Tuesday, May 10, 2016

கம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்

மோகன் குமாராகிய நான் படித்தது BL,  ACS,  ICWA ஆகிய 3 புரபஷனல் படிப்புகள் - ஆயினும் இன்றைக்கு எனது Identity என்றால் அது ACS தான் !

கம்பனி செக்ரட்டரி என்கிற இந்த அற்புதமான கோர்ஸ் பற்றி இந்த பதிவில் அறியலாம்.

ACS என்பதன் விரிவாக்கம் என்ன? 

ACS- விரிவாக்கம் -Associate in Company Secretaryship.  டில்லியில் உள்ள கம்பனி செக்ரட்டரிஸ் ஆப் இந்தியா என்கிற மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிறுவனம் நடத்துவதே ACS என்கிற இந்த கோர்ஸ். பொதுவாக ப்ளஸ் டூவில் காமர்ஸ் க்ரூப் அல்லது  பி. காம் முடித்தவர்கள் CA, ACS அல்லது ICWA படிப்பார்கள்.  


C A விற்கும் இதற்கும் என்ன ஒற்றுமை மற்றும் வேறுபாடு? 

இரண்டு படிப்புகளும் மிக அதிகமாக காமர்ஸ் க்ரூப் படித்தோர் தேர்வு செய்வது தான். C A வில் அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட் ( Audit) ஆகியவை முக்கிய பாடங்களாக உள்ளன. ACS -ல் ஒரு நிறுவனம் பின்பற்ற வேண்டிய அனைத்து சட்டங்கள் பற்றியும் படிக்கிறார்கள். இதனால் இவர்கள் கம்பனியில் சட்ட ஆலோசகராக விளங்குகிறார்கள்.

அலுவலகத்தில் என்ன விதமான வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்? 

3 மாதம் ஒரு முறை போர்ட் மீட்டிங் நடத்துவது
வருடம் ஒரு முறை பங்குதாரர்கள் (Shareholders ) மீட்டிங் நடத்துவது
ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பனியில் நிறுவனத்திற்கு தேவையான Form களை - சமர்பிப்பது
நிறுவனம் அனைத்து சட்டங்களையும் சரியாக பின்பற்றுகிறதா என கவனிப்பது;  அது சம்பந்தமான லீகல் அட்வைஸ் நிறுவனத்தின் அனைத்து டிபார்ட் மெண்டுகலுக்கும் வழங்குவது

- இவை ஒரு கம்பனி செகரட்டரி செய்யும் சில முக்கிய வேலைகள்..

இந்த படிப்புக்கு எந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்? 

வருடம் முழுதும் ரிஜிஸ்ட்ரேஷன் நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட தேதிக்குள் ரிஜிஸ்தர் செய்தால் அடுத்து உடன் வரும் தேர்வினை எழுதலாம். அந்த தேதிக்கு பின் ரிஜிஸ்தர் செய்தால் சற்று தாமதமாக (6 மாதம் கழித்து) முதல் தேர்வை எழுத வேண்டும். அவ்வளவு தான் வித்யாசம். மற்றபடி வருடத்தின் எந்த நேரத்திலும் ரிஜிஸ்தர் செய்யலாம்.

படிப்பில் சேர எவ்வளவு மார்க் எடுத்திருக்க வேண்டும்? 

ப்ளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக பவுண்டேஷன் படிப்பிலும், டிகிரி முடித்தவர்கள் நேரடியே எக்சிக்யூடிவ் படிப்பிலும் சேரலாம். மற்றபடி படிப்பில் சேருவதற்கு எந்த வித குறைந்த பட்ச மதிப்பெண் வரையறையும் இல்லை.

யார் யார் சேரலாம்? இதில் எத்தனை நிலைகள் உள்ளன?

பிளஸ் டூ - எந்த க்ரூப் முடித்தவர்கள் வேண்டுமானாலும் -  சேரலாம். இவர்கள் பவுண்டேஷன், எக்சிகியூடிவ், புரபஷனல் என்ற மூன்று நிலைகளை பாஸ் செய்ய வேண்டும்.  டிகிரி முடித்து விட்டு சேருபவர்கள் எக்சிகியூடிவ், புரபஷனல் என்ற 2 நிலைகளை எதிர் கொண்டால் போதும்.



முதல் நிலை: பவுண்டேஷன்

ப்ளஸ் டூ படித்தவர்கள் பவுண்டேஷன் என்கிற முதல் நிலை தேர்வை எதிர் கொள்ள வேண்டும்.

இது நான்கு பரிட்சைகள் கொண்டது. ரிஜிஸ்தர் செய்து ஆறு மாதம் கழித்து வரும் பரீட்சையை  எழுதலாம்.

முழுக்க அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் - பாடத்தின் அடிப்படை விஷயங்களை நன்கு புரிந்திருந்தால் இந்த தேர்வை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

டிகிரி முடித்தோர் இந்த நிலை தேர்வை எழுத தேவை இல்லை.

