Thursday, June 20, 2013

போஸ்ட் ஆபிசில் பணிபுரிந்த பதிவரின் தந்தி அனுபவம் !

பதிவர் துளசி கோபால்

கிணு கிணு என்று சைக்கிள் மணியை ஒலிக்கவிட்டு தந்தி ன்னு குரல் வந்தாப்போதும் வீட்டு ஆளுங்க எல்லோரும் வாசலுக்குப் பாய்வாங்க. அக்கம்பக்கத்து சனமும் கைவேலையைப் போட்டுட்டு அப்படியே பாயும். தெருவிலே சாதாரணமா அந்த வீட்டுப்பக்கம் நடந்து போற ஆட்களும் இதுலே சேர்த்தி. சேதி என்ன ஏதுன்னு தெரியுமுன்பே வீட்டு ஆளுங்க கண்ணுலே மளமளன்னு கண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். கிழங்கட்டைகள் இருக்கும் வீடுன்னா அம்புட்டுதான்....மாரடிச்சுக்கிட்டு ஒப்பாரியை ஆரம்பிச்சுருவாங்க.

ஏன்?

தந்தி கொண்டுவரும் தபால்துறை பணியாளர் நேரடியா எமனிடம் இருந்து வர்றார் என்பது அந்தக் கால ஐ...!தீகம். சனங்களையும் சும்மாச் சொல்ல முடியாது.வர்ற தந்தி எல்லாம் போயிட்ட கேஸ்களைப் பற்றித்தான் பெரும்பாலும். ஒன்னு ரெண்டு வேணுமுன்னா..... ஃபாதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி. அப்படியும் இவுங்க அடிச்சுப்புடிச்சுப் புறப்பட்டு பஸ்ஸோ ரெயிலோ புடிச்சுப்போய்ச் சேரும்போது ஸோ அண்ட் ஸோ போய்ச் சேர்ந்துருப்பார்.

பல ஊர்களிலும் கிராமங்களிலும் தந்தி கொண்டுவரும் பணியாளரையே அதைப்பிரிச்சுப் படிச்சு விவரம் சொல்லக் கேப்பாங்க. ஆத்தாடி..... இங்கிலீசுலெல்ல எழுதி இருக்கு!

தந்தியில் வாழ்த்து அனுப்புவதெல்லாம் பிற்காலத்தில் ஆரம்பிச்சதுதான். அப்படியே மணி ஆர்டர் அனுப்பும்போதும் விரைவில் பணம்போய்ச் சேரணுமுன்னா தந்தி மணிஆர்டர்தான். இதுலேயும் பாருங்க...... பணம் 'போய்ச் சேரணுமுன்னா'...... தந்தி:-)))

துளசி டீச்சர் மணி விழாவில் 

சின்னப் பிள்ளையா வீட்டுலே கரஸ்பாண்டென்ஸ் பார்த்துக்கறது நாந்தான். ஓடிப்போய் ஒரு கார்டு வாங்கியா, இன்லேண்ட் லெட்டர் வாங்கியா, ஸ்டாம்ப் வாங்கியான்னு என்னைத்தான் விரட்டுவாங்க. தபால் ஆஃபீஸுக்குப்போனால் சட்னு வரமாட்டேன். ஒரு மூலையில் கட்டுக்கடகட... தட்டுத் தடதடன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் பாருங்க அங்கே போய் ஒருபத்து நிமிசமாவது நின்னு அந்த தனி ஆவர்தனத்தைக் கேட்டுட்டுத்தான் வருவேன். உள்ளூர் ஆஸ்பத்திரி டாக்டரம்மா வீட்டு வாரிசு என்பதால் எல்லா இடங்களிலும் நமக்கு சலுகை கொஞ்சம் அதிகம்தான். ஊர் சின்னதுதானே....

