Tuesday, December 11, 2012

சென்னை பஸ் விபத்து: 6 மாணவர் மரணம் -நடந்தது என்ன?

சென்னையில் நேற்று நடந்த பஸ் விபத்தில் ஆறு பள்ளி/கல்லூரி மாணவர்கள் இறந்ததை செய்தித்தாள் அல்லது டிவியில் நீங்கள் பார்த்திருக்கலாம். சம்பவ இடத்தில் இருந்த என் நண்பர் பேசியதை அப்படியே உங்களுக்கு தருகிறேன்

OMR ரோடில் ஒரு நிறுவனத்தில் என்னோட ஆபிஸ் இருக்கு. எனது டியூட்டி நேரம் காலை 6 முதல் மதியம் 2 வரை. நேற்று காலை ஆபிஸ் போயிட்டு எட்டு மணி அளவில் கேண்டீனில் காபி குடித்து கொண்டிருந்த போது "டமார் " என்று ஒரு சத்தம். நாங்கள் கேண்டீன் வழியே எட்டி பார்த்த போது, ரோடில் ஒரு லாரியின் பின்பக்கம் பஸ்சின் பின்புறம் மோதியிருந்தது. ஒரே கூக்குரல். ஆபிசிலிருந்து பலர் இறங்கி சாலைக்கு ஓடினோம்

நாங்கள் சென்றபோது ஒரு ஷேர் ஆட்டோ பஸ் மற்றும் லாரிக்கு அருகே நின்று கொண்டிருந்தது. முதலில் அது குறுக்கே வந்ததால் தான் விபத்தோ என அந்த டிரைவரை கோபமாய் அணுகினோம். ஆனால் அவர் விபத்தில் அடிபட்டு கீழே விழுந்திருந்த பள்ளி மாணவர்களின் பேகுகளை மட்டும் தன் ஷேர் ஆட்டோவின் பின்னே போட்டு கொண்டிருந்தார் என்று தெரிந்தது. அந்த பேகுகள் எல்லாம் ரத்தம் படிந்திருந்ததால்,ஷேர் ஆட்டோ பின்புறம் முழுதும் ரத்தம்.

விபத்து நடந்தது இப்படி தான்:

நிறைய எடையுடன் கூடிய ஒரு லாரி பெருங்குடி OMR - ரோடிலிருந்து வளைந்து இன்னொரு தெரு உள்ளே நுழைந்துள்ளது. அப்போது தெரு முனையில் ஸ்பீட் பிரேக்கர் இருக்க, அதன் மேலே ஏறி தாண்ட முடியாமல் வண்டி பின் புறம் வந்துள்ளது. அதே நேரம் திருப்போரூரிலிருந்து தி. நகர் செல்லும் 591 பஸ் மிக வேகமாக வந்துள்ளது. திடீரென லாரி பின்னே வருவதை கண்ட டிரைவர் வண்டியை வலப்பக்கம் முழுதும் ஒடித்து லாரியை தாண்டி செல்ல பார்த்துள்ளார். பஸ் லாரியை பாதி தாண்டி விட்டது. ஆனால் ரிவர்சில் பின்னாலேயே வந்து கொண்டிருந்த லாரி பஸ்ஸின் பின்புறம் மோதி விட்டது. படியில் இருந்த நால்வரும் வண்டி உள்ளே இருந்த நான்கைந்து பேர் மீதும் லாரி மோதி மிக மோசமாய் காயப்படுத்தி விட்டது.

அந்த இடத்தை பார்க்கவே கொடுமையாய் இருந்தது. இரண்டு மாணவர்கள் இறந்து விட்டது அப்போதே தெரிந்தது. இன்னும் நான்கு மாணவர்கள் மிக மோசமாய் அடிபட்டிருந்தனர்.

