Thursday, June 6, 2013

ஜிம் (Gym) டிரைனர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

வ்வோர் நாளும் நான் நேரில் பார்த்து பேசும் நண்பர் அவர். அதிலும் ஐ. பி. எல் மேட்ச் நடக்கும் நேரங்களில் நாங்கள் பேசி கொள்வது சற்று அதிகமாகவே இருக்கும். மாலை நேரம் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஜிம்முக்கு செல்லும் போதெல்லாம்  சிரிப்புடன் எதிர்கொள்வார் மோகன் என்கிற டிரைனர்.

தினம் பல விஷயங்கள் ஜாலியாய் பேசி கொள்ளும் நாங்கள் " பேட்டி " என்று - சீரியசாய் உட்கார்ந்து பேசியது, இருவருக்குமே சற்று வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது.

இனி அவருடன் பேசியதிலிருந்து

நீங்க எந்த வயசிலிருந்து ஜிம்முக்கு போக ஆரம்பிச்சீங்க?




நான் காலேஜ் முடிச்ச பிறகு தான் ஜிம் செய்ய ஆரம்பிச்சேன். அதாவது என்னோட 21 வயசில். ஆனா 18 வயசு தான் ஜிம் ஆரம்பிக்க சரியான வயசு.

ஜிம்மில் டிரைனர் ஆக சேர  தாவது கோர்ஸ் இருக்கா? அல்லது அனுபவத்தில் டிரைனர் ஆகலாமா?

ரெண்டு விதமாவும் டிரைனர் ஆகலாம். சில நிறுவனங்கள் இதற்கென்று ஆறு மாச சர்டிபிகேட் கோர்ஸ் நடத்துறாங்க. அது படிச்சுட்டு வர்றவங்களும் உண்டு. என்னை மாதிரி நேரடியா படிக்காம அனுபவத்தில் வர்றவங்களும் உண்டு.கொஞ்சமாவது இது சம்பந்தமா படிச்சுட்டு வர்றது தான் நல்லது.

வண்டி ரிப்பேருக்கு சில பேர் ஆட்டோமொபைல் படிச்சுட்டு வருவாங்க. சில பேர் நேரே அனுபவத்தில் செய்வாங்க இல்லையா? அது மாதிரி தான்

கோர்ஸ் படிக்காம வந்தால், இன்னிக்கு டெக்னாலஜியில் - ஜிம் சம்பந்தமா உள்ள புது விஷயங்கள் தெரியாமல் போகும்.

6 மாச கோர்ஸ் - 5,000 ரூபா போல் ஆகும். படிக்க பெரிய Gym Body  இருக்கணும்னு அவசியம் இல்லை. சாதாரணமா உடம்பு இருக்கவங்க கூட அந்த கோர்ஸ் முடிச்சுட்டு டிரைனர் ஆகிடுவாங்க

கோர்ஸ் படிக்காத நாங்கல்லாம் எங்க உடம்பை வைச்சு தான் டிரைனர்ன்னு பேர் வாங்குவோம். அவங்க கத்து குடுக்குற விதத்தில் டிரைனர்ன்னு ஆகிடுவாங்க.

மேவரிக், O -2 மாதிரி பெரிய ஜிம்மில் எல்லாம்,  கோர்ஸ் முடிச்சிருந்தா தான் டிரைனர் ஆக எடுக்க முன்னுரிமை கொடுப்பாங்க

இது மாதிரி டிரைனருக்கு என்ன விதமான சம்பளம் கிடைக்கும்? இதையே வச்சு குடும்பம் நடத்த முடியுமா?

பெரிய ஜிம்களில் நாலு மணி நேரம் அப்படிங்கறதை ஒரு ஸ்லாட்டுன்னு வச்சிருப்பாங்க. காலை 4 மணி நேரம் - சாயங்கலாம் 4 மணி நேரம் வேலை பார்த்தா - 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். ஆனா எல்லாருக்கும் பெரிய ஜிம்மில் வேலை கிடைச்சிடாது.

