Sunday, August 4, 2013

நண்பேண்டா !

ண்பர்கள் தினம் - வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல - நம்மில் பலருக்கு நண்பர்களிடம் பேசாத, பார்க்காத நாள் ஒன்று கூட இல்லை ! எனவே வாழ்வின் ஒவ்வொரு தினமும் நண்பர்கள் தினமே !

உடன் பிறந்தவர்கள்- அவர்கள் குடும்பம் தவிர வேறு எந்த உறவினரையும் பெரிதாய் நினைக்காதவன், அவர்கள் விஷேங்களுக்கு அதிகம் செல்ல விரும்பாதவன் - இது- என் மீது ஹவுஸ் பாஸ் சுமத்தும் ஒரு குற்றசாட்டு . அது ஓரளவு உண்மை தான் !

நண்பர்கள் வாழ்க்கை முழுதும் நிறைந்திருப்பதால் - உறவினர்கள் பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை (இது சரியோ தவறோ இப்படி தான் இத்தனை காலம் வாழ்ந்தாச்சு; )

5 வயது முதலே நட்பு தான் முக்கியம் என்று ஆகி போனது. நெருங்கிய நண்பர்கள் என குறைந்தது   20 பேரை சொல்லலாம்; எனது துறையில் நன்கு தெரிந்த - அடிக்கடி பேசும் பார்க்கும் நண்பர்கள் என்றால் - அது மூன்று இலக்கத்தை தாண்டும் !

நீண்ண்ண்ண்ட கால நண்பர்களில் (குறைந்தது 25 வருடம் !) சிலரை பற்றி மட்டும் மிக சுருக்கமாக இங்கு

பாஸ்கர் - நீடாவில் - எதிர் வீடு  - என் முதல் நண்பன் - அப்பவே சற்று குண்டாய் இருக்கும் நான் - சண்டைகளில் அவனை அடித்து விட்டு ஓடி வந்து விடுவேன் - என் மீது அளவு கடந்த பிரியம் கொண்டவன் - தஞ்சையில் ப்ளஸ் ஒன் படிக்கும்போது வார இறுதியில் ஊருக்கு வர - பாஸ்கரன் இறந்து விட்டான் என்ற தகவல் கேட்டு விக்கித்து அமர்ந்து விட்டேன். இருதய நோய் பாஸ்கருக்கு உண்டு. மிக வசதியான ஆனால் செலவு செய்யாத குடும்பம் - என் முதல் நண்பனை இழந்த வலி இன்னும் உண்டு. ஊருக்கு செல்லும்போதெல்லாம் அவன் வீட்டில் மாட்டியிருக்கும் அவனது புகைப்படத்தை பார்க்கும்போது மனது என்னமோ செய்கிறது !

தம்புசாமி - அதே நீடாவில் எங்கள் தெருவில் இருந்த நண்பன். செம செம செம வாலு ! அவன் அடித்த கூத்துகளில் சிலவற்றை மட்டும் தான் எழுத முடியும் . பலவற்றை எழுதவே முடியாது. ஆனால் நினைத்து நினைத்து சிரிக்க கூடிய குறும்புகள் ! தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரமும் ஒன்றாய் திரிந்தவர்கள் (அவன் - தனது வீட்டில் குளிக்கும்போது நான் நின்று பேசிக்கொண்டிருப்பேன் ; பின் எங்கள் வீட்டுக்கு அவன் வர அதே கதை தொடரும் ) இவ்வளவு நெருக்கமாய் இருந்தவர்கள் எதோ ஒரு சின்ன சண்டையில் பேசுவதை நிறுத்தினோம். தி. ஜா சொன்ன மாதிரி " நண்பன் இறந்தா தாங்கிக்கலாம் நட்பு இறந்தால் தாங்கி கொள்வது மிக கடினம் "பல வருடங்கள் கழித்து சென்னையில் ஒரு முறை தம்புவை -சந்திக்க இருவரும் பரஸ்பரம் பழைய பகையை மறந்து நட்புடன் பேசினோம். போன் நம்பர் வாங்கி கொள்ள தவறியதால் அந்த நட்பு மீண்டும் துளிர்க்கவே இல்லை

மது - ஆறாவது படிக்கும் காலத்தில் நட்பானவன்.



அவனது அம்மா எங்க ரெண்டு பேரையும் "புதுசா கலியாணம் ஆன புருஷன் பொண்டாட்டி மாதிரி குசுகுசுன்னு பேசிட்டு எப்பவும் ஒண்ணா திரியுரானுங்க பாரு " என்று கிண்டலடிப்பார். நண்பன் நந்துவின் ஒன்று விட்ட தம்பி. சில காலம் சற்று தள்ளி இருந்தாலும் கல்லூரி காலத்தில் பாலகுமாரன் சுஜாதா போன்ற ஒத்த ரசனை எங்களை மீண்டும் சேர்த்தது. எப்போதும் பெண்களுக்கு மிக பிடித்தமான + நெருக்கமனாவனாக இருப்பான் (நறநற!) இப்போது சென்னையில் .. எப்போதோ ஒரு முறை போனில் பேசிக்கொண்டாலும் நட்பும் புரிதலும் இன்றும் தொடர்கிறது

நந்து - பற்றி அவ்வப்போது வீடுதிரும்பலில் எழுதி விட்டேன்.