பஸ்ஸில் வந்த கலை என்கிற ஆறாவது படிக்கும் மாணவியின் அண்ணனும் அடிபட்டு இறந்தவர்களில் ஒருவன். அவள் அண்ணனை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளிடமிருந்து அவர்கள் அம்மா போன் நம்பர் வாங்கி (அப்பா தவறி விட்டார்) எனது போனிலிருந்து பேசினேன். உங்கள் பையனுக்கு சின்ன விபத்து என்று மட்டும் தான் சொன்னேன். அதற்கே அழ ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியலை.

கொஞ்ச நேரத்தில் க்ளோப் ஆம்புலன்ஸ் வந்தது.ஏனோ 108 ஆம்புலன்ஸ் வரலை ; இந்த ஏரியா முழுதும் க்ளோப் ஆம்புலன்ஸ் தான் அதிகம் வருது என நினைக்கிறேன்.

ஸ்பாட்டுக்கு முதலில் வந்த பத்திரிகை தினத்தந்தி தான். விபத்து நடந்தவுடனே லாரி டிரைவர், பஸ் டிரைவர் ரெண்டு பேரும் ஓடிட்டாங்க. கண்டக்டரும் காணும். போலிஸ் வந்த பிறகு தான் கண்டக்டர் எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்

ஒரு பையனுக்கு மண்டையில் இருந்து ரத்தம் கொட்டிய படி இருந்தது. அவனது பேன்ட், சட்டை இரண்டும் ரத்தமாகி அப்படியே பிரம்மை பிடிச்ச மாதிரி அவன் உட்கார்ந்திருந்தான்

இறந்தவங்க பெரும்பாலும் தி. நகரில் இருக்கும் ஒரு பள்ளி மாணவர்கள். ஒரு சிலர் தரமணியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள். அதில் ஒரு பையன் அப்பா ரெண்டு வாரம் முன்னே தான் ஒரு பஸ் விபத்தில் இறந்திருக்கார் அடுத்த 2 வாரத்தில் அவங்க குடும்பத்தில் இன்னொரு சாவு !

அங்கிருந்து எல்லாரையும் லைப் லைன் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். 11 மணிக்கு மேல் வேலை கொஞ்சம் கம்மியா இருந்ததால், லைப் லைன் ஆஸ்பத்திரிக்கு போனேன். அப்போது தொகுதி எம். எல். ஏ வந்திருந்தார். நான்கு பேர் இறந்ததாக ஆஸ்பத்திரியில் கூறினர். 

படம்: நன்றி : NDTV இணையம்
ஆஸ்பத்திரியை அப்போ பார்க்க சினிமாவில் பாக்குற காட்சி மாதிரியே இருந்தது. பசங்களோட அம்மா- அப்பா வெல்லாம் கதறி அழுது கிட்டு இருந்தாங்க

இந்த விபத்து பற்றி மக்கள் பேசிக்கொண்டிருந்தது இது தான் :

பஸ்ஸில் தானாகவே மூடும் டோர் வைத்ததே படியில் யாரும் நிற்க கூடாது; கீழே விழுந்து இறக்க கூடாது என்று தான். இந்த பஸ்ஸில் அந்த டோர் இருந்தும் அதை மூடாம, படியில் தொங்க அனுமதித்துள்ளனர்.


இந்த ரூட்டில் கூட்டம் அதிகம். பஸ் மிக குறைவு. இன்னிக்கு அந்த பஸ்ஸில் ரொம்ப அதிக கூட்டம் தான். பசங்க வேணும்னு அங்கே தொங்கலை. இலவச பாஸ் என்பதால் கண்டக்டர்கள் அவர்களை கடைசியா ஏற சொல்றதும் ஒரு காரணம். காலை மாலை பள்ளி மற்றும் ஆபிஸ் நேரமாவது கொஞ்சம் அதிக பஸ் விடனும்.   பசங்களும் வண்டி உள்ளே போவதே இல்லை. படியிலேயே நிக்குறாங்க. இவங்க தோளில் பேக் மாட்டி கொண்டு நிற்பதால் , அது வெளியே தெரியும் போது வெளியே செல்லும் வாகனங்கள் கொக்கி போல பேகின் காதை இழுத்தே நிறைய பேர் விழுந்து அடி பட்டிருக்காங்க சிலர் இறந்திருக்காங்க. இன்னும் பஸ்ஸில் தொங்குவதை பள்ளி, கல்லூரி பசங்க விடுவதில்லை.

