Saturday, December 15, 2012

கும்கி - சினிமா விமர்சனம்

கும்கி கிளைமாக்ஸ் தந்த பாதிப்பிலிருந்து வெளியே வந்து விமர்சனம் எழுத சற்று கஷ்டமாய் தான் இருக்கு. இருந்தாலும் நம் கடமையிலிருந்து வழுவ முடியுமா? வாங்க கதைக்குள்ளே போவோம்.

கதை

பழங்குடி மக்கள் வாழும் அழகான மலை கிராமம். அங்கு பயிரையும், மக்களையும் ஒரு யானை வந்து துவம்சம் செய்ய, அதை விரட்ட கும்கி யானையை வரவைக்க நினைக்கிறார்கள். ஆனால் வருவது என்னவோ மாணிக்கம் என்கிற கோயில் யானை. இதன் பாகன் தான் நம்ம ஹீரோ (விக்ரம் பிரபு-நடிகர் பிரபுவின் மகன்) ; அவருடன் தம்பி ராமையாவும், உண்டியல் என்று சொல்லப்படும் இன்னொருவரும் !

ஊருக்கு வந்த யானை வீரமான கும்கி யானை கிடையாது. ஒரு தற்காலிக ஏற்பாடே. ஆனால் ஹீரோயினை பார்த்து மயங்கி போன ஹீரோ அங்கேயே இருக்க திட்டமிடுகிறார்.

ஊரை பயமுறுத்தும் யானையை அவர் விரட்டினாரா, வேறு ஊர் மக்களை திருமணம் செய்யாத அந்த ஊரின் கட்டுப்பாட்டை மீறி ஹீரோயினை கைப்பிடித்தாரா?

நடிப்பு

விக்ரம் பிரபு நல்லதொரு அறிமுகம். உயரம், உடல் வாகு எல்லாம் பாகனுக்கு பொருந்துகிறது. காதல்& சோகம் என்கிற இரண்டே உணர்ச்சிகளுடன் இவர் கேரக்டர் செல்கிறது. காமெடி பக்கம் இவரை ஏனோ விடவில்லை. நாசர் மாதிரி இவர் மூக்கு வித்யாசம் !

லட்சுமி மேனன் - அறிமுகம் என்று டைட்டிலில் போடுகிறார்கள். சுந்தர பாண்டியனில் பார்த்ததை விட இளமையாக, மிக அழகாக மேக் அப் இன்றி ஜொலிக்கிறார். நடிக்க தெரிந்த அழகான நடிகை ! கவர்ச்சி மட்டும் காட்ட மாட்டார் போலருக்கு. ரேவதி மாதிரி வரக்கூடும் !

தம்பி ராமையா - படத்தின் கலகலப்புக்கு மொத்த குத்தகைதாரர்.

போலீசிடம் " நீங்களும் ஒரு மாமா தானே? " எனும்போதும் , டெம்போவில் யானை ஏற்றி போகும் போது பேசுவதாகட்டும் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். ஒரே பிரச்சனை முதல் பாதியில் பாதிக்கு மேல் வசனம் இவர் மைண்ட் வாய்சாகவே ஒலிக்கிறது. படம் பார்க்கும் மக்கள் அதை பெரிதாய் கவனிக்காமல் சிரித்து கொண்டிருந்தாலும் நமக்கு உறுத்தவே செய்கிறது. அட்லீஸ்ட் பெரும்பாலான டயலாக் மைண்ட் வாய்சாக இல்லாமல் அருகில் இருக்கும் இன்னொரு பையனிடம் பேசுவது போல் வைத்திருக்கலாம்.

ஹீரோயின் தந்தையாக புதிதாய் ஒருவர் மிக அருமையாய், இயல்பாய் நடித்துள்ளார்.

இசை & பாடல்கள்

அடடா ! இந்த படத்தின் முதல் பிளஸ் - பாடல்கள் ! படமாக்கப்பட்ட விதமும் கூட அழகாகவே இருக்கு .