அப்போ அது மோர்ஸ் கோட் என்ற பெரிய விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது கேட்டோ:-) அதைக் கவனிச்சுக்கேக்குற அண்ணன் ஒரு ஃபாரத்துலே மடமடன்னு இங்கிலீசுலே என்னவோ எழுதுவார். ஒருமாதிரி ரோஸ் கலர் காகிதமாவும் இருந்துச்சுன்னு நினைப்பு. அதைக்கொண்டுபோய் போஸ்ட்மாஸ்டரிடம் காமிச்சுக் கையெழுத்து வாங்குனதும் தந்தி ப்யூனைக் கூப்பிட்டுக் கொடுத்தவுடன் அவர் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஓடுவார். சின்ன ஊருன்னா எல்லாரையும் எல்லாருக்கும் தெரியுமே... யாருக்கு என்ன சமாச்சாரம் தந்தியில் வந்துருக்குன்னு அவுங்க பேசறதைக் கேட்டால் போதும்.... வீட்டுக்கு மின்னலாட்டம் ஓடிவருவேன், சோக சமாச்சாரம் நம்ம வீட்டாளுங்களுக்கு ஒலிபரப்ப! ப்ரைவஸியா ஒன்னா அந்தக் காலத்துலே! அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது!

நம்ம வீட்டுக்கும் தந்தி சிலமுறை வந்துருக்கு. ஜானகி(ராமன்)மாமா போனதுக்கு வந்த தந்தி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அம்மா, 'அண்ணா'ன்ற கதறலோடு தலையில் கைவச்சுக்கிட்டு தடாலுன்னு தரையில் அப்படியே உக்கார்ந்துட்டாங்க. பெரியக்காவும் அண்ணனும் ஓடிப்போய் அம்மாவைத் தாங்கித் தண்ணி கொண்டுவந்து கொடுத்து கூடவே புலம்புனாங்க.நான்? ஆ ன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னேன். பட்ணம் போக (சென்னைப்பட்டினம்) திடுதிடுன்னு தயார் ஆகுது வீடு. அண்ணனுக்கும் அக்காவுக்கும் பள்ளிக்கூடப் பரிட்சை நேரம். அம்மா தனியாப் போயிடப்போறாங்களேன்ற பதட்டத்தில் நான். ரொம்பக் கவலைப்படவிடாமல் பையில் என்னோட கவுன்களைத் திணிச்சதைப் பார்த்ததும் சமாதானமானேன். அதெல்லாம் ஒரு தனிக்கதை..... போகட்டும்.

கால ஓட்டத்தில் நானும் வளர்ந்து, படிச்சு வேலைக்குப்போக ஆரம்பிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க! தபாலாபீஸுலே வேலை! அதுலேயும் தந்திப்பிரிவு! ஃபோனோக்ராமுன்னு ஒன்னு அப்போ இருந்துச்சு. வீட்டுலே டெலிஃபோன் வச்சுருக்கும் மக்கள் ஹாயா வீட்டுலே இருந்துக்கிட்டே தந்தி அனுப்பலாம். அவுங்க இந்த சேவைக்குன்னு இருந்த 186 எண்ணைக் கூப்பிட்டதும் நம்ம ஆஃபீஸ்லே வரிசையா இருக்கும் கேபின்களில் எந்த லைன் ஃப்ரீயோ அங்கே அந்த கால் லேண்ட் ஆகும். தொலைபேசி நம்பரை மட்டும் எடுத்துக்கிட்டு அவுங்களை ஃபோனைக் கட் பண்ணச் சொல்லிட்டு, நாங்க அவுங்க எண்ணைக் கூப்பிட்டு தந்தி சமாச்சாரத்தைக் கேட்டு எழுதிக்குவோம். கொஞ்சநாள் அவுங்க நேரடியா சமாச்சாரம் முதலிலேயே சொல்ல அதை அப்படியே எழுதிக்கிட்டு இருந்தோம். அப்புறம் சில விஷமிகள் சும்மானாச்சுக்கும் நம்ம நம்பரைக்கூப்பிட்டு பொய்த்தந்தி கொடுக்கறதும், பொண்ணுங்க குரலைக்கேட்டு வீண் அரட்டை அடிக்கறது, விதண்டாவாதம் பேசறதுன்னு அட்டூழியம் செஞ்சதால்தான் நாங்களே கூப்பிட்டு சமாச்சாரம் வாங்கும் முறை வந்துச்சு.

