Friday, December 14, 2012

அம்மா- அப்பா - சொந்தம் இனிக்கும் இந்திய வாழ்க்கை

ண்பர்களே, இந்த தொடரை எழுதும் ஆதிமனிதன் அமெரிக்காவிலிருந்து அவரின் சென்னை நிறுவன கிளைக்கு மாற்றல் வாங்கி, தற்போது சென்னையில் செட்டில் ஆகி வருபவர்.

துவக்க கல்வியை அமெரிக்காவில் கற்று, அப்புறம் இந்தியா திரும்பி, இங்கு படிப்பும் வாழ்க்கையையும் தொடரும் போது பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் உள்ள சிரமங்களை முதல் இரு பகுதிகளில் கூறினார் :

பகுதி 1: மீண்டும் இந்திய வாழ்க்கை இனிப்பும் கசப்பும் 

பகுதி 2: இந்தியா ஏன் கசக்கிறது- பயமுறுத்தும் சாலைகள் 

அதன் தொடர்ச்சியாக இந்தியா திரும்பியதில் உள்ள நன்மைகளை கடந்த இரு பகுதிகளாக பகிர்கிறார்


இது தான் சரி, இது தான் தவறு என்பது அவரவர் பார்வைக்கு பார்வை மாறுபடும். இங்கு சொல்வது அவர் வாழ்க்கை அடிப்படையில் மட்டுமே ! ஒவ்வொருவர் அனுபவமும் மாறக்கூடும் . இந்தியா திரும்புவதில் அவர் குடும்பம் சந்தித்த நன்மை, தீமை என இரண்டும் சொல்லி செல்கிறார் என்று தான் கருதுகிறேன். இந்த தொடரின் பிற பகுதிகளையும் சேர்த்து வாசித்தால் அவர் இரண்டு பக்கமும் சொல்லி செல்வதை கவனிக்க முடியும் !

தங்கள் புரிதலுக்கு நன்றி !
***********
அம்மா- அப்பா - சொந்தம் இனிக்கும் இந்திய வாழ்க்கை - ஆதிமனிதன் 

ன்ன தான் மனைவி குழந்தைகள் கொண்டாட்டங்கள் என வெளி நாடுகளில் நாம் வசித்து வந்தாலும், நம் நினைவுகளில் இருந்து நம்மை பெற்ற பெற்றோரை அகற்ற முடியாது. ஒரு தீபாவளி பொங்கல் பிறந்த நாள் என்று வரும் போது அவர்கள் கூட இல்லையே என்ற நினைப்பு நெஞ்சை வாட்டும்.

இப்போது பல வசதிகள் இருக்கின்றது. போன், ஈமெயில், சாட் என்று. இருந்தாலும் அவர்கள் கூட இருந்து, அவர்களோடு சேர்ந்து பெரிய குடும்பமாக
சந்தோசத்தை அனுபவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

வெளி நாட்டில் இருந்த வரை ஒவ்வொரு பண்டிகையின் போதும் என் தந்தையிடம் பேசும் போது, என்னப்பா? எப்படி போகுது பண்டிகையெல்லாம்?" என கேட்டால். "ஹ்ம்ம்..என்னவோ போகுது . நீ இல்லாதது தான் பெரிய குறை. நீ, புள்ளைங்க எல்லாம் இங்க இருந்தா தான் இன்னும் நல்லா இருக்கும். நீ எப்ப வர?" என்று தான் கேட்பார்.

சின்ன வயதில் தீபாவளிக்கு இருபது ரூபாய்க்கு பதிலாக இருபத்தி ஐந்து ரூபாய்க்கு வெடி வாங்க வேண்டும் என அவரிடம் அவரிடம் சண்டை போட்டு கையை காலை ஆட்டிக்கொண்டு அழுத போது தவறுதலாக என் கைபட்டு அவரின் வாட்ச் கீழே விழுந்ததெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கும்.



மாட்டு பொங்கல் அன்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மாடுகளுக்கு பூ, பொட்டு வைத்து சாமி கும்பிட்ட பின், கையில் ஒரு தட்டை வைத்துக்கொண்டு அதை ஒரு கையில் குச்சியை வைத்து அடித்துக்கொண்டே சத்தமாக அவருக்கு தெரிந்த பழைய பொங்கல் பாட்டை பாடியபடி எங்களையும் 'பொங்கலோ பொங்கல்னு' சத்தம் போடுங்கனு (நான் வெட்கப்பட்டுக்கொண்டு சத்தம் போட மாட்டேன்) மாடுகளை சுற்றி சுற்றி வருவார்.