தெளிவாய் புரிகிற பாடல் வரிகள், அழகான இசை, செம மெட்டு என பின்னி எடுத்துட்டார் இசை அமைப்பாளர் ! வெல் டன் இமான் !.

"சொல்லிட்டாளே அவ காதலை " என பாட்டு ஆரம்பிக்கும் போது தியேட்டரில் இளைஞர்கள் குதூகலிக்கிறார்கள். அந்த பாட்டு முழுதும் அற்புத அருவியும் லட்சுமி மேனனும் அசத்துகிறார்கள். சொய் சொய் தவிர மற்ற பாட்டுகளுக்கு பெரிய டான்ஸ் ஸ்டேப் இல்லை (யானை பாகனுக்கு டான்ஸ் ஆட தெரியாது : லாஜிக் ! லாஜிக் !) ; இருப்பினும் அமர்ந்த படி உடலையும் தோளையும் ஆட்டுவதிலேயே ரசிக்கும் படி தான் இருக்கு பல பாட்டில் நடன அசைவுகள் .

ஒளிப்பதிவு

சுகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் ! படம் முழுதும் பசுமை வியாபிக்கிறது. மஞ்சள் பூந்தோட்டம் ஒரு பாத்திரம் போல அழகாய் அடிக்கடி வந்து போகிறது. யானை, அருவி போன்றவற்றை பார்க்க, பார்க்க விஷுவல் ட்ரீட் தான்.

தியேட்டர் நொறுக்ஸ்

சத்யம் தியேட்டரில் வீக் எண்டு காலை காட்சிக்கு இளைஞர் பட்டாளம் அமோகம். பைக் வைக்கவே பெரிய கியூவில் பத்து நிமிட நிற்க வேண்டியுள்ளது

மால்-களில் தான் உணவு பண்டங்கள் உள்ளே அனுமதி இல்லை என்றால் சத்யமிலும் அதே கதை தான். செக் பண்ணி, உணவு பொருட்களை வெளியே எடுத்துடுறாங்க (தியேட்டர்கள் இப்படி செய்வதற்கு ஒரு பொது நல வழக்கு போடணும் பாஸ் !)

புகைப்பிடித்தல் புற்று நோயை தரும் என்பதற்கு படம் துவங்கும் முன்பும், இடைவேளையிலும் சில காட்சிகள் போட்டு காட்டுகிறார்கள். நம் பக்கத்தில் இருந்த நண்பர்க்கு இவற்றை பார்க்கவே பிடிக்கலை. திரைக்கு முதுகை காட்டி கொண்டு திரும்பி விட்டார் !

இயக்கம்


இயக்குனர் பிரபு சாலமன் திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது நான் திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்தேன். எங்கள் சட்டகல்லூரிக்கு எதிரே உள்ள அறையில் தான் அவர் தங்கியிருந்தார். இன்று உயர் நீதி மன்ற வக்கீல்களாக உள்ள என் வகுப்பு நண்பர்கள் சந்துரு, பரந்தாமன், ரவி ஆகியோர் அப்போது பிரபு சாலமனின் அறை தோழர்கள். அவர்களில் சிலர் இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளனர். இயக்குனர் சசிகுமார் பாணியில் சொல்லனும்னா, பிரபு சாலமன் என் நண்பரின் நண்பர்; எனவே எனக்கும் நண்பர் :)

இந்த படம் ஜெயிக்க நிறைய காரணம் இருக்கு. சிம்பிள் லவ் ஸ்டோரி, அற்புத பாடல்கள், அழகான ஹீரோ ஹீரோயின். நல்ல நகைச்சுவை.. ஆனால் இவ்வளவு இருந்தும் படம் வெற்றி கோட்டை தொடுமா என்றால்........................அது கேள்விக்குறி தான்.

