டோம். எப்பயோ பிரண்ட்ஸ் செட்டு சேர்ந்தா ஜாலியா குடிப்போம்.

நான் தம்மடிக்க மாட்டேன் சார். எனக்கு தெரிஞ்ச பெரும்பாலான ஜிம் டிரைனருங்க தண்ணி அடிப்பாங்களே ஒழிய தம் அடிக்கிற ஆட்கள் ரொம்ப ரொம்ப குறைவு

எங்களுக்கு பெரிய அடிக்ஷன் ஜிம் தான். மைண்ட் எப்பவும் இதை சுத்தி தான் இருக்கும். இதை விட பெரிய அடிக்ஷன் வேணுமா ?

ஜிம் டிரைனர் வேலையில் ஏதாவது கஷ்டங்கள்? அல்லது இதனால் நீங்க இழந்தது ஏதாவது?

(நீண்ட நேரம் யோசித்து விட்டு) எதுவுமே தோணலை .. நாங்க இதனாலே இழந்தது எதுவுமே இல்லை

உங்க குடும்பத்தில் யாரும் இதுக்கு முன்னாடி இந்த வேலை செஞ்சிருக்காங்களா?

இல்லை; நான் தான் எங்க குடும்பத்தில் முதல் ஆள். எனக்கு இப்ப ஒரே ஒரு பையன். அவனை ஜிம்முக்கு அனுப்புறேனோ இல்லையோ, நிச்சயம் ஏதாவது ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியில் ஈடுபடனும்னு சொல்லுவேன். கராத்தே, குங்க்பூ, ஜிம் இப்படி அவனுக்கு விருப்பம் இருக்க எதோ ஒண்ணு ..

ஒரு ஜிம் ஆரம்பிக்கனும்னா எவ்ளோ செலவு ஆகும்? அதுக்கு லைசன்ஸ் எதுவும் வாங்கணுமா?

ரெண்டு விதமான ஜிம் இருக்கு. சாதாரண ஜிம் வைக்கணும்னா 6 முதல் 8 லட்சம் செலவில் வைக்கலாம். இங்கே உள்ள மிஷின்ஸ் - எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாம, நிறைய மேனுவலா செய்ற மாதிரி இருக்கும். மிடில் கிளாஸ் மக்கள் மாசம் 250 ரூபா மாதிரி கட்டி இந்த ஜிம்முக்கு வருவாங்க. இவங்க யாரும் வருடாந்திர பணம்னு கட்ட மாட்டாங்க. இங்கே என்ன கான்செப்ட்னா, கம்மியான மாச பணத்தில் நிறைய மக்கள் ஜிம்முக்கு வந்து செய்ற மாதிரி வச்சிருப்பாங்க. இந்த வகையான ஜிம்முக்கு லைசன்ஸ் எதுவும் தேவையில்லை

இன்னொரு விதமான ஜிம் - பிட்நெஸ் செண்டர்ன்னு சொல்வாங்க. டிரெட்மில் துவங்கி பலவும் எலக்ட்ரானிக் பொருட்களா இருக்கும். இதை வைக்க 60 லட்சம் போல் செலவாகும். இதுக்கு கண்டிப்பா கவர்ன்மெண்ட் லைசன்ஸ் வாங்கணும். இங்கே நிறைய பேர் வருடாந்திர பணம் கட்டுவாங்க. அதில் கால் வாசி பேராவது வருடம் முழக்க வராம நின்னுடுவாங்க ஆனா முழு பணமும் முதல்லேயே வந்துடுதே

எத்தனை வயசு வரைக்கும் ஜிம் டிரைனரா இருக்கலாம்?

அனேகமா - 40 அல்லது 45 வயசு வரைக்கும் மட்டும் தான் இருக்க முடியும். வர்றவங்களும் யூத்தான ஆள் தான் டிரைனரா இருக்கணும்னு விரும்புவாங்க. சம்பளமும்,  கம்மி வயசா இருந்தா தான் கட்டுபடி ஆகும்.

இதே லைனில் தான் இருக்க போறோம்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா, 35 வயசிலேயே தனி ஜிம் வச்சி,  பசங்களை வேலைக்கு வச்சு செட்டில் ஆகிடுவாங்க.

நான் போலிஸ் வேலைக்கு போகணும்னு தான் ஜிம் போக ஆரம்பிச்சேன். அங்கே எங்க மாஸ்டர் தெரிய வந்து அவர் மூலமா பார்ட் டைமா இந்த வேலை செய்ய ஆரம்பிச்சேன்.ஜிம்முக்கு நிறைய நேரம், பணம் செலவு பண்றது பத்தி வீட்டில் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?

யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டங்க. எல்லாருக்கும் அவங்கவங்க பையன் உடம்பு மேலே அக்கறை இருக்க தானே செய்யும்? அதை நல்லா பார்த்துகிட்டா, பையன் பார்க்க ஜம்முன்னு இருந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தானே?

சிக்ஸ் பேக் சில பேர் வைக்கிறாங்களே ; அது எப்படி சாத்தியமாகுது?