தந்தி மேட்டரை எழுதி முடிச்சவுடன் ( ரெண்டு கார்பன் பேப்பர் வச்சு மூணு காப்பி) கடை நிலை ஊழியர் ஒருத்தர் மூணு காப்பிகளுக்கும் டேட் ஸ்டாப் அடிச்சதும் முதல் காப்பியை டெலிப்ரிண்டர் செக்‌ஷனுக்கு அனுப்பிருவோம். மாடியில் நம்ம செக்‌ஷன் நேர் கீழே தரைத்தளத்தில் டெலிப்ரிண்டர் செக்‌ஷன்னு இருந்துச்சு அப்போ. படி இறங்கிப்போய் கொடுப்பதைவிட வேகமா அனுப்பணும் என்பதற்காக தரையில் சதுரமா வெட்டி மரத்தடுப்புகள் வச்சு பெட்டிபோல செஞ்சுருப்பாங்க. அது வழியா கீழேஅனுப்பறதுதான் வழக்கம். (கீழே வரை அந்தப் பெட்டி நீண்டுபோய் ஒரு மேஜைக்கு மேலே ஒரு ரெண்டடி உசரத்தில் முடியும். சின்ன மேன் ஹோல் மாதிரி. அதுக்குச் சரியான பெயர் எனக்குத் தெரியலை)

அங்கேயும் ஒரு க்ளாஸ் ஃபோர் ஊழியர் இருப்பார். அவர் அதைக்கொண்டுபோய் டெலிப்ரிண்டரில் வேலை செய்பவரிடம் கொடுத்ததும் தட்டச்சு செஞ்சு சமாச்சாரம் போகவேண்டிய ஊருக்குப் போயிரும். பெரிய ஊர்களில் கட்டுக்கடகட எல்லாம் அப்போ டெலிப்ரிண்டரா மாறி இருந்துச்சு.
மற்ற இரண்டு காப்பிகளில் ஒன்னு ஆஃபீஸ் ரெகார்டுக்கும் இன்னொன்னு தந்தி கொடுத்த வாடிக்கையாளருக்கும் அனுப்பப்படும்.

சாவு சமாச்சாரம், ஆபத்தான நிலையில் உயிர் ஊசலாடுதுன்ற மேட்டர் எல்லாம் ரொம்ப வராது. அப்படி வந்துட்டால் அது ட்ரிபிள் எக்ஸ் மேட்டர். உடனே சேதியை மரப்பெட்டி வழியா அனுப்பிட்டு தடதடன்னு தட்டுவோம். எமர்ஜென்ஸியாச்சே! கீழே இருக்கும் ஊழியர் கவனக்குறைவா இருந்துட்டாருன்னா வம்பில்லையோ? அதுவுமில்லாம மற்ற தந்திகள் எல்லாம் பத்து, பதினைஞ்சுன்னு கட்டுக்கட்டா சுருட்டிப்போடும்போது அவை 'தட்'ன்னு கனத்தோடு கீழே போயிரும். இது ஒத்தைப் பேப்பராச்சா..... சிலசமயம் நடுவழியிலே மாட்டிக்கிட்டு நிக்கும்! பென்சில், பேனா, டேட் ஸ்டாம்பு இப்படி எதையாவது எறிஞ்சு அதைக் கீழே தள்ளுவோம். அப்புறம் ஒரு சின்ன மூங்கில் குச்சிகூட கொண்டு வந்து வச்சுருந்தோம் எங்க செக்‌ஷனில் என்றால் பாருங்க.

வியாபாரிகள் லோடு வரலை அது இதுன்னு ஏராளமா தந்திகள் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. வார்த்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி காசு என்பதால் அவுங்க சிக்கனமா சேதி சொல்வாங்க. நமக்குத்தான் தலையும் வாலும் புரியாது. ஊருக்கு இந்த ரயிலில் கிளம்பி வரேன், ஸ்டேஷனுக்கு வா , பெண் குழந்தை பிறந்துருக்கு! பையன் பொறந்துட்டான், அரைவ்டு சேஃப்லி இப்படி சிலபல சோஸியல் சமாச்சாரங்களும் இடைக்கிடைக்கு வரும். எது வந்தா நமக்கென்ன? எழுதி அனுப்புவதோடு நம்ம வேலை முடிஞ்சது!

அடிக்கடி தந்தி கொடுக்கும் சில நபர்களின் குரல் அடையாளம் தெரியக்கூடச் செஞ்சது. அதேபோல வாடிக்கையாளர்களுக்கும் நம்ம குரல் அத்துபடி ஆச்சுன்னு வையுங்க.