இது மாதிரி பெரிய ஜிம்களில் இன்சென்டிவ் அடிப்படையில் அதிகப்படி பணமும் தருவாங்க. புதுசா ஒருத்தர் ஜிம்மில் சேர்றார்னு வைங்க. அவர் சேரும்போதே 3 மாசத்தில் - 5 கிலோ எடை குறைக்கிறதா பேசி வச்சிப்பாங்க.  அதை அச்சீவ் செய்தால் அவர் சற்று அதிக பணம் ஜிம்முக்கு தருவார் அதில் குறிப்பிட்ட %  கமிஷன் டிரைனருக்கு கிடைக்கும்

TCS , விப்ரோ மாதிரி கம்பனி உள்ளேயே அங்குள்ள ஊழியர்களுக்காக ஜிம் இருக்கும். அதை ஒரு தனி ஆள் (எங்க பாஸ் மாதிரி) - காண்டிராக்ட் எடுத்திருப்பார். டிரேட்மில் உள்ளிட்ட மிஷின்ஸ், இடம் - எல்லாம் கம்பனி பாத்துக்கும். காலை ஒரு டிரைனர் , சாயங்காலம் ஒரு டிரைனர் வரணும்.

எங்க மாஸ்டர் கம்பனியில் மாசம் 10 ஆயிரம் வாங்குவார். எங்களுக்கு ஆளுக்கு மாசம் மூவாயிரம் தர்றார். மீதம் நாலாயிரம் அவருக்கு. இது போல பத்து இடத்தில் எங்க மாஸ்டர் காண்டிராக்ட் எடுத்து வச்சிருக்கார்.

இதை முழு நேர தொழிலாகணும்னா எங்க மாஸ்டர் மாதிரி நிறைய காண்டிராக்ட் எடுத்து செஞ்சா செய்யலாம். அது செட் ஆக பல வருஷம் ஆகும். வீட்டில் நம்ம பணத்தை நம்பி இல்லைன்னா தைரியமா இறங்கலாம்

வீட்டுக்கு நம்ம சம்பளம் ரெகுலரா தேவைன்னா - நாம ஒரு வேலையில் இருந்துகிட்டு பார்ட் டைமா இந்த வேலை செய்யணும்.

இப்ப என்னை எடுத்துகிட்டீங்கன்னா காலை 7 மணி முதல் மதியம் 2 வரை  ஷிப்ட்டில் ஒரு கம்பனியில் வேலை செய்யுறேன். மாலை 5 முதல் 9 வரை இந்த டிரைனர் வேலை பாக்குறேன். இந்த நாலு மணி நேரத்தில் நான் எக்சர்சைஸ் செஞ்ச மாதிரியும் ஆச்சு. எதோ கொஞ்சம் கை செலவுக்கு பணம் வந்த மாதிரியும் ஆச்சு

இன்னும் சில பேர் சினிமா நடிகர்கள் மாதிரி ஆட்களுக்கு தனி டிரைனர் ஆக இருப்பாங்க. இவங்களுக்கு மாசம் 50 ஆயிரம் வரை கூட சம்பளம் கிடைக்கும். ஒரு படத்தில் ஒரு நடிகர் நடிக்கிறார்னா ,  அந்த படத்துக்காக - அந்த பாத்திரதுக்காக தான் உடம்பை ஏத்துவார் - அதனால ஜிம் டிரைனர்க்கு  சம்பளமே பட தயாரிப்பாளர் தான் தருவார்

நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் வச்சப்போ, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் தான் அவருக்கு டிரைனர் ஆக இருந்தார்.

சூர்யாவோட நண்பர் ஒருத்தருக்கு 6 மாசத்தில் - 20 கிலோ எடை குறைக்க வச்சார் அந்த டிரைனர். அதை பார்த்துட்டு இம்ப்ரெஸ் ஆன சூர்யா இவரை கூப்பிட்டு பேசி, அவரை கூடவே டிரைனரா வச்சிகிட்டார். இப்ப அவரோட தம்பி தான் - சூரியா தம்பி கார்த்தி கூட டிரைனரா இருக்காரு

பெரிய ஆட்களுக்கு டிரைனர் ஆக இருக்கும்போது - தினம் போன் செஞ்சு இப்ப வரலாமான்னு கேட்டுட்டு அப்புறம் தான் போகணும்

இந்த தொழிலில் உங்களுக்கு கிடைக்க கூடிய மகிழ்ச்சின்னா எதை சொல்லுவீங்க?