காம்பெடிஷனுக்கு சொன்ன மாதிரி சிக்ஸ் பேக்கிற்கும் சப்ப்ளிமென்ட் இல்லாமல் காரியம் ஆகாது.

சிக்ஸ் பேக் வைக்க குறைஞ்சது 3 மாசம் டிரைனிங் எடுக்கணும். தினம் காலை 5 கிலோ மீட்டர் ஜாக்கிங் செய்யணும். (மாலையும் அதே போல் 5 கி மீ ஜாக்கிங்) . சாப்பாட்டு விஷயத்தில் நிறைய கெடுபிடி இருக்கு. தண்ணி, தம் ரெண்டும் தொட கூடாது.

குறிப்பிட்ட அளவு தான் தண்ணி குடிக்கணும். உடம்பில் உள்ள fat குறையணும். அது தான் இதில் முக்கியமான வேலை

ஒரு தடவை சிக்ஸ் பேக் வந்தா - அதிக பட்சம் 2 முதல் 3 மாசம் வரை வைக்கலாம். தொடர்ந்து எப்பவும் வச்சிக்க முடியாது

சப்ளிமென்ட் சாப்பிடும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சில பேருக்கு அது ஒத்துக்காம - இறக்கும் அளவு கூட கொண்டு போய் விட்டுருக்கு. எல்லா சப்லிமெண்ட்டும் , எல்லாருக்கும் ஒத்துக்காது. சரியான கைடன்ஸ் உடன் தான் சப்ளிமென்ட் எடுத்துக்கணும்


ஜிம் கொஞ்ச வருஷம் போயிட்டு, அப்புறம் போகாம விட்டுட்டா வெயிட் போட்டுடும்னு சொல்றாங்களே உண்மையா?

ஆமா. ஜிம் போகும் போது தசைகள் எல்லாம் டைட்டா இருக்கும். நீங்க ஜிம் போறதை விட்டவுடன் தசை எல்லாம் லூஸ் ஆகிடும். அதனால் கண்டிப்பா வெயிட் போடும். பார்க்கும்போதும் குண்டா தெரிவாங்க. உடம்பு வெயிட் போட்டா கூட கையெல்லாம் பார்த்தா ஜம்ம்னுன்னு இருக்கும்

ஜிம் டிரைனர்களுக்குள்ள எப்படி பிரன்ட்ஷிப் இருக்கும்?

பொதுவா எங்களுக்குள் நல்ல பிரன்ட்ஷிப் இருக்கும். எங்க பீல்டில் என்ன நடக்குது, புதுசா என்ன வந்திருக்கு, எங்கே காம்பெடிஷன், இப்போ யாரு கலக்கிகிட்டு இருக்காங்க இது மாதிரி விஷயங்கள் மத்த டிரைனர்கள் மூலம் தான் தெரிய வரும். இது மாதிரி விஷயங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா ஷேர் செஞ்சுப்போம்.

என்ன ஒண்ணு .. எங்களில் சிலர் சினிமா ஆளுங்க கிட்டேயோ, அரசியல் வாதிங்க கிட்டேயோ சேர்ந்து நல்லா சம்பாதிப்பாங்க அவங்களை பார்த்தா கொஞ்சம் பொறாமையா இருக்கும். ஆனா நேரில் நல்லா தான் பேசிப்போம்

எங்களை தள்ளி இருந்து பார்த்தா ரப் (Rough )ஆன ஆளுங்க மாதிரி தெரியும். கிட்டே வந்து பழகி பார்த்தா தான் எவ்ளோ பிரண்ட்லி ஆன ஆட்கள் நாங்கன்னு தெரியும்

இதற்குள் ஜிம்மில் ஒரு சிலர் அவர் உதவிக்காக காத்திருக்க, " கிளம்பட்டுமா சார் ? வெயிட் பண்றாங்க" என்று விடை பெற்றார் டிரைனர் மோகன் .
****
பேட்டியின் முதல் பகுதி - இங்கு
****

4 comments:

 1. இந்த தொழிலில் பொம்பளையை தொட்டான்.. அத்தோட அவன் கெட்டான்.
  >>
  இது இந்த தொழிலுக்கு மட்டுமில்ல.., எல்லா தொழிலுக்கும்தான்.., முறைதவ்றி நடந்துக்கிட்டா அவன் அத்ஹ்டோடு தலை நிமிர முடியாது,,

  ReplyDelete
 2. Anonymous10:04:00 PM

  வித்தியாசமான முயற்சி.தொடருங்கள் சகோ

  ReplyDelete
 3. நல்லதொரு மனிதர் மற்றும் அவர் ஜிம் வாழ்க்கை என இரண்டு பகுதிகளாக பேட்டி மனதைத் தொட்டது..... தொடரட்டும் பேட்டிகள்!

  ReplyDelete
 4. ராஜி: ஆம் உண்மை தான்

  நன்றி தினேஷ் சுந்தர்

  வெங்கட்: நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...