இரண்டாம் நிலை: எக்சிகியூடிவ்

பவுண்டேஷன் தேர்வை பாஸ் செய்தவர்கள் மற்றும் டிகிரி முடித்தோர் இந்த இரண்டாம் நிலை தேர்வை எழுதலாம். ஏழு பேப்பர்கள் கொண்டது இந்த எக்சிகியூடிவ் நிலை. இதனை நான்கு மற்றும் மூன்று பேப்பர்களாக பிரித்து - ஜூன்/ டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுதலாம். அல்லது ஏழு பேப்பர்களையும் ஒன்றாகவும் எதிர் கொள்ளலாம்.

இந்த ஏழு பேப்பர்களையும் பாஸ் செய்த பின் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.

மூன்றாம் நிலை: புரபஷனல்

இது 9 பேப்பர்களை உள்ளடக்கியது. 3 பேப்பர்களாக பிரித்து - பிரித்தும் எழுதலாம். அல்லது 9 பேப்பர்களை சேர்த்தும் எழுதலாம்.

பவுண்டேஷன், எக்சிகியூடிவ், புரபஷனல் அனைத்து தேர்வுகளும் வருடம் இரு முறை டிசம்பர் இறுதி வாரம் மற்றும் ஜூன் முதல் வாரத்தில் நடக்கிறது.

கோர்ஸ் முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?

பெயில் ஆகாமல் பாஸ் செய்பவர்கள் பவுண்டேஷன், எக்சிகியூடிவ், புரபஷனல் என்ற 3 நிலையும் - 3 வருடத்திற்குள் முடிக்கின்றனர்.

+ 2 முடித்து விட்டு கல்லூரியில் படித்த படி, இந்த கோர்ஸ் படித்து கல்லூரியின் இறுதி செமஸ்டருக்கு முன் ACS முடித்த பலரை அறிவேன்.

எக்சிகியூடிவ், புரபஷனல் - 2 நிலைமட்டும் எனில் - பெயில் ஆகாமல் பாஸ் செய்பவர்கள் - 2 வருடத்தில் முடிக்கிறார்கள்.

பாஸ் மார்க் எவ்வளவு?

பவுண்டேஷனில் 4 பேப்பர் உள்ளது .. ஒவ்வொன்றிலும் குறைந்தது 40 மார்க்கும், 4 பேப்பர்கள் சேர்த்து 200 மார்க்கும் (அக்ரிகேட்) வாங்க வேண்டும்; இப்படி - ஒவ்வொரு பாடத்திலும் 40 மார்க்/ மொத்தமாய் 50 % வாங்கினால் தான் தேர்வை முடிக்க முடியும்; பாஸ் ஆனதாக அர்த்தம்.

இதே கண்டிஷன் தான் .. பிற நிலைகளுக்கும்.  உதாரணமாய் எக்சிகியூட்டிவ் நிலையில் 3 பேப்பர் எழுதினால் - இதே போல் ஒவ்வொன்றிலும் குறைந்தது 40 மார்க்கும். 3 பேப்பர்கள் சேர்த்து 150 மார்க் (அக்ரிகேட்) வாங்க வேண்டும்.

கல்லூரி போல் சேர்ந்து படிக்க வேண்டுமா?

இல்லை; தொலை தூர படிப்பு தான் இது. ஆன் லைன் மூலம் ரிஜிஸ்தர் செய்தால் புத்தகங்கள் போஸ்டலில் வீட்டுக்கு வந்து விடும். ஆனால் - நாமாகவே படிக்காமல் - இதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும் இடத்தில் சேர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரை படிப்பது நல்லது.

சென்னையை பொறுத்த வரை ACS இன்ஸ்டிட்யூட் நுங்கம்பாக்கத்தில் மூன்று நிலைகளுக்கும் வகுப்புகள் நடத்துகிறது.

3 நிலைகளுக்கும் தினசரி வகுப்புகளும், வார இறுதியில் மட்டும் நடக்கும் வகுப்புகளும் கூட உண்டு. 2827 9898 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு - முருகன் என்பவரிடம் வகுப்புகள் குறித்த தகவல்களை அறியலாம்.

இந்த கோர்ஸ் முடிக்க எவ்வளவு செலவாகும்?

பவுன்டேஷனில் சேர 4500 ரூபாய் கட்ட வேண்டும். பின் எக்சிகியூடிவ்., புரபஷனல் நிலைகளில் நுழையும் போது - இதே அளவு பணம் கட்டவேண்டும். தேர்வு எழுதுகையில் அதற்கான பீஸ் கட்ட வேண்டும். ஆக துவக்கம் முதல் இறுதி வரை படித்து முடிக்க அதிக பட்சம் 30,000 ரூபாய் செலவாகும். அதுவும் ஒவ்வொரு நிலையாக தான் கட்டப் போகிறோம்.

இந்த படிப்பிற்கு வேலை வாய்ப்புகள் எப்படி?

