Saturday, August 31, 2013

சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியமா ?

சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் அத்தியாவசியமாகிறது? சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், உலகுக்குத் தன்னை நிரூபிக்கவும்தானா?  ‘இல்லை’ என்கிறார் மோகன் குமார்.  எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, மாற்றங்களுக்குத் தயாராகி, சவால்களைச் சந்தித்து, நினைத்தும் பார்த்திராத சிகரங்களைத் தொட்டு, நாமே அமைக்கும் புதிய பாதையில் நம் வாழ்க்கைப் பயணம் சீராக ஓடத் தொடங்குவதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கும் திருப்திக்காவுமே என்கிறார் இந்நூலின் மூலமாக.

‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’

வீடு திரும்பல்’ வலைப்பூவின் முகப்பில் உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள்.  இவரது இந்தக் கேள்வியே இலக்குகளை நோக்கிய வெற்றிக் கோட்டை இழுத்திருந்தாலும்,  ஒவ்வொரு படிக்கட்டிலும் உறுதியுடன் ஏறி உயரம் தொட்ட போது உணர்ந்த உண்மையை, சமூகத்திடமிருந்து தான் பெற்ற நல்லனவற்றை பிறருக்கு உதவுவதன் மூலம் சமூகத்துக்கே திருப்பித் தந்தபோது அடைந்த மன நிறைவை நெகிழ்வோடும் நெஞ்சம் நிமிர்த்தியும் நேர்மையுடன் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார், ஐந்தாண்டு சட்டப்படிப்பில் கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அதன் பிறகு கம்பெனி செக்ரட்டரிஷிப் மற்றும் ICWA படிப்பை முடித்துவிட்டு சட்டம் மற்றும் செக்ரடேரியல் துறை நிர்வகிப்பாளராகப் பணிபுரியும் மோகன் குமார்:

நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, என்னுடைய வாழ்க்கையை எப்படி எடுத்து செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டுப்  பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே எதற்கும் உபயோகமில்லாதவன் போல் இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன் ! இவ்வளவும் செய்து விட்டு இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர்.

இவரது வலைப்பூவில் வெளிவந்த போதே என்னை ஈர்த்த, பாராட்ட வைத்த தொடர். மேலும் சில அத்தியாயங்களை இணைத்துக் கொண்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கையில் நான் உணர்ந்தது,  சொல்ல முற்படும் செய்தியை வாசகரிடம் மிக இலகுவாகக் கொண்டு சேர்த்து விடுகிறார் தன் எளிமையான, சுவாரஸ்யமான எழுத்து நடையினால். 


(ஊதா நிற அட்டை தான் புத்தகத்தில்பயன்படுத்தப்பட்டது ;
சுகுமாரின் உழைப்பு உங்கள் பார்வையில் படவேண்டி இதனையும் பகிர்கிறேன் )

பல இடங்களில், போகிற போக்கில் சொல்லிச் செல்லுபவை வாழ்வியல் தந்துவங்களாக மிளிருகின்றன:

“பிறரை வெறுப்பதன் மூலம் நம்மை நாமே வெறுக்கிறோம்.”

“தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது!”

“பிறர்   நம் மீது அன்பு செலுத்த வேண்டும் என நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?”

“கடந்த காலத் தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால் !”  ஏனெனில்,  "கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது !" 

மொத்தம் பத்தொன்பது அத்தியாயங்கள். ஒரு சிறந்த ஆளுமையாக நாம் திகழ சந்தோஷமான மனநிலையும், ஆரோக்கியமான உடல் நிலையும் முக்கியம் என்பதை அழகாக அலசுகின்றன.  எடுத்துக் கொண்ட தலைப்பை தனது மற்றும் தெரிந்தவர் வாழ்க்கை அனுபவங்களுடன்,  பொருத்தமான மேற்கோள்களுடன், ஆங்காங்கே சின்னக் கதைகளுடன், கவிதைகளுடன், உலகின் பிறபாகங்களிலிருக்கும்  நடைமுறைகள் குறித்த தகவல்களுடன், நாம் அறிந்த திரைப்படங்களை உதாரணம் காட்டி என.. எங்கும் எதையும் திணிக்காமல் இயல்பாகச் சொல்லிச் சென்ற விதத்தில் அழுத்தமாகப் பதிந்து போகிறது மனதில், “வெற்றிக் கோடு”!

இலக்கை முடிவு செய்வது; தயக்கங்களை வெல்வது; விடா முயற்சியை ஊக்க மருந்தாகக் கொள்வது; தாழ்வு மனப்பான்மையையும் சுயவெறுப்பையும் கை விடுவது; பெரியவர்களை மதிப்பது; அனைவரிடமும் அன்பும் நட்பும் பாராட்டுவது; உடல்நலம் பேணுவது; பயம், அலட்சியம், ஈகோ இவற்றைத் தள்ளி வைப்பது; மற்றவரை மனதாரப் பாராட்டுவது; மனித மனங்களின் மோசமான மறுபக்கங்களான கோபம், பொறாமை ஆகியவற்றை அண்ட விடாதிருப்பது; உயிருக்குக் குழி பறிக்கும் தீய பழக்கங்களில் விழுந்திடாதிருப்பது; நேர மேலாண்மை, நமக்கென ஒரு ரோல் மாடல் வேண்டியதன் அவசியம்; இவற்றோடு வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்பதையும், பிறருக்கு உதவுவதை நம் இயல்புகளில் ஒன்றாக மாற்றிக் கொள்வதால் வாழ்க்கை எப்படி பூர்ணத்துவம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறது இந்நூல்.

த்தனையோ புத்தகங்களில் இந்த அடிப்படையான கருத்துகளை நாம் வாசித்திருக்கலாம். இவரே சொல்கிறார் தான் வாசித்து மனதில் ஏற்றிக் கொண்ட பல சிந்தனைகள்தாம், ஆனால் எப்படி அவற்றால் தான் பயனுற்றேன் என்பதையே சொல்ல விழைந்திருப்பதாய். அதனாலேயே அவை அறிவுரைகளாய் நில்லாது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாய் நம்மை மனதார ஏற்றுக் கொள்ள வைக்கின்றன.

ஒரு சில இடங்களில் ஆங்கில மேற்கோள்களைத் தமிழ் படுத்தாமல் விட்டிருப்பது சிறிய குறை. ஆங்கிலம் அறியாத சாதாரண மனிதரும் முழுதாகப் புரிந்து பயனடைய வேண்டிய புத்தகமாயிற்றே.  கூடிய விரைவில் மறுபதிப்பை எதிர்பார்க்கலாம் என்பதால் அந்த சமயத்தில் இது சரி செய்யப்படுமென நம்புகிறேன்.

மொத்தத்தில், இருபது முதல் முப்பது வயதுக்குள்ளாக இருக்கும் இளைய தலைமுறை தம் வாழ்க்கையைச் சரியான சமயத்தில் செதுக்கிக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்துடன் ‘உயர்தலே வாழ்க்கை’ என உரக்கச் சொல்லுகிற இப்புத்தகம்,  ‘நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்கிற தேடலுடைய அனைத்து வயதினருக்கும் விடையாக அமைகிறது என்றால் அது மிகையன்று.

இலக்கை நிர்ணயிக்க இயலாமல் தத்தளிக்கும், தீய வழிகளில் மனதை அலைபாய விட்டுத் திசை திரும்பிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை நல்வழியில் செலுத்த உதவும் இப்புத்தகம் அனைத்துக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் நூலகத்தில் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்று. “உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் திரும்பிப் பார்க்கவும், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சில விஷயங்களைக் கற்றுத் தரவும் செய்யுமானால், இந்தப் புத்தகம் தன்னுடைய கடமையைச் செய்து விட்டது என்று அர்த்தம்” என்கிறார் நூலாசிரியர். தன் கடமையில் நூல் வென்றிருப்பதாக நான் உணர்ந்தது போல நீங்களும் உணரும் பட்சத்தில் மற்றவருக்குப் பரிந்துரைக்கவும், நீங்கள் நலம் நாடும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் வாங்கிப் பரிசளிக்கவும் செய்வீர்கள் என நம்புகிறேன்.

திரு. சோம வள்ளியப்பன் அவர்களின் சிறப்பான மதிப்புரையுடன் அகவொளி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் வெற்றிக்கோடின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ‘வீடு திரும்பல்’ வலைப்பூவை ஆரம்பத்திலிருந்து வாசித்து வரும் வகையில் நண்பரின் எழுத்து புத்தகமாவது கூடுதல் மகிழ்ச்சி.

உயர்தலே வாழ்க்கை!

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் மோகன் குமார்:)!

*

வெற்றிக் கோடு
பக்கங்கள்: 104; விலை: ரூ. 80;
வெளியீடு: அகவொளி பதிப்பகம்;
கிடைக்கும் இடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
எண்: 390, அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை - 15.
தபாலில் வாங்கிட:  aganazhigai@gmail.com

நாளை 31 ஆகஸ்ட் 2013 மாலை 5.30 மணிக்கு அகநாழிகை புத்தக உலகில் நடைபெறவிருக்கும் அறிமுக விழாவிலும்; 1 செப்டம்பர் 2013 சென்னை வடபழனி, 297 என்.எஸ். கே சாலையிலுள்ள சினி மியூசிஷியன்ஸ் ஆடிட்டோரியத்தில் நட்புகள் கூடும் சென்னை பதிவர் திருவிழாவில்.., மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவிலும் ரூ. 50-க்கு கிடைக்க ஏற்பாடாகியுள்ளது.
**
நன்றி : வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை -- ராமலட்சுமி 

 http://tamilamudam.blogspot.com/2013/08/blog-post_30.html   
**
இன்றைய விழாவுக்கு அவசியம் வருக ! அனுமதி இலவசம் !


Friday, August 30, 2013

வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா ? FIRST ON NET

வெற்றிக்கோடு - புத்தக விமர்சனம் -FIRST ON NET - தேவகுமார் 

நான் டில்லியில் வேலை பார்த்த Law Firm-ல் இருந்த பெண்கள் சற்று மேனா மினுக்கிகள். ஒரு நாளைக்கு மூன்று முறை மேக் அப் போட்டு manicure- ஐ பற்றி தீர விவாதித்து, Perfume-ஐ தெளித்து கொள்ளாமல், Perfume cloud ஏற்படுத்தி, தங்களை வாசனை செய்து கொண்டு , படாடோபமாக இருப்பார்கள்.

என் நண்பன் அவளது தோழி ஒருத்தியை திருச்சூரில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்தான். எந்த ஒப்பனையும் இல்லாமல், கோதுமை நிறத்தில், எளிமையான சுடிதாரில் சுருள் சுருளான முடியோடு வந்த அந்த பெண்ணை பார்த்து என் அலுவலக பெண்கள் வெவ்வேறு விதத்தில் சொன்ன ஒரே விஷயம் - She looks so fresh !

நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத எடுத்து காட்டுகளோடு வெளியாகும் சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு மத்தியில் - மோகன்குமாரின் வெற்றிக்கோட்டை படிக்கும் போது - எனக்கு அந்த freshness -ம், படாடோபம் இல்லாத அழகும், மினுக்கி கொள்ளாத உண்மையும், மிக நெருக்கமான உணர்வும் வந்து போனது.

எங்கோ யாருக்கோ நடந