இவையெல்லாம் பொங்கல் தினங்களில் மனதில் மீண்டும் மீண்டும் எழும் எண்ணங்கள் !.என்ன தான் அவர்களுக்கு வீடு, வாசல், வசதிகள் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருந்தாலும், நாமும் அவர்கள் கூடவோ அல்லது அருகிலோ இருந்து அவ்வப்போது அவர்களை சென்று பார்த்து வந்தால். அதில் கிடைக்கும் நிம்மதி, திருப்தி. இவையெல்லாம் உள்ளூரில் பல நடைமுறை

கஷ்டங்களை எதிர் கொண்டாலும், நமக்கு மனதுக்கு நிம்மதி தரும் விஷயங்கள்.

அடுத்ததாக அண்ணன்/தம்பி அக்காள்/தங்கை மற்றும் குழந்தைகளுக்கு மாமா,
சித்தப்பா, அண்ணன் தம்பி என நெருங்கிய குடும்ப உறவுகளோடு உரிமையோடு உறவோடும் சூழ்நிலை ஒரு பெரிய மகிழ்ச்சியை தருகிறது. வெளி நாடுகளில் வாழும் போது ஒரு சிலருக்கு நெருங்கிய குடும்ப உறவுகள் அங்கேயே இருப்பதுண்டு. அப்படி இருந்தால் ஓரளவு ஓகே. இங்கு வந்த பின் என் மகள் அண்ணா அண்ணா என்று என் அண்ணன் பையனிடம் பேசுவதும், அப்பா உங்களுக்கு தெரியுமா? அண்ணனுக்கு இது தெரியும் அது தெரியும் என ஒரே அண்ணன் புராணம் தான். புதிதாக அவள் அண்ணன் அக்கா என்று எல்லோருடனும் எந்த வித பார்மாலிட்டி இல்லாமல் பேசி சிரிப்பது பார்த்து எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லாம் இந்தியா தந்த சந்தோஷம்.

பெரும்பாலாவனவர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என நினைக்கிறன். அமெரிக்காவில் பொதுவாக பெயர் சொல்லித்தான் எல்லோரையும் கூப்பிடுவார்கள்.அவரவர் பெயருக்கு முன் யார் அவர் என்பதை பொறுத்து தேவையானால் முன்னே மிஸ்டர், மிஸ், அங்கிள் என்று சேர்த்து கொள்வார்கள். அதே போல் உறவினரை தவிர வேறு யாரையும் முறை வைத்து அங்கிள் ஆண்டி என்று அழைக்க மாட்டார்கள். இதை ஒன்றும் நான் தவறாக கூறவில்லை அவர்கள் கலாச்சாரம் அப்படி.

அடுத்ததாக வெரைட்டி இன் லைப். அமெரிக்காவை பொறுத்தவரை இங்கு கிடைப்பதும் பெரும்பாலும் அங்கு கிடைகிறது. அதே நேரம் இங்கு நமக்கு கிடைக்காத நான் ஏங்கும் பலவும் அங்கு கிடைகிறது. ஆனால் இவை எல்லாம் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடுகிறது. ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். மெக்சிகன், இட்டாலியன், சைனீஸ், ஜாப்பனீஸ் என்று எத்தனையோ உணவகங்கள் இருந்தாலும் செயின் ரெஸ்டாரன்ட் மற்றும் ப்ரோசஸ்ட் புட் என்பதால் ஒரு கட்டத்தில் எல்லாம் ஒரே மாதிரியாக போய் விடும்.

சாப்பாடு மட்டுமில்லை. சில நேரங்களில் நன்றாக உள்ளது என ஒரு டீ ஷர்ட் பக்கத்தில் உள்ள கடையில் நாம் வாங்கி வந்தால் அடுத்த நாள் நம் நண்பர் ஒருவரும் அதே ஷர்ட்டை அதே கடையில் வாங்கி இருப்பார். இதையெல்லாம் ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். எனக்கென்னவோ தினமும் புது புது முகங்கள், பல தரப்பட்ட கடைகள் என மிகவும் வெரைட்டி நிறைந்ததாக தான் நம்மூரை நான் எண்ணுகிறேன்.

இன்னும் வரும்..

29 comments:

  1. //வெரைட்டி நிறைந்ததாக தான் நம்மூரை நான் எண்ணுகிறேன்//
    உண்மைதான். வெரைட்டியில் நம் ஊரை அடித்துக்கொள்ளவே முடியாது!