மிக சிறந்த வேலை வாய்ப்புகள் இப்படிப்பிற்கு உண்டு. கோர்ஸ் முடித்த பின் குறைந்தது 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதுவே பெங்களூர், டில்லி, மும்பை போன்ற இடங்களில் பணி புரியத் தயார் என்றால் இன்னும் அதிகமும் கிடைக்க வாய்ப்புண்டு.

5 கோடி முதலீடு செய்த எந்த நிறுவனத்துக்கும் கம்பனி செகரட்டரி அவசியம் என கம்பனி சட்டம் சொல்கிறது.

இத்தகைய கம்பனிகள் இந்தியாவில் ஏராளம் உள்ளன. மேலும் தினம் 5 கோடி முதலீட்டுக்கு மேல் பல கம்பனிகள் துவங்கப்படுகின்றன. எனவே கமபனி செகரட்டரிகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்த படிப்பு முடித்து வேலை இல்லை என்கிற நிலையில் யாரும் இருக்க மாட்டார்கள்.

வருடம் செல்ல செல்ல அனுபவத்துக்கு தகுந்த சம்பளம் உயர்கிறது. மேலும் கம்பனியில் நுழையும் போதே  மேனேஜர் என்கிற அளவில் இவர்களது பதவி இருக்கும் என்பதும் கவனிக்க படவேண்டிய ஒன்று.

கோர்ஸ் முழுதும் முடித்தால் மட்டுமே வேலை கிடைக்குமா?

பவுண்டேஷன் என்கிற முதல் நிலை முடித்த உடனே கூட ட்ரைனிங் என்கிற வேலை கிடைக்கும்.

பவுண்டேஷன் முடித்தோர் 3 வருடம் ட்ரைனிங் செல்லலாம்; எக்சிகியூடிவ் முடித்தோர் எனில் 2 வருடம் ; புரபஷனல் முடித்தோர் - 1 வருடம் ட்ரைனிங் எடுக்க வேண்டும். ப்ராக்டிசிங் கம்பனி செகரட்டரிகள் இடமோ, கம்பனிகளிலோ சேர்ந்து இந்த ட்ரைனிங் முடிக்கலாம். இந்த நேரம் அவர்களுக்கு வேலை கற்று கொள்வதுடன் ஸ்டைபண்ட்டும் கிடைக்கும்.



ட்ரைனிங் முடிப்பதற்குள் கோர்ஸ் முடித்து விட்டால் மிக நன்று. அல்லது கோர்ஸ் முடிக்கும் வரை -  ப்ராக்டிசிங் கம்பனி செகரட்டரி அல்லது நிறுவனங்களில் பணி புரிந்து விட்டு- பின் கோர்ஸ் முடித்து - மிக நல்ல வேலைக்கு செல்லலாம்.

இந்த கோர்ஸ் முடித்தவர்கள் ஆடிட்டர் போல் ப்ராக்டிஸ் செய்ய முடியுமா? 

ஆம். நிச்சயம் முடியும் !!  ப்ராக்டிசிங் கம்பனி செகரட்டரிகள் இந்தியா முழுதும் 5000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் சேவையை வழங்கி வருகிறார்கள். எந்த தொழிலையும் போல் துவக்கத்தில் சற்று சிரமம் இருந்தாலும் 2-3 ஆண்டுகளில் மிக நல்ல நிலைக்கு இவர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பல லட்சம் சம்பாதிக்கும் ப்ராக்டிசிங் கம்பனி செகரட்டரிகள் ஏராளமானோர் உள்ளனர்.

இணைய தள முகவரி?  

www.icsi.edu என்கிற இணைய தளத்தில் நீங்கள் மேலும் பல தகவல்களை வாசிக்கலாம்.


இந்த லின்க்கையும் அவசியம் வாசிக்கவும்:

https://www.icsi.edu/webmodules/Student/ProspectusExcutive040913.pdf


சென்னையில் அலுவலகம் எங்குள்ளது? 

கீழ்க்காணும் முகவரியில்  அலுவலகம் உள்ளது :

Institute of Company Secretaries of India
No: 9, Wheat Crofts Road
Nungambakkam
Chennai 34

E mail: siro@icsi.edu   Ph: 2827 9898

இது குறித்து மேலும் தகவல் தேவை எனில் நீங்கள் எனது ஈ மெயில் முகவரியான needamohan@gmail.com க்கு எழுதவும். நிச்சயம் பதில் தருகிறேன் !

*********
தொடர்புடைய பதிவு

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

6 comments:

  1. பயனுள்ள பதிவு. நன்றி மோகன்குமார்!

    ReplyDelete
  2. நல்ல தகவல். மற்றவர்களுக்கும் என்னால் முடிந்தவரை பகிர்வேன்...

    ReplyDelete
  3. நல்ல தகவல். மற்றவர்களுக்கும் என்னால் முடிந்தவரை பகிர்வேன்...

    ReplyDelete
  4. Thanks. Very good article to create awareness.

    ReplyDelete
  5. நான் +2 முடித்து 4 வருடம் ஆகின்றது நான் icwa படிக்க முடியுமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...