Thursday, December 27, 2012

“Hobbit” : ஆங்கில சினிமா விமர்சனம்


சினிமாத்தன்மைப் படுத்துகிற திறமை -ராஜசுந்தரராஜன்

---------------------------------------------------------------
“Hobbit” நாவல் வாங்கித் தந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது. எங்கள் பாப்பா அதை வாசிக்க முயன்று கைவிட்டு விட்டாள். முதல் அத்தியாய 33 பக்க அறிமுகமும் அவ்வளவா எளிமை இல்லாத ஆங்கிலமும் காரணம் ஆகலாம். ஆகவே “ஹாபிட்” படத்துக்குப் போவதற்கு முன் அவளுக்கு அந்தக் கதையை ஓரளவுக்குச் சொன்னேன்:

பில்போ ஒரு ஹாபிட். ஹாபிட் குள்ளர்களை விடக் குட்டையாக இருப்பார்கள். காலில் முடிமுளைத்திருக்கும். அதனால் அவர்கள் நடக்கும்போது சத்தம் வராது. திருடுவதற்கு அது வசதியாக இருக்கும். குள்ளர்களுக்குத் தாடி இருக்கும். ஹாபிட்களுக்குத் தாடி இருக்காது.

குள்ளர்கள் பேராசை பிடித்தவர்கள். ஒருகாலத்தில் ‘லோன்லி ஹில்’ என்கிற மலையை ஒட்டி டேல் என்கிற நகரை அமைத்து, த்ரார் மகன் த்ரெய்ன் ஆட்சியில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்கள். ‘ஸ்மௌக்’ என்கிற ட்ராகன் அங்கே வந்து டேல் நகரை அழித்துவிட்டு, தங்கம் வெள்ளி ரத்தினங்களை ‘லோன்லி ஹில்’ அரண்மனைக்குள் குவித்து அதன் மேல் படுத்து உறங்கி வருகிறது. த்ரெய்னின் மகன் தோரின் தலைமையில், மொத்தம் 13 குள்ளர்கள் அந்த லோன்லி ஹில் மலையை அடைந்து அதிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செல்வத்தை எடுத்து வர முடிவு செய்கிறார்கள்.காண்டால்வ்ப் ஒரு மாயாவி (wizard). அவருக்கு அந்த நிலப் பகுதிகளும், மலைப் பாதைகளும், எங்கெங்கே என்னென்ன ஆபத்து இருக்கும் என்பதெல்லாம் தெரியும். குள்ளர்கள் காண்டால்வ்பின் உதவியை நாடுகிறார்கள். அவர் முடிந்தமட்டும் உதவுவதாக ஒத்துக்கொள்கிறார்.

பில்போவின் மலைப்-பொந்து-வீட்டில் சந்தித்து அவர்கள் அந்த சாகசப் பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். பில்போவுக்கு சாகசத்தில் நாட்டம் இல்லை என்றாலும் ஆர்வக் கோளாறில் ஒத்துக்கொள்கிறான். ஒரு குதிரை, பதினான்கு குள்ளக் குதிரைகளில் பயணம் தொடங்குகிறது.

மலைக்காட்டு வழியில் காண்டால்வ்ப் காணாமல் போகிறார். மழை கொட்டுகிறது. மழைநீர் ஒடையில் உணவு மூட்டைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பசியில் வாடுகிறார்கள். அப்போது எட்டத்தில் நெருப்பு வெளிச்சம் தெரிகிறது. வேவு பார்க்க பில்போவை அனுப்புகிறார்கள். அங்கே மூன்று ட்ரால்கள் (இருட்பூதங்கள்), நெருப்பில் இறைச்சி சுடுகின்றன. “நேற்றைக்கும் ஆடு; இன்றைக்கும் ஆடு; நாளைக்கும் ஆட்டுக் கறிதானா? மனுஷக்கறி தின்னு நாளாகுதே!” என்கிறது ஒரு பூதம். பில்போ பூதங்களின் ஒரு பர்ஸைக் கையாடுகிறான். அந்த பர்ஸ், “யார் நீ?” என்று சத்தம் எழுப்புகிறது. பில்போ பூதங்களிடம் மாட்டிக்கொள்கிறான். அவனைத் தேடி வரும் குள்ளர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். குள்ளர்களைச் சுட்டுச் சாப்பிடுவதா சூப் வைத்துச் சாப்பிடுவதா என்று பூதங்களுக்குள் வாக்குவாதம் வருகிறது. அப்போது காண்டால்வ்ப் அங்கே வந்து பூதங்களின் குரலில் பேசிக் குழப்பி அதுகளுக்குள் சண்டை மூட்டி, நேரத்தைக் கடத்துகிறார். விடிந்துவிடுகிறது. சூரிய ஒளி பட்டதில் பூதங்கள் பாறைகளாய் மாறிவிடுகின்றன.