ஒரு சமயம் ஒருத்தர் தந்தி சமாச்சாரம் சொல்லி முடிச்சுட்டு அனுப்புபவர் பெயர் கிருஷ்ணன் என்று சொன்னார். அப்படியே எழுதிட்டு அதை வாசிச்சுக் காமிச்சப்ப...... வெறும் கிருஷ்ணன்னா போட்டீங்கன்னார். பின்னே? வெல்லம் போட்ட கிருஷ்ணன்னு போடணுமான்னு கேட்டுட்டேன். (என்னா வாய்டீ அம்மா!) அவருக்கும் சிரிப்பு வந்துருச்சு. டென்னிஸ் கிருஷ்ணன்னு போடும்மான்னார். ஹைய்யோ!!! பிரபலத்திடமா வாயாடிட்டோமுன்னு எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை:-)))

வேலை செய்யும் எல்லோருமே லேடீஸ் என்பதால் நட்புக்கும் அரட்டைகளுக்கும் பஞ்சமே இல்லை! ஜாலியாத்தான் இருந்துச்சு. காலை 7 மணிமுதல் இரவு 9 வரை ரெண்டு ஷிஃப்ட் லேடீஸ் வேலை செய்யுமிடத்தில் இரவு 9 முதல் காலை 7 வரை நைட் ஷிஃப்ட் மட்டும் ஆண்கள் வந்து பொறுப்பேத்துக்குவாங்க.

ஒரு ஒன்னரை வருசம் கழிச்சு அப்போ தபால் தந்தி தொலைபேசித்துறைன்னு எல்லாம் ஒன்னா இருந்ததில் இருந்து தொலைபேசித்துறை தனியா பிரிஞ்சது. எங்களுக்கு தந்தியா, தொலைபேசியா எது வேணுமுன்னு ஒரு சாய்ஸ் கொடுத்தாங்க. என்னவோ ஒரு தோணல்..... எங்க செக்‌ஷனில் அஞ்சுபேர் மட்டும் தொலைபேசிக்குப் போறோமுன்னு சொல்லிட்டாங்க. அதிலே நானும் ஒருத்தி. குளத்தில் இருந்த மீனைக் கடலில் போட்டது போல! கூட்டத்தில் இருந்து பிரிஞ்சது முதலில் கஷ்டமா இருந்தாலும் அப்புறம் பழகிப்போச்சுன்னு வையுங்க.
செல்ஃபோன் காலத்தில் தந்தி அனுப்புவது குறைஞ்சுபோகத்தானே செய்யும்? அதுவும் செல் இல்லாதவன் புல் என்ற புதுமொழிக்கேற்ப எல்லோர் கையிலும் செல். குழந்தைக்கு முதல் விளையாட்டுச் சாமான் கிலுகிலுப்பையா இருந்த காலம் போயே போயிந்தி.

அரசியல் வியாதிகள்தான் தந்தி அனுப்பும் போராட்டம் என்று சொல்லி மறைமுகமா தந்தித்துறையை இதுவரை வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. இனி அவுங்க புதுப்போராட்டம் ஒன்னைக் கண்டுபிடிக்கணும். அதெல்லாம் உக்கார்ந்து யோசிச்சுருவாங்க தானே?

எது எப்படியோ..... காலப்போக்கில் காணாமல்போகும் சமாச்சாரங்களில் தந்தியும் ஒன்னாகிப் போச்சு. இனி தந்தின்னா..... அது தினத்தந்திதான் போல !

************
அந்த ஒரு தந்தி : உமா

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த என்னுடைய பெயர் உமா, என் ஆச்சி அடிக்கடி சொல்வார் ’நீ பட்டிக்காட்டுல பொறந்தே,,உனக்கு பெயர் பட்டணத்துல இருந்து தந்தியில பறந்து வந்துச்சு’-ன்னு! சித்தப்பா (அப்பாவின் தம்பி) தந்தி மூலம் ’குழந்தைக்கு உமா எனறு பெயர் வைக்கவும் “ என ஆசைப்பட ஃபிளாரன்ஸாகவோ, மேரியாகவோ அழைக்கப்பட இருந்த நான் உமா ஆகி விட்டேன்.