ஒரு விபத்து நடந்தா அதை மீடியா ரொம்ப ஊதி பெருசு பண்றாங்க. மதியம் ரெண்டரை மணிக்கு டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். ஒரு நியூஸ் சானலில் அது இதுன்னு பேசிட்டிருந்தாங்க.  இந்த விஷயத்தில் எப்படி விபத்தை தடுத்திருக்க முடியும்.. அரசு என்ன பண்ணிருக்க முடியும்னு தெரியலை

நாலு பேர் இறந்ததா அரசு சொல்லுது. எட்டு பேர்னு சில டிவியில் சொல்றாங்க ஒருத்தங்க குறைச்சு சொல்றாங்க. இன்னொருத்தங்க அதிகம் சொல்றாங்க. ஆறு பேர் இறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்

இது எல்லாம் முடிஞ்ச பிறகு போலிஸ் இப்போ அதே ரோடில் நின்னுக்கிட்டு புட்போர்டில் போற பசங்களை உள்ளே போங்க உள்ளே போங்க என திட்டிகிட்டு இருக்காங்க இது எத்தனை நாளைக்கோ !

40 comments:

 1. ரொம்ப கஷ்டமாக உள்ளது.முதலில் புட் போர்டில் தொங்கிக்கொண்டு இருப்பவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பஸ்ஸினுள் இடம் இருந்தால் கூட புட் போர்டில் பயணிக்கும் மாணவர்களே அதிகம்.

  ReplyDelete
 2. கொடுமை. உள்ளே போ உள்ளே போ என்று துரத்தினால் மட்டும் எங்கே போவார்கள்? பயணிகளின் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாகவும், பேருந்துகளின் எண்ணிக்கை எப்போதுமே குறைவாகவும்தான் எல்லா ரூட்டுகளிலும் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. பள்ளி நேரம் மாற்றப்பட வேண்டும்.. 8 மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு முடிவது போல..

   Delete

  2. ஸ்ரீராம் & குறை ஒன்றும் இல்லை : ஆம். நன்றி

   Delete
 3. துள்ளித்திரியும் வயது பையன்களுக்கு.. பஸ்ஸில் பள்ளி கல்லூரி செல்லும் அனைவருக்கும் தெரியும் ஓரிரு பையன்களைத்தவிர பெரும்பாலான பசங்க வேறுவழியில்லாமல் தான் இடித்து பிடித்து பஸ் பயணம் செய்கிறார்கள். ”இந்த ரூட்டில் கூட்டம் அதிகம். பஸ் மிக குறைவு. இன்னிக்கு அந்த பஸ்ஸில் ரொம்ப அதிக கூட்டம் தான். பசங்க வேணும்னு அங்கே தொங்கலை. இலவச பாஸ் என்பதால் கண்டக்டர்கள் அவர்களை கடைசியா ஏற சொல்றதும் ஒரு காரணம்.”

  பள்ளி நேரத்தில் திருத்தம் கொண்டு வரலாமே.

  ReplyDelete
 4. எவ்வளவோ குப்பைகளுக்கு செலவு செய்யும்போது தேவையான அளவு பஸ் விடுவதற்கு செலவு செய்ய ஏன் அஞ்சுகிறார்கள் என்று தெரியவில்லை. தேவையான அளவு பஸ் இருந்தால் இதுபோலெல்லாம் நடக்குமா? அரசு வெட்டி விழாக்களுக்கு செய்யும் செலவை குறைத்தாலே மிக அதிக அளவு பஸ்கள் விட முடியும். எப்போ செய்வார்களோ? பஸ் பாஸ் இருந்தால் கண்டக்டர்களுக்கு வருமானம் குறையும் என்றால் அதை அரசு சரி செய்ய வேண்டும். அதுவரை இதுபோன்ற பிரச்சனைகள் தொடரும்.