கடந்த 20 வருடமாக வெளிநாட்டில் பெரும்பாலும் இருந்தாலும், நட்பில் அது சிறிதும் தெரிய வில்லை. எப்போது சென்னை வந்தாலும் சில முறை சந்திப்போம். அதில் நந்து, மோகன் இருவருடன் ஒரு "சிறப்பு சந்திப்பும் " அவசியம் இருந்தாகணும் ! 4 க்ளாஸ் பீர் விட்டுட்டு ஆள் ஆளுக்கு பழைய கதை மற்றும் பழைய காதல் பேசி கண்ணில் நீர் வரும் வரை சிரிக்கும் சுகம் இருக்கே ! அடடா ! சான்சே இல்லை !

மோகன் - நந்து பற்றி சொன்னால் அடுத்து மோகனையும் சொல்லியே தான் ஆகணும். நாங்கள் ஒரு மூவரணி ! திருச்சி சட்ட கல்லூரியில் படிக்கும் போது சனி ஞாயிறு மட்டும் நீடா வருவேன். வெள்ளி இரவு ஒன்பதரை மணிக்கு ஊருக்கு ஜெயவிலாஸ் பஸ்ஸில் வருவேன் என தெரிந்து காத்திருப்பான். 11 மணி வரை அரட்டை அடித்து விட்டு அப்புறம் - ஊருக்கு வெளியே இருந்த தங்கள் வீட்டுக்கு செல்வான் மோகன். அடுத்த 2 நாளும் கூட எங்கள் அரட்டை தொடரும். (கல்லூரியில் நாங்கள் படித்து கோ- எட் என்பதால் பல கதைகளை அவிழ்த்து விட அதை கேட்பதில் அவனுக்கு செம குஷி !). சென்னைக்கு ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்து இன்று அவன் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது ! சொந்தமாய் சினிமா எடுக்கிறான். அரட்டை அரங்கம் தயாரிக்கிறான். சன் டிவி யில் வரும் பல சீரியல்கள் பின்னே இவனது உழைப்பு இருக்கிறது. அன்றைக்கு பார்த்த மாதிரியே அதே உருவம் -பேச்சு ! மோகனின் நண்பன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்ள வைத்து விட்டான் !

லட்சுமணன் - மனதளவில் மிக மிக நெருக்கமாக இருந்தது இவனிடம் தான். 25 வயதில் எங்களை தவிக்க விட்டு போய் விட்ட அநியாயத்துக்கு நல்லவன். இறந்து 15 வருடத்துக்கு மேலாகியும் இவனுக்காக விழி இழந்தோர் பள்ளியில் நடக்கும் விழா இவனை நாங்கள் நினைவு கூற செய்யும் சிறு முயற்சி. இவனது பெற்றோருக்கு நானும் ஒரு மகனே !

பள்ளி -கல்லூரியில் பழக்கமாகி இன்றும் தொடரும் நட்பு - தேவகுமார் மற்றும் வேங்கடப்பனுடையது. தேவாவுடன் போனில் பேசாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனக்கு தம்பி இல்லை என்ற குறையை போக்கியவன். இணையம் மூலம் மீண்டும் கிடைத்த வேங்கடப்பன் விரைவில் ப்ளாகிலும் கலக்க உள்ளான் !




கல்லூரி நண்பர்களில் பிரேம் - பாலா - டெய்சி - அமுதன்  .....எனது துறை சார்ந்த நண்பர்கள் ரெங்கராஜன், பழனியப்பன் - ப்ளாக் நண்பர்கள் என பலரையும் சொல்ல வேண்டும். ...  இன்றும் ரெகுலராக பார்த்து பேசி சிரிக்கும் இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக ஒரு முறை எழுத எண்ணம் ! பார்க்கலாம் !

இதனை எழுதி முடிக்கும்போதே மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. நட்பு - தரும் உன்னதமான உணர்வு அது !

*******
அண்மை பதிவு

தொல்லை காட்சி - ஆபிஸ் சீரியல் லட்சுமி - சூப்பர் சிங்கர் வைஜயந்தி 

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. You are not a friend. You and mohan, both are my part of life

      Delete
    2. ரைட்டுங்கண்ணா !

      Delete
  2. அருமையான பகிர்வு.

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலட்சுமி

      Delete
  3. நண்பர்கள் தின நாளில் உங்கள் நண்பர்களை பற்றி எழுதியது சிறப்பு....

    தொடரட்டும் நட்பு.......

    ReplyDelete
    Replies

    1. வெங்கட் : நன்றி ;

      Delete
  4. நண்பர்களை பற்றி அழகா நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி தங்களுக்கும் வாழ்த்துகள்

      Delete
  5. நட்புக்களை சிறப்பித்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி வாழ்த்துகள்

      Delete
  6. நண்பர்தின வாழ்த்துக்கள்.நண்பரே தனியுலகம் பற்றி சொல்லவில்லையே

    ReplyDelete
    Replies
    1. தனியுலகம்? புரியலியே சார் ! ப்ளாக் உலகமா?

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...