பூதங்கள் தங்கி இருந்த குகையில் தேவையான உணவும், ஒரு வாளும், ஒரு குறுவாளும், ஒரு கத்தியும் கிடைக்கின்றன. வாளை காண்டால்வ்பும், குறுவாளை தோரினும், கத்தியை பில்போவும் எடுத்துக் கொள்கிறார்கள். அங்கிருந்து மலையேறி, சறுக்கி இறங்கும் ஓர் அருவிக்கரை இறக்கத்தில், யாழ்வலர் (Elves) வாழும் ரிவெண்டல் என்னும் கந்தர்வ நகரில் தங்குகிறார்கள். அந் நகரின் அரசனான எல்ரோண்ட், இவர்கள் கைப்பற்றி வந்த வாள்கள் பாதாளச் சாத்தான்களான கோபுலின்களை (goblin) அழிப்பதற்கு என்றே செய்யப் பட்டவை; கோபுலின்கள் பக்கத்தில் வந்தாலே அவை ஒளிரும் என்கிறார்.

ரிவெண்டலை விட்டுப் புறப்பட்டு, மஞ்சு மலைகளை (Misty Mountains) கடக்கிற சமையம் எதிரும் புதிருமான இடி புயல் மழையில் சிக்கிக் கொள்கிறார்கள். பாறைப் பூதங்கள் ஆவேசம் கொண்டெழுந்து, குன்றுகளைத் தகர்த்தெடுத்து வீசி அடித்துக்கொள்கின்றன. தப்பிக்க ஒரு குகைக்குள் ஒதுங்குகிறார்கள். இவர்கள் அசந்த நேரம் அந்தக் குகையின் சுவர் பிளந்து, குள்ளர்களும் குதிரைகளும் கோபுலின்களால் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். பில்போவின் கூச்சலில் விழித்துக்கொள்கிற காண்டால்வ்ப், தன் கைக்கோலில் இருந்து நெருப்பை உண்டாக்கி ஏழெட்டுக் கோபுலின்களைக் கொன்று போடுகிறார். காண்டால்வ்பை வெளியே விட்டுக் குகைச்சுவர் மூடிக்கொள்கிறது.

பாதாளத்தில், கோபுலின்களின் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. அவர்களின் தலைவன் ‘கிரேட் கோபுலின்’, தோரினின் கையில் இருக்கும் வாளைக் கண்டு, கடுப்பாகி, குள்ளர்களைச் சங்கிலியால் பிணைக்கச்செய்து அடித்து வதைக்கிறான். நெருப்பு வளர்த்து அவர்களைப் பொசுக்கப் போகையில், மறு பக்கத்தில் இருந்து உள்ளே புகும் காண்டால்வ்ப், கிரேட் கோபுலினைத் தன் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, குள்ளர்களைத் தன் பின்னால் ஓடிவரும்படி சொல்ல, தப்பித்து ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தவறி, அதள பாதாளத்தில் விழுகிறான் பில்போ.