  ReplyDelete
  Replies
  1. பந்து: வெளிநாட்டில் உள்ளீர்கள் என நினைக்கிறேன். இல்லியா? இருந்தும் இங்கு நடப்பது உங்களுக்கும், உங்களை போன்ற பலருக்கும் இச்சம்பவம் பெரும் வருத்தம் தருவதை உணர முடிகிறது

   Delete
 5. என்ன செய்ய தொங்கிக்கொண்டு போகும்போது சந்தோஷமாக இருப்பதாக எண்ணுகிறார்கள், ஆனால் அது தூக்குக்கயிற்றில் தொங்குவைப்போல என்பதை ஏனோ அந்த நேரத்தில் மறுக்கிறார்கள். எப்பதான் தங்களுடைய தவறுகளை உணர்வார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. இளவயது ! வளர்ந்து, குடும்பம் வந்ததும் அந்த வயதில் அப்படி செய்தது தவறு என உணர்வார்கள் !

   Delete
 6. வருத்தமான நிகழ்வு. அந்த ரூட்களில் அதிக பஸ்களை அரசு இயக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் சுவனப்பிரியன் நன்றி

   Delete
 7. அரசுப் பேருந்துகளால் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து என சில மாதங்களுக்கு முன்பே நான் பதிவிட்டிருந்தேன் ..எச்சரித்தும் பயனில்லையே எனும்போது வருத்தமாக உள்ளது...படிக்க http://koodalbala.blogspot.com/2012/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வாசிக்கிறேன் பாலா நன்றி

   Delete
 8. வீடு திரும்பல் என்னும் உங்கள் பதிவிலே
  வீடு திரும்பாமல் போன பள்ளி மாணவர்களின்
  பரிதாபமான முடிவு மிகவும் இரங்குதற்குரியதே.

  பேருந்துகளின் வாசலில் படிகளில் தொங்கிக்கொண்டும்
  ஒரு ஸ்டாப் வந்தால் இரங்கிவிட்டுப் பின் ஓடுகையில் அதனுடன் ஓடி
  பஸ்ஸில் தொத்திக்கொள்வதும் பார்த்து பார்த்து நொந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
  இறந்து போன மாணவரின் தாய் தந்தையருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்ல இயலும் ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார்

   Delete
 9. கொடுமை:(! பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். படிகளில் நின்று பயணிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை மக்களும் உணர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலட்சுமி

   Delete
 10. ஸ்பீட் ப்ரேக்கர் சரியான இடத்தில் அமைக்கப்படாதது விபத்தின் முக்கிய காரணம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலாகுமாரன்

   Delete
 11. காலை CNN செய்தியில் சென்னையில் foot-boardஇல் தொங்கிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு என்றச் செய்தியை மட்டுமேப் பார்க்க முடிந்தது. விவரங்கள் தெரியவில்லை. இப்பொழுதுதான் விளங்கியது.

  மாணவர்கள் பொதுவாகவே படிகளில் தொங்கிக் கொண்டு தான் போவார்கள். போதிய அளவு பேருந்துகள் இல்லாதது வேறு இதை மேலும் ஒரு காரணமாகச் சொல்வதற்கு ஏதுவாகிறது. கதவை மூடாமல் இருந்ததும் தவறு. ஒவர் லோட் அடித்த லாரி, அவசரத்தில் ட்ரைவர் என்று தவறுகளை மேலும் கூறிக்கொண்டே போகலாம்.

  ஆனால், ஓரிரு வாரங்கள் (நாட்கள்!!) சற்று கவனமாக இருப்பார்கள். மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி கதைதான் நடக்கும். அதுதான், இது போன்ற தவறுகள் தொடரும் காரணம்.