    ஊர் திரும்புதல் என்பது மிகப்பெரிய டெசிஷன். நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொன்றாக புது புது தடைகள் வந்து கொண்டே இருக்கும். அந்த கட்டத்தில் தான் நான். ஊர் திரும்பும் கொடுப்பினை இருக்கும் என நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பந்து.

      //ஊர் திரும்புதல் என்பது மிகப்பெரிய டெசிஷன்//

      சாதாரண டென்ஷன் இல்லை. டென்ஷனோ டென்ஷன். அதை செய்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

      Delete
  2. சரியான அலசல்.....

    த.ம. 2

    ReplyDelete
  3. Anonymous7:04:00 AM

    ஆதி மனிதன் - அசத்தும் மனிதன் - தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. மாமா, சித்தப்பா, சித்தி, அத்தை, அண்ணா, அண்ணி என்று முறை வைத்து அழைப்பதில் தான் எத்தனை சுகம்...

    ReplyDelete
    Replies
    1. //மாமா, சித்தப்பா, சித்தி, அத்தை, அண்ணா, அண்ணி என்று முறை வைத்து அழைப்பதில் தான் எத்தனை சுகம்... //

      உண்மை. வேறு எந்த மொழியிலும், கலாச்சாரத்திலும் இத்தனை உறவு முறைகள் உண்டா என்பதே சந்தேகம் தான்.

      Delete
  5. //
    இங்கு வந்த பின் என் மகள் அண்ணா அண்ணா என்று என் அண்ணன் பையனிடம் பேசுவதும், அப்பா உங்களுக்கு தெரியுமா? அண்ணனுக்கு இது தெரியும் அது தெரியும் என ஒரே அண்ணன் புராணம் தான்
    //
    இது போன்றவை கிடைக்கும் போது அதற்கு முன்னால் இந்திய வாழ்கையின் சிறு சிறு இன்னல்களும் அடித்து துவைத்து விடப்படும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சத்யப்ரியன்.

      Delete
  6. பல விஷயங்கள் அலசப்பட்டுள்ளன.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முரளி.

      Delete
  7. நல்ல பதிவு....தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ். தொடருங்கள்...

      Delete
  8. பெற்றோர் மற்றும் உறவுகள் அருமைதான் கொஞ்சம் விலகி இருக்கும்வரை ... என்பதுபோல் வெளி நாட்டில் இருந்து எப்போதாவது வரும்போது உறவுகளை ரசிப்பது போல் இங்கேயே இருப்போர் ரசிப்பதில்லை என்பது என் கருத்து. தீபாவளி,பொங்கலுக்கு மட்டுமாவது உறவுகளை சென்று பார்ப்போர் குறைந்த வண்ணம் உள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. //வெளி நாட்டில் இருந்து எப்போதாவது வரும்போது உறவுகளை ரசிப்பது போல் இங்கேயே இருப்போர் ரசிப்பதில்லை //

      ஓரளவு உண்மை. பிரிவில் தானே உறவின் மகிமை தெரியும். அந்த வகையில் நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

      Delete
  9. வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் (தமிழர்களின்) மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கும் கட்டுரை. ஆதிமனிதனின் வலைப்பூ முழுவதும் படித்தபின் அவருடைய தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.

    நானும் தமிழகம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. //ஆதிமனிதனின் வலைப்பூ முழுவதும் படித்தபின் அவருடைய தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்//

      என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

      //நானும் தமிழகம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..//

      நல்ல வெயில் மழை காலங்களில் வந்து விடாதீர்கள். அப்புறம் அடுத்த பிளைட் பிடித்து விடுவோமா என எண்ண தோன்றும்.

      Delete
    2. இங்கே அடிக்கிற குளிருக்கு நம்ம ஊர் வெயில், மழை எவ்ளவோ பரவாயில்லை. கிராமத்தில் இருந்து வந்ததால் வெயில் பார்த்து பயந்தது இல்லை (சென்னை வெயில் தனி.... தார் ரோடு வெயில்).