ஒரு சினிமா பார்த்து விட்டு வந்தால், மனதை சப்பாத்தி மாவு பிசையிற மாதிரி பிசையணும் என்று நினைப்பது சரிதானா ? மைனாவில் அப்படி மனதை பிசைந்தது என்றால் அவ்வளவு வலுவான காரணம் இருந்தது. 4 நாள் ஒரு வாரம் மட்டுமே பார்த்து விட்டு காதலில் உருகுவதும், அந்த பிரிவிற்கு உயிர் போகிற மாதிரி ஒரு எமோஷனும் பல காதல்கள் பார்க்கும் சிட்டியில் மட்டுமல்ல கிராமத்திலும் எடுபடுவது சிரமம்.150 ரூபா பணம் தந்து படம் பார்க்க வருபவன் மனது நோக திரை அரங்குக்கு வருவதில்லை. மகிழ்ச்சியாய் இருக்க தான் வருகிறான்.

படத்தில் 95 % படம் பார்க்கும் மக்கள், இயக்குனர் கூடவே தான் இருக்கிறார்கள். அவர் நினைத்த நேரத்தில் சிரிக்கிறார்கள். ஒளிப்பதிவை வியக்கிறார்கள். யானைக்கு உச்சு கொட்டுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் அவர்களுக்கு கடைசியில் இயக்குனர் தருவது என்ன? மிக பெரிய அல்வா தான் ! சமீபத்தில் இப்படி 95 % வரை படத்தை ரசித்து விட்டு, கடைசியில் சே ! என சொல்லும் நிலை எந்த படத்துக்கும் வரவில்லை.

படம் முடிந்து, திரை இருளாகி "A film by Prabu Solomon " என்று போட்டதும் தான், படம் முடிந்ததை உணர்ந்து மக்கள் " அவ்ளோ தானா? " என்று ஏமாற்றமாய் கிளம்புகிறார்கள்

இப்பவும் இயக்குனர் ஒன்று செய்யலாம். ஒரே ஒரு ஷாட் வைத்தால் போதும். தனியாய் நடந்து போகும் ஹீரோவை ஹீரோயினின் அப்பா  கூப்பிட்டு " நீ இந்த ஊரில் எங்களோடே இருந்துடு " என சொல்ல, ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதாய் காட்டி முடித்தால் போதும் ! இயக்குனர் இதை மட்டும் செய்தாலே, இப்படத்தில் தயாரிப்பாளருக்கு லாபம் வரும். மாறாக " வாழ்க்கை என்பது துன்பங்களும், வலியும் நிரம்பி வழியும் பெரும் காடு; சினிமா என்றால் மனதை பிசைய வேண்டும் " என்று படக்குழுவினர் டயலாக் விட்டால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறாது ! கிளைமாக்ஸ் பற்றி முழுதாய் அறிந்தால் மக்கள் கூட்டம் குறைய துவங்கி விடும்.
********
மொத்தத்தில்:
கும்கி - ரசிக்கத்தக்க படம் -கிளைமாக்ஸ் ஏமாற்றம் தவிர்த்து ! ஒரு முறை பார்க்கலாம் !
********

நீதானே என் பொன்வசந்தம் விமர்சனம் : இங்கு

28 comments:

  1. Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  2. இப்போது வந்துள்ள படங்களில் பார்க்கலாம் லிஸ்டில் இருக்குது போல் இந்தப் படம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓரளவுக்கு உண்மை தான். முடிவை மாற்ற போகிறார்கள் என அறிகிறேன் . அப்புறம் முழுசுமே என்ஜாய் செய்யலாம்

      Delete
  3. நல்ல விமர்சனம்! சினிமா என்பது சந்தோஷப்படுத்தத்தான்! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியானதே!

    ReplyDelete
  4. ungal nanbarin nambar, ungal vimarsanathaiyum, janankalin feelingsm purinchi climaxi martinal nallathu.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி ராஜா. ஏற்கனவே நிறைய negative feedback சென்றதால் முடிவு மாற்றப்படும் போல் தெரியுது

      Delete
  5. Anonymous9:19:00 PM

    சொதப்பல் முடிவைத் தவிர இது ஒரு visual treat என்கிறீர்கள். ஓகே. எவ்வளவோ பார்த்து விட்டோம். இதையும் பார்த்து விடுவோம் :-)

    >>சத்யம் தியேட்டரில் வீக் எண்டு காலை காட்சிக்கு இளைஞர் பட்டாளம் அமோகம்.