ஆனால் எனக்கு நினைவு தெரிந்தபின் எங்கள் வீட்டுக்கு இரண்டே தந்திதான் வ்ந்தது ஒன்று வழக்கமான் த்ந்திகளைப்போல் மாமா தவறிய செய்தியுடன் வந்த தந்தி.. அடுத்ததுதான் வாழ்க்கையில் புது அத்தியாயத்தை அதிர்ச்சி குலுக்கலோடுஆரம்பித்து வைத்த தந்தி!

நிறைந்த செல்வத்துடன் ஒரே மகளாக பிறந்த என் அம்மாவுக்கு அழகான கணவராக அப்பா, வீட்டோடு மாப்பிள்ளை! நாங்கள் 4 பெண்குழந்தைகள், கெட்டகுணமெதுவும் இல்லாத அப்பா மிகப் பெரிய வள்ளல்! பணத்தை தண்ணீராய் செலவளித்து, வியாபாரத்தில் நஷ்டம், நகைகள் அம்பேல்..கொஞ்ச்ம் கடனாகிவிட ஒருநாள் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார் கிராமத்தில் அப்பா காணவில்லை என்றால் என்ன களேபரமாகும் என்பதை சொல்லத்தேவையில்லை ஆளாளுக்குத் தேடியலைய, அம்மா ஒரு வார்த்தை பேச்வில்லை, அழவில்லை.ஆச்சி கூட அப்போது ”புள்ளை பெத்துக்கும்போதுகூட அம்மான்னு கத்தமாட்டாளே ” அப்படீன்னு அம்மாவை விமர்சித்தார்.

சரியாக 5 நாட்கள் கழித்து தேவதூதன் போலொரு தபால் ஊழியர் தந்தி கொண்டுவந்தார், வீட்டின் முன் 15, 20 மனித்ர்க்ள் கூடிவிட அம்மாவிடம் கையெழுத்து வாங்கி அவரே தந்தி வாசகத்தை மொழிபெயர்த்தார், ”நான் மெட்ராஸ் ரெட்ஹில்ஸில் இருக்கிறேன் கடித்ம் தொடர்கிறது_செல்லப்பா”
அவ்வளவுதான்,,, வீட்டுனுள் சென்ற அம்மாவை முதன்முறையாக கண்ணில் கண்ணீருடன் பார்த்தேன் சத்தமேயில்லாமல் குனிந்து அழுதுகொண்டிருந்தார்கள். 5 நாட்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர்!!!!அது ஆனந்த கண்ணீரா, ஆதங்கத்தினால் வந்த கண்ணீரா, வரிசையாக 16,14, 12, 8 வ்யதில் 4 பெண்குழந்தைகளுடன் எப்படி சமாளிப்போம் எனற ஆற்றாமையால் வந்தகண்ணீரா, இன்றுவரை பகுத்தறியத்தெரியவில்லை,எனக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும்தான் !

ஆனால் அதன்பின் அடிக்கடி அப்பா வீட்டுக்கு வந்துபோனாலும் அவரிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பாராமல் பள்ளி ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டு 4 பெண்களையும் நன்கு படிக்க வைத்து, தனிமனுஷியாக அனைவருக்கும் திருமணமும் செய்து வைத்தார் .

அதுவரை கிராமத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லாத அம்மாவை வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து கரையேற ஒரு உத்வேகம் கொடுத்த அந்த தந்தி.அப்பா சென்னையை விட்டு தனது 62 வது வயதில் வீடு திரும்பும்வரை அம்மாவின் பழைய மர அலமாரியில் பத்திரமாக இருந்தது..!

13 comments:

  1. சூப்பர்,

    நானும் பதிவு போட்டிருக்கேன்

    ReplyDelete
  2. அந்த ஒரு தந்தி : உமா
    >>
    படிக்கும்போதே நெஞ்சு கனத்தது.., அந்த தாய்க்கு என் வணக்கங்கள் சேரட்டும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி!

      Delete
  3. சத்தமேயில்லாமல் குனிந்து அழுதுகொண்டிருந்தார்கள். 5 நாட்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர்!!!!அது ஆனந்த கண்ணீரா, ஆதங்கத்தினால் வந்த கண்ணீரா, வரிசையாக 16,14, 12, 8 வ்யதில் 4 பெண்குழந்தைகளுடன் எப்படி சமாளிப்போம் எனற ஆற்றாமையால் வந்தகண்ணீரா, இன்றுவரை பகுத்தறியத்தெரியவில்லை,எனக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும்தான் !