இருட்டுக்குள் வழுக்கல் தரையில் ஊர்ந்து நகரும் பில்போவின் உடம்பில் ஏதோ தட்டுப்படுகிறது. அது ஒரு மோதிரம். அதை எடுத்துத் தன் பைக்குள் போட்டுக் கொள்கிறான். அந்த இருட்குகையின் மறுகோடியில் ஒரு ஏரி இருக்கிறது. அதன் நடுவில் ஒரு தீவு. அதில் இருந்து கரையில் இருக்கும் பில்போவைப் பார்க்கிறது கோல்லம் (Gollum). பிதுங்கித் துருத்திய கண்களும் பாசிபடிந்த வழுக்கல் உடம்பும் கொண்ட ஒரு பிராணி அது. பில்போவைப் பிடித்துத் தின்பதற்காக அது கரைக்கு வருகிறது. அவன் கோல்லத்திடம் தனக்கு வெளியே போக வழிகாட்டித் தரச் சொல்லிக் கேட்கிறான். கோல்லம் ஒரு தந்திரம் செய்கிறது. மாறி மாறி விடுகதை போட வேண்டும் என்றும், தான் ஜெயித்தால் அவன் உணவாக வேண்டும் என்றும், அவன் ஜெயித்தால் வழிகாட்டப் படுமென்றும் சொல்கிறது. பில்போ ஒத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் பில்போவுக்கு விடுகதை ஒன்றும் தோன்றாமல், “என் பைக்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டு வைக்கிறான். அதற்குப் பதில் தெரியாத கோல்லம், அவனை அவன் அறியாமல் கொல்வதற்குத் தன்னிடம் உள்ள ஒரு பொருளைத் தேடுகிறது. அது அந்த மோதிரம்தான். அதை விரலில் மாட்டிக் கொண்டால் நம் உருவம் பிறர் கண்ணுக்குத் தெரியாது. அந்த மோதிரம் தொலைந்து அதுதான் பில்போவின் பைக்குள் இருக்கிறது என்று யூகித்ததும், கோல்லம் பில்போவைத் துரத்துகிறது. பில்போவின் விரலில் தற்செயலாக அந்த மோதிரம் செருகிக்கொள்ள, அவன் காணாமல் போகிறான். கோல்லம் அவனைத் தாண்டி ஓடுகிறது. அவனுக்கு மோதிரத்தின் மகிமை புரிந்துவிடுகிறது. வெளிவாசல் துளையை மறித்து உட்காரும் கோல்லத்தின் தலைக்குமேல் தாவி, அப்பால் காவல் இருக்கும் கோபுலின்கள் கண்ணிலும் படாமல் தப்பி, மலையின் மறுபக்கம் வந்து சேருகிறான். அங்கே, அவனைத் தவறவிட்டு வந்துவிட்டோமே என்று கவலை கொண்டிருக்கும் தன் கூட்டாளிகளோடு சேர்கிறான்.

அங்கிருந்து இறங்கி நடக்கையில், ஒரு வெட்ட வெளி குறுக்கிடுகிறது. அங்கே, ஓநாய்கள் (wargs) பாய்ந்து வருகின்றன. இவர்கள் மரங்களின் மேல் ஏறிக்கொள்கிறார்கள். ஓநாய்கள் கூடி மாநாடு போடுகின்றன. ஓநாய்கள் கோபுலின்களின் நண்பர்கள். காண்டால்வ்ப் தன் கைக்கோலைக் கொண்டு நெருப்பு உண்டாக்கி ஓநாய்களின் மீது வீசுகிறார். ஓநாய்களின் மயிருடம்பில் தீப்பற்றி, ஒன்றிலிருந்து இன்னொன்று என்று பரவிக் கூச்சல்குழப்பம் ஆகிறது. அந்நேரம், கோபுலின்கள் அங்கே வந்து, ஓநாய்களில் தீயை அணைத்து, இவர்கள் ஏறி இருக்கும் மரங்களில் படரும்படி செய்கின்றன.

மலைமுகட்டில் இருக்கும் கழுகரசன் இதைப் பார்க்கிறான். அவன் தன் கழுகுப் படையோடு கீழிறங்கி வந்து, மரங்களில் தொங்கிக்கொண்டு இருக்கும் பில்போ, காண்டால்வ்ப், குள்ளர்களைத் தூக்கிக்கொண்டு தன் சிகரத்தில் போய் இறக்கி விட்டு அவர்களுக்கு உணவும் கொடுக்கிறான்.
*

இது வரைக்குமான கதையைத்தான் படம் ஆக்கி இருக்கிறர்கள் என்று ‘கருந்தேள்’ ராஜேஷ் எழுதி வாசித்து இருந்ததால், நானும் இதுவரைக்கும் கதைசொல்லி எங்கள் பாப்பாவைப் படம்பார்க்கக் கொண்டு போனேன். நான் சொன்னது போல் புத்தகத்தில் இருக்கும் இந்தக் கதையை இயக்குநர் பீட்டர் ஜேக்ஸன் எப்படி எல்லாம் வெட்டி ஒட்டித் திருத்தி இருக்கிறார் என வெள்ளித் திரையில் கண்டுகொள்க! பெரிதெனப் பட்ட சில மட்டும் இங்கே:

(இந்தக் கதையில், பரபரப்புக் காட்சிகள் (action scenes) என்று எனக்குப் பட்டவை, 1. Trolls encounter, 2. Thunderstorm, 3. Wargs encounter and Eagles help. காட்சிகள் 2-உம் 3-உம் இடைவேளைக்குப் பிறகு கைகொடுக்கும்; இடைவேளைக்கு முன், காட்சி 1 மட்டும் போதாதே என்று நினைத்தேன்.)