    உங்களையும் சேர்த்துத்தானே :-) உங்களை நான் யூத் கேட்டகிரியில் தான் வைத்துள்ளேன் :-))

    >>நடிக்க தெரிந்த அழகான நடிகை ! கவர்ச்சி மட்டும் காட்ட மாட்டார் போலருக்கு. ரேவதி மாதிரி வரக்கூடும் !

    உங்களுக்கு இதில் வருத்தம் ஒன்றும் இல்லைதானே :-)

    நாளைய இயக்குனரில் மற்றவர் படங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் பிரபு சாலமன் தன் பட முடிவில் ஏன் கோட்டை விட்டு விட்டார் என்று தான் புரியவில்லை...

    அதனால் என்ன ? அவர் தான் உங்கள் நண்பரின் நண்பர் ஆகி விட்டாரே. எப்படியாவது இந்த எக்ஸ்ட்ரா ஷாட் விஷயத்தை அவர் கவனத்துக்கு கொண்டு செல்லுங்களேன்.. புண்ணியமாகப் போகட்டும் :-)

    மொத்தத்தில் நல்ல விமர்சனம்...

    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கு இதில் வருத்தம் ஒன்றும் இல்லைதானே :-)

      இதெல்லாம் பொதுவிலே கேட்டா சொல்ல முடியுமா சாரே :))

      //உங்களை நான் யூத் கேட்டகிரியில் தான் வைத்துள்ளேன் :-))

      இல்லியா பின்னே :)

      ***
      விரிவான கமண்ட்டுக்கு மிக்க நன்றி

      Delete
  6. மோகன் இது கொஞ்சம் கூட நல்லால்லே... தொடர்ந்து படம் பார்த்து விமர்சனம் எழுதுனா, படம் பார்க்க முடியாத நாங்கல்லாம் என்ன பண்றது... எப்போதோ தான் இங்கே படம் ரிலீஸ் ஆகுது. இந்த வாரம் நீதானே என் பொன் வசந்தம் ரிலீஸ்.... நாளைக்குப் போகலாம்னு இருக்கேன் நண்பரோட... :)

    வர வர அதிக படம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க.... நான் உங்க கூட டூ! :)

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்: நான் ஒரு படம் பார்த்தா, நம்ம ராசு சார் இன்னொரு படம் பார்த்தார் ரெண்டு விமர்சனமும் சேர்ந்து வந்துடுச்சு

      நீதானே பார்க்க போறீங்களா? அட்வான்ஸ் வருத்தங்கள் (நான் அந்த படத்திலிருந்து எஸ்கேப் ஆகிட்டேன் ; சமந்தாவுக்காக ஒரு முறை அந்த படம் பார்க்கலாம் போலும் )

      Delete
  7. TVR சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  8. கிளைமேக்சை உடைச்சுட்டீங்களே பாஸ்! ஆனால் உங்களை (ரசிகர்களை) இப்படி புலம்ப வைத்திருப்பதே கிளைமேக்ஸின் வெற்றிதானோ என்னவோ!

    ReplyDelete
    Replies
    1. கிளை மாக்ஸ் நிச்சயம் நான் முழுக்க சொல்லலை சார். நான் சொல்லாத நிறைய விஷயம் கிளை மாக்சில் இருக்கு. முடிவு மாற்றப்படும் என்று நேற்று நியூஸ் ஒன்று படிதேன் பார்க்கலாம் :))

      Delete


  9. // மால்-களில் தான் உணவு பண்டங்கள் உள்ளே அனுமதி இல்லை என்றால் சத்யமிலும் அதே கதை தான். செக் பண்ணி, உணவு பொருட்களை வெளியே எடுத்துடுறாங்க //

    அப்படி எடுத்ததை எல்லாம் தனித்தனியா பிரித்து ஃப்ரய் பண்ணி அலுமினியம் ஃபாயிலிலே வச்சு அதயே
    கான்டீனிலே வித்துடறாங்களாமே ? நிசமாவா ?