  ReplyDelete
  Replies
  1. சீனி: விரிவான கருத்துக்கு நன்றி

   Delete
 12. பஸ் முழுவதும் காலியாய் இருந்தாலும் படியில் தொங்கி கொண்டு வருவதை தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.அது ஒரு பெரிய ஹீரோயசம் போல ஆகி விட்டது.ஒவ்வொரு ஸ்டாப்பிங் வரும்போதும் இறங்கி ஏறி கொண்டிருபார்களே தவிர இடம் காலி ஆனால் கூட உள்ளே வர மாட்டார்கள்.அப்படியே நடத்துனர் சொன்னாலும் மாணவர்கள் சண்டைக்கு வருவார்கள் . இது நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி சீன் கிரியேட்டர்

   Delete
 13. படிக்கும்போதே கஷ்டமாக இருக்கின்றது. பேருந்துகளின் சேவையை அதிகரிக்க வேண்டும்.படியில் பிரயாணம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் மாதேவி நன்றி

   Delete
 14. என்னதான் கண்டக்டர் திட்டினாலும் ஒரு சிலர் பஸ்சில் புட் போர்டில்தான் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. முரளி சார்: ஆம்

   Delete
 15. என்ன செய்ய..உள்ளே இடமிருந்து படியில்தொங்கினால் தவறுதான்.. ஆனால் இடமில்லாமல் தொங்கினால் விதிதான்..

  ReplyDelete
  Replies
  1. நிகழ்காலத்தில் : இது மாதிரி நேரம் தான் விதியை நம்ப தோணுது இல்லை ?

   Delete
 16. இது கொடுமை. பெற்றோர்கள், ஏழைப் பெற்றோர்கள் பாவம். ஆறிலும் சாகாலாம் நூறிலும் சாகலாம்; பதினாறில் அல்ல!
  '

  ReplyDelete
  Replies
  1. நம்பள்கி ஆம் :((

   Delete
 17. பத்திரிக்கையில் படித்தேன்! லாரி ஓவர் லோடாக வந்திருக்கிறது! அதனால்தான் அங்கு உயரத்தில் ஏறமுடியாமல் பின்னோக்கி வந்து விபத்து ஏற்படுத்தி விட்டது! படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது! என்று குறையும் இந்த வீபரீத விபத்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ்: ஆம் :((

   நன்றி

   Delete
 18. ஒரு விபத்து நடந்தது அப்புறம் யார் மேல வேணும்னாலும் பழி போடலாம்... அதனால் ஒரு லாபமும் இல்லை..
  நம்ம நாட்டை பொறுத்தவரை எந்த ஒரு உயிருக்கும் பாதுகாப்பு மிக குறைவு தான்.
  இந்த விபத்துக்கு அரசாங்கம் ஒரு வகையில காரணம் என்றாலும், பூட்போர்ட்-இல் தொங்கும் மாணவர்கள் முக்கிய காரணம். இதுபோல விபத்து இது முதல் தடவை அல்ல.. மீண்டும் மீண்டும் நடக்க காரணம், பசங்க கிட்ட இருக்கிற ஒரு துடுக்கு தனம், திமிர் இதுவும் தான்.

  இன்னைக்கு நான் செய்திதாளில் படித்தது: படியில் இருந்து உள்ளே வர சொன்ன கண்டக்டர் மற்றும் டிரைவரை கல்லூரி மாணவர்கள் அடித்து உதைத்தனர். இதுக்கு என்ன சார் பண்றது? அவங்க அவங்க பாதுகாப்பு அவங்க கைல தான் இருக்கு!!!

  பகிர்விற்கு நன்றி சார்..

  ReplyDelete
 19. படியில் தொங்கி கொண்டு வருவதை சாகசம் செய்வது போல் நினைத்துக் கொள்கிறார்கள்.....:(

  ReplyDelete
 20. மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி..

  ReplyDelete
 21. ennoda nanban indha accident ah naera paathutu rendu naal romba kashta patthu irukar... konjam paer road ah cross pann kai kaamichi irukanga.. irundhum bus driver slow pannala nu sonnar.. speed kammi panni irundha idha avoid panni irukalam ...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...