      Delete
  10. Hi,

    I am one among your category, back to india after 5 years of london life.
    now completing my 3rd year in india.
    i dont regret my return, being with mom and dad, being with my own sister, her kid, nothing like this
    anyways there are some compromises like power cuts, roads, unhygienic conditions, but still MERA BHARATH MAHAN

    ReplyDelete
  11. சில நேரங்களில் நன்றாக உள்ளது என ஒரு டீ ஷர்ட் பக்கத்தில் உள்ள கடையில் நாம் வாங்கி வந்தால் அடுத்த நாள் நம் நண்பர் ஒருவரும் அதே ஷர்ட்டை அதே கடையில் வாங்கி இருப்பார். இதையெல்லாம் ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். எனக்கென்னவோ தினமும் புது புது முகங்கள், பல தரப்பட்ட கடைகள் என மிகவும் வெரைட்டி நிறைந்ததாக தான் நம்மூரை நான் எண்ணுகிறேன்.//

    இந்தக்கொடுமை இங்கயும்தான் நடக்குது. கூப்பன்ஸ், மேக்ஸ், ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ், வெஸ்ட்சயிட் எல்லா ஊருலயும் ஒரே மாதிரிதான் இருக்கு :) சூப்பரா ஒரு ஷார்ட் குர்த்தி போட்டிருந்தேன். அதே கலர் டிசைன் முழங்கால் வரை சுடி டாப்பாக என் ஃப்ரெண்ட் போட்டுகிட்டு வர அவங்க மும்பையில் வாங்கின கதையைச் சொன்னாங்க :(

    ReplyDelete
    Replies
    1. //இந்தக்கொடுமை இங்கயும்தான் நடக்குது//

      இங்கேயுமா? அது சரி...

      Delete
  12. அருமையான தொடர்.

    ReplyDelete
  13. பதிவு அருமை ஆதி மனிதன். மோகன் குமாருக்கும் வாழ்த்துக்கள். நல்ல பெற்றோர்கள் அமைவது வரம், அந்த வரம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் ஊர் திரும்ப நினைத்தாலும் என் பெற்றோரை நினைத்தால் அந்த திட்டம் மாறி விடும். என்னுடைய கொடுப்பிணை அப்படி.

    ReplyDelete
  14. தொடர்ந்து படித்து வ‌ருகிறேன். சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக்குடியரசில் 35 வருடங்கள் வாசம். ஆரம்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க, அதன் பின் மற்ற‌வர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க, பிறகு நம்மை நிலை நிறுத்திக்கொள்ள‌, அதன் பின், அன்பின் நிர்ப்பந்தங்களுக்காக என்று இத்தனை வருடங்கள் கடந்து வந்தாயிற்று. என்ன தான் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், ஊரெல்லாம் டெங்கு ஜுரம் தொடராக வந்து பயமுறுத்தினாலும், நம்மூரில் தலை வைத்து படுப்பதில் உள்ள‌ சுகம் ஆயிரம் வசதிகள் உள்ள‌ இடத்தில் கிடைப்பதில்லை. மண் வாசனையின் சுகம் அப்படி!

    ReplyDelete
  15. //ஊர் திரும்புதல் என்பது மிகப்பெரிய டெசிஷன்//

    Who said. I have taken that decision so many times.

    ReplyDelete
  16. வெளி நாட்டில் இருந்த வரை ஒவ்வொரு பண்டிகையின் போதும் என் தந்தையிடம் பேசும் போது, என்னப்பா? எப்படி போகுது பண்டிகையெல்லாம்?" என கேட்டால். "ஹ்ம்ம்..என்னவோ போகுது . நீ இல்லாதது தான் பெரிய குறை. நீ, புள்ளைங்க எல்லாம் இங்க இருந்தா தான் இன்னும் நல்லா இருக்கும். நீ எப்ப வர?" என்று தான் கேட்பார்.

    நிஜம் தான். அருமை.

    ReplyDelete
  17. The fundamental tragedy (in the context of inability to adjust with new milieu) comes from the early stage of our growth i.e. up to adolesence and early youth. The intellectual and social sitmili one received during these years r difficult to remove. They linger lifelong. I hav seen many persons not even losing their local diction in speaking Tamil.

    Three generations after, in the same place, here USA and the generations come from Adi Manithan, will have differently received stimili from their born milieu.

    The USA vs TN is spoken of here. But there r lot of Tamilians who refuse to come to TN prefering to spend all their life in North Indian cities like Mumbai r Delhi. Their parents too live lonely back in TN.

    All happiness is in agreeable circumstances. If the circumstances dont agree with u, better quit the place if u can. If not, sulk and suffer.

    "The reasonable man adapts himself to the world; the unreasonable one persists in trying to adapt the world to himself. Therefore all progress depends on the unreasonable man.
    "(GBS)

    Slight amendment s necy in the quote contexually. The unreasonable one persists in trying to adapt the world to himself; and fails; misery follows. It is his inability that s the rootcause. But he superimposes it onto the circumstances.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...