    // இயக்குனர் பிரபு சாலமன் திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது நான் திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்தேன். எங்கள் சட்டகல்லூரிக்கு எதிரே உள்ள அறையில் தான் அவர் தங்கியிருந்தார். இன்று உயர் நீதி மன்ற வக்கீல்களாக உள்ள என் வகுப்பு நண்பர்கள் சந்துரு, பரந்தாமன், ரவி ஆகியோர் அப்போது பிரபு சாலமனின் அறை தோழர்கள். அவர்களில் சிலர் இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளனர்//

    நானும் நினச்சேன். நமக்கும் மோஹனுக்கும் ஏதோ ஒரு காமன் டினாமினேட்டர் இருக்குபோல இருக்கே அப்படின்னு....
    நானும் திருச்சி ஜோசப் காலேஜுலே தான். ஆனா 1957 முதல் 1961 வரை. ஃபாதர் எர்ஹார்ட், ஃபாதர் கன்சால்வஸ், ஃபாதர்
    செக்வீரா, ஃபாதர் பேஸ், ப்ரொஃபசர் சூரிய நாராயண ஐயர், ப்ரொஃபசர் கால்குலஸ் ஸ்ரீனின்வாசன், ப்ரொஃபசர்
    ஃப்ரான்சிஸ் ராஜ் ( பிரிட்டோ காலனி இப்ப இருக்கிறதா கடைசி வீடு அவரது ) இவர்கள் என் ஆசிரியர்கள். ஃப்ரான்சிஸ் ராஜ்
    எழுதிய கால்குலஸ் புத்தகம் ஒரு மார்வெல். என்னுடன் படித்த சீனிவாசன் அதே கல்லூரியில் ஹெட் ஆஃப் த டிபார்ட்மென்ட் ஆனார்.
    த்வாரகாச்சாரி ஜமால் முகமதில் ப்ரொஃபசரானார். பிச்சை முகமது ( அவரது நட்பை என்னால் இன்னும் மறக்க இயலவில்லை)
    தமிழ் ப்ரொஃபசர் ஆனார்.

    என் அப்பா திருச்சியில் பிரபல அட்வகேட் ஆக இருந்தார். அந்தக் காலத்துலெ திருச்சியிலே சட்டக் கல்லூரி கிடையாது. சென்னைக்குத்
    தான் செல்ல வேண்டும். என் அப்பா என்னிடம் லா படிக்கச்சொல்லி கம்பெல் செய்ததும், எனக்கு கிடைத்த எம்.எஸ். சி. சீட்டில் நான்
    சேர இயலாமல் போனதும் நினைவுக்கு வருகிறது.

    அட டா !! கும்கியைப் பற்றிய பதிவல்லவா இது !! மறந்தே போய்விட்டேன். ராம்கி என்று ஒருவரை நினைவு இருக்கிறது.
    இது என்ன கும்கி ?



    ஆஹா... ஆகா.. லக்ஷ்மி மேனனா இவர் ! ...
    கடவுள் ரொம்பதான் கொடுமை செஞ்சுட்டார். என்ன அப்படி ஒரு தெய்வீக அழகு !!
    ஒரு அம்பது வருசத்துக்கு முன்னே இவர் புறந்து இருக்க மாட்டாரோ !!

    சுப்பு தாத்தா.
    ( கிழவி எழுந்திருக்கரதுக்கு முன்னாடி இத போஸ்ட் பண்ணிடனும் )

    ReplyDelete
    Replies
    1. சார்: லட்சுமி மேனன் பற்றிய உங்கள் குறும்பு வரிகள் மிக ரசித்தேன்

      அப்புறம் நீங்களும் திருச்சியில் படிச்சிருக்கீங்க உங்க தந்தையும் வக்கீல் ! மிக மகிழ்ச்சி !!