                          

எங்க உடம்பை எங்களால் நல்லா பார்த்துக்க முடியுது. ஜூரம் அல்லது வேறு எந்த நோயும் அவ்வளவு சீக்கிரம் வராது. அடிபடுவது மாதிரி விஷயத்துக்கு சோர்ந்து போகாம நாங்க பாட்டுக்கு எங்க வேலையை தொடர்வோம். இப்படி வியாதி இல்லாத வாழ்க்கை கிடைக்க இந்த வேலை தானே உதவுது !

ஏதாவது பயணம் மாதிரி காரணத்தால் ஒரு வாரம் நாங்க எக்சர்சைஸ் செய்யாட்டியும் மனசு என்னமோ போல் ஆகிடும். மறுபடி ஜிம் போக ஆரம்பிச்சா தான் நார்மல் ஆவோம்.

நாம சொல்லி தர்றவங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சா அதுவும் பெரிய சந்தோஷம் தான்.

நூறு பேர் இருக்க கூட்டத்தில் கூட நாங்க மட்டும் தனியா தெரிவோம். வெளி இடங்களுக்கு போகும் போது, நம்ம உடம்பை பார்த்துட்டு நம்ம கிட்டே வந்து பேசுறவங்க நிறைய பேர் உண்டு. அதே மாதிரி முன்னே பின்னே தெரியாத எத்தனையோ பேர் நம்ம கூட போட்டோ எடுத்துக்கிறாங்க. ரயிலில் டிக்கெட் செக்கர் துவங்கி டிராபிக் போலிஸ் வரை எல்லாருமே நம்ம கிட்டே " நீங்க ஸ்போர்ட்ஸ் மேனா? " அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. இப்படி நம்மளை மத்தவங்க பாராட்டுறது தான் இந்த உடம்பை எப்பவும் இதே மாதிரி வச்சிக்கணும்னு  மோட்டிவேஷன் தருது.


(ஜிம் டிரைனர் பேட்டி அடுத்த பதிவிலும் தொடரும் )

அடுத்த பதிவில் :

ஜிம்மிற்கு வருவோரிடம் இருந்து உங்களுக்கு லவ் ப்ரப்போசல் வந்திருக்கா ? 

ஆணழகன் போட்டி !!

ஒரு ஜிம் ஆரம்பிக்கனும்னா எவ்ளோ செலவு ஆகும்? அதுக்கு லைசன்ஸ் எதுவும் வாங்கணுமா?

சிக்ஸ் பேக் : சில தகவல்கள்- சில எச்சரிக்கைகள் 

ஜிம் போவதை நிறுத்திட்டா வெயிட் போடுமா?

******

அதீதம் மே 15 இதழில் வெளியானது
*********
அண்மை பதிவுகள்


ஆலப்புழா.. Boat House பயணம் -ஸ்பெஷல் படங்கள்


வானவில்- உதயம் NH 4- நிஜ சுஜாதா பேட்டி - நித்யா மேனன்

தொல்லை காட்சி - 60 நொடி கூத்து - விஜய் அவார்ட்ஸ்

6 comments:

  1. நல்லதொரு வேலைதான் போல?
    இதனால் எதாவது அசவுகரியம் உண்டா?

    ReplyDelete
  2. வித்தியாசமான பேட்டி... தொடர்ந்து போகாட்டி கஷ்டம்தான் இல்லை?

    ReplyDelete
  3. I'm a big fan of this series articles. Super ji

    ReplyDelete
  4. என்னுடைய பகிர்வை முந்திக்கொண்டு சுட்டு கிட்டீர்கள்.:)) இங்கு பஸ் லேட்டாகிவிட்டது.:)) சிலோபஸ் அப்புறம் வரும். :)))

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. தெரியாத விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். தொடர்கிறேன் நானும்....
    அட பேட்டியின் அடுத்த பகுதியைத் தாங்க மோகன்!

    ReplyDelete
  6. நமது முகநூல் நண்பர் திரு மோகன் குமார் அவர்களின் அருமையான பதிவு.
    ஜிம் டிரெய்னரின் நேர்காணல்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் மோகன் குமார்.
    பதிவுலகை எப்படி ஆக்கப் பூர்வமாக உபயோகிக்கலாம் என்பதற்கு உங்கள் பதிவு முன்மாதிரி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...