***
வயதான பில்போ கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. ‘புத்தகத்தில் இப்படி இல்லையே!’ என்று குழம்பினேன். இளம் வயது ஹாபிட் ஒருவனைக் காட்டினார்கள். “பில்போ யங் மேனா இருந்தப்போ...” என்றேனா, “இல்ல, அது ஃப்ரொடோ...” என்றாள் எங்கள் பாப்பா. அவள் ‘லார்டு ஆஃப் த ரிங்ஸ்’ படம் பார்த்து இருப்பாள் போல. அந்தமட்டில், இயக்குநர் என்ன செய்கிறார் என்று எனக்கு விளங்கிவிட்டது.

அப்புறம் ‘டேல் நகரின் மீது தன் இடதுகாலைப் பதிக்கும் ட்ராகன்’ அட்டூழியம் திறப்புக் காட்சிப் பரபரப்பானது. பயணத்தின் இடைவழியில் ஒரு கதைசொல்லல் என, ‘கனிமச் சுரங்கத்தில் கோபுலின்களோடு த்ரார் நடத்தும் போர்’ மற்றொரு விறுவிறுப்புக் காட்சியானது. போதாது என்று, இந்தக் கதைக்குச் சம்பந்தமே இல்லாத ‘முயல்வண்டி விரட்டல் ரடகாஸ்ட் (Radagast)’ நகைச்சுவைப் பரபரப்புக் காட்சியும் சேர்க்கப்பட்டு இருந்தது. நான் பாப்பாவுக்குச் சொன்ன கதையில் அது இல்லை ஆகையால், “அவர் யாரு?” என்று கேட்டாள். கொஞ்சம் குழம்பி, அப்புறம், “காண்டால்வ்போட கஸின்” என்று இடைவேளையில் சொன்னேன்.

பாறைப்பூதப் புயல்மழைக் காட்சியில் அவ்வளவாய் மழை இல்லாதது ஒரு குறை. விடுகதைக் காட்சியில், “ஒண்ணுமே புரியலையே!” என்று சொன்ன எங்கள் பாப்பாவுக்கு, “கோல்லம் அப்படித்தான் நிறைய S சேர்த்துப் புரியாமப் பேசும்” என்று சொன்னேன். ஆனால் அந்தக் காட்சியின் அரிபரி எனக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. போலவே, உச்சகட்டக் காட்சியில், இயக்குநர் பில்போவுக்குக் கொடுத்திருக்கிற பாய்ச்சலும் எனக்கு ரசிக்கவில்லை.

குதிரைகூட ஏறத் தெரியாத ஹாபிட் யாருக்குக் குறியீடு? தொழில்வல்ல பேராசைக்காரக் குள்ளர்கள் யாருக்குக் குறியீடு? இடதுகால் பதித்தழிக்கும் ட்ராகன் யாருக்கு? வெள்ளைத்தோல் எல்வ்ஸ் யாருக்கு? காண்டால்வ்ப் யார்? கழுகுகள் யார்? ஓநாய்கள்? கோபுலின்கள்? சற்று யோசித்தால், உலக அரசியலில் டொல்கீன் எந்தப் பக்கம் என்று புரியக் கூடும்.

வீட்டில் இருந்த புத்தகத்தை எடுத்துக் காட்டி, பாப்பா தன் விளையாட்டுத் தோழிகளிடம், “இந்தப் படத்தைப் பார்த்துட்டேனே!” என்றாள். “எப்படி இருக்கு?” என்ற அவர்களுக்கு, “சூப்பர்!” என்கிறாள்.

-ராஜசுந்தரராஜன்
*************
 அண்மை பதிவு:

2012 - அசத்திய 10  சூப்பர் ஹிட் பாடல்கள்

2012-ல் இந்திய அரசியல்


3 comments:

  1. சர்வமதக் கோயில் மாதிரி சர்வபதிவர் வலைப்பூவாக மாறிக்கொண்டிருக்கிறது வீடுதிரும்பல். வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. கொஞ்சம் கொழப்பமா இருக்கு சார்.. இந்த அளவுக்கு விளக்கமா விமர்சனம் எழுத ரொம்ப கஷ்ட பட்டு இருக்கணும்....

    ReplyDelete
  3. வாய்ப்புக் கிடைச்சா படம் பார்த்துட வேண்டியதுதான் :-))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...