    படிக்கும்போதே நெஞ்சு கனத்தது எனக்கும்

    ReplyDelete
  4. உமாவின் தந்தி வாசித்து ஆடிப் போயிட்டேன்:( தகப்பன் இருந்தும் இல்லாத குடும்பம் எப்படி இருந்துருக்குமுன்னு எனக்கு(ம்) நல்லாவே தெரியும். அதெல்லாம் மறக்க விரும்பும் சோகக்கதை:(

    உமாவின் அன்புத்தாய்க்கு எங்கள் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  5. பதிவர்கள் இருவரின் தந்தி அனுபவங்கள் அருமை! அதுவும் பதிவர் உமாவிற்கு வந்த தந்தி அதற்கு அவரது அம்மாவின் ரியாக்ஷன். துணிச்சலாக போராடி நான்கு பெண்களை கரையேற்றியது என நெகிழவைத்தது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சுமார் பத்து வருடங்கள் முன்புவரை தந்தி என்பது வங்கிகள் மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனையின் முதுகெலும்பாக இருந்தது. (அதாவது இண்டர்னெட் பேங்கிங் வரும்வரை). ‘கோட்’ செய்யப்பட்ட தந்தி வாசகங்கள், போய்ச்சேரும்போது தப்பும் தவறுமாக எழுத்துக்கள் இடம் மாறியிருக்கும். அதனால், அனுப்பப்பட்ட இருபதாயிரம் ரூபாய்க்குப் பதில் இரண்டு லட்சம் வரவு வைக்கப்பட்டு விடும். கண்டுபிடிக்க சில மாதங்கள் ஆகும். அதற்குள் பெற்றவர் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விடுவார். கடைசியில் பழி, சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது! பல வங்கி ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். நல்லவேளை, கணினித்துறை வளர்ச்சியால் இன்று திருப்தியான பாதுகாப்பு நிலவுகிறது. இப்படியும் ஒரு பக்கம் தந்திக்கு உண்டு என்பதற்காகச் சொன்னேன். தங்கள் கட்டுரையை ரசித்தேன். உமாவின் கட்டுரை உருக்கமானது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  7. தந்தியின் பகிர்வுகள்
    மனதில் தங்கிவிட்டன..

    ReplyDelete
  8. Anonymous7:33:00 AM

    இருவரின் தந்திக் குறித்த பகிர்வுகள் உள்ளத்தை தொட்டன. துளசி அவர்களின் தந்திக் குறித்த விவரிப்பும், உமா அவர்களின் தந்தி வாழ்வில் உணர்வுப் பூர்வமாய் கலந்திருந்ததும் சொன்ன விதமும் உள்ளத்தைக் கசிய விட்டன. விடை கூறுவோம் கால வெள்ளத்தில் மறைந்துவிட்ட தந்திக்கு.

    ReplyDelete
  9. துள்சிக்காவின் பகிர்வு கலகலப்புன்னா உமாவின் பகிர்வு நெகிழ்வு..

    ReplyDelete
  10. தந்திக்காலப் பதிவு நன்றாகவெ இருக்கிறது. துளசி உங்களுக்குத் தான் எத்தனை அனுபவம்.

    என் தந்தையும் தந்தி மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்து போஸ்ட்மாஸ்டர் பதவி அடைந்தர். இரவெல்லாம் தந்தி போய்க் கொண்டே இருக்கும்.
    வீட்டோடு அலுவலகம். அதனால் தந்தி கட்டுக்ககட எங்களுக்கெல்லாம் தாலாட்டு ஓசை.

    உமா அவர்களின் தாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
    நான்கு பெண்களைக் கரையேற்றி இருக்கிறாரே.அந்தத் துணிவுக்கும் வணக்கங்கள்.

    ReplyDelete
  11. 7-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து தபால் நிலையம் கூட்டிச் சென்று தந்தி அனுப்பும் முறை பற்றி கற்பித்தார்கள்! கொஞ்சம் புரிந்தது, நிறைய மறந்தது.. துளசி மேடம் அருமையா சுவைபட விளக்கியிருக்கிறீர்கள்,, உங்கள் அனுபவமும் அதனை விவரித்த எழுத்துநடையும் கலக்கல்!

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...