      ஊருக்குள் வந்து பிரச்சனை செய்யும் யானையை விரட்டும் தைரியமான இன்னொரு யானை தான் கும்கி

      Delete
  10. //நடிக்க தெரிந்த அழகான நடிகை ! கவர்ச்சி மட்டும் காட்ட மாட்டார் போலருக்கு.//என்ன ஒரு கவலை நியாமான கவலை தான் விமர்சனம் அருமை

    ReplyDelete
    Replies

    1. நன்றி பிரேம் குமார்

      Delete
  11. விமர்சனம் நன்றாக இருக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம். எனக்கு என்னவோ இப்படியான முடிவே இந்தப் படத்திற்கு சரி என தோன்றியது. ஆனால், முடிவை மாற்றப் போகிறார்கள் என கேள்விப்பட்டேன்!!! மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்! :)

    ReplyDelete
    Replies
    1. முடிவை மாற்றினால் நானும் இன்னொரு முறை பார்ப்பேன். நன்றி நண்பா

      Delete
  13. \\ பிரபு சாலமன் என் நண்பரின் நண்பர்; எனவே எனக்கும் நண்பர் :)\\ நண்பரின், நண்பரோட நண்பர் என்பதால் எனக்கும் கூட நண்பர்னு சொல்லலாமா?! சரி கிளைமேக்சை நண்பர் கிட்ட சொல்லி அவங்க மூலமா பிரபுசாலமனை மாத்திச் சொல்லலாமே!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் நண்பரின் நண்பர் : ரசித்தேன்

      Delete
  14. சார் எனக்கு ஒரு சந்தேகம்: அதென்ன தமிழ் படத்துல மட்டும் பாசிடிவ் முடிவு இருந்த தான் மக்கள் ரொம்ப விரும்பறாங்க.. கிளைமாக்ஸ் மாத்தறது அந்த காலத்துல இருந்தே தொடருது தமிழ் சினிமால.. வசந்த மாளிகை கூட தெலுங்கில் ஹீரோ இறந்து போறமாதிரி தானாம்.

    நம்ம தமிழ் மக்கள் தான் ஆன் ஸ்க்ரீன் ல மட்டும் ஜோடி சேர்களன்ன உடைஞ்சி போயிட்டு படத்தையே பார்க்க வரமாட்டேன்ராங்க!!!

    ReplyDelete
    Replies
    1. சமீரா: நன்றி. சில படங்கள் (பருத்தி வீரன், சுப்ரமணிய புறம் போன்றவை) சோக முடிவு என்றாலும் கதைக்கு அது தேவையாய் இருந்தது; வலிந்து சோக முடிவை திணிக்கும் போது தான் சற்று எரிச்சல் வருகிறது

      Delete
  15. mokkai padam.. except songs

    ReplyDelete
  16. படம் நன்றாக இருந்தது. பாடல்கள் இசை அற்புதம். காட்சிகளில் இருந்து வெளியே வர இரண்டு நாள் ஆனது.
    நகைச்சுவைதான் படு சொதப்பல். பிடிக்கவில்லை. தம்பி ராமையாவின் நடிப்பு இம்சை. சிவாஜி பேரன் அலட்டல் இல்லாத நடிப்பு, தம்பி ராமைய்யா ஓவர் அக்டிங்.இருப்பினும் இறுதியில் கண்ணீரை வரவழைத்து விட்டார் தம்பி. அவர் குணச்சித்திர நடிப்பை வழங்கினால் சிறந்த நடிகர் என்கிற பெயர் வாங்கலாம்..
    பி.கு - கும்கியை தமிழ் நாட்டில் பார்த்தேன். வித்தியாசமான அனுபவம். இடைவெளியின் போது, எல்லோரும் வெளியே சென்று டீ குடிப்பது - புதிய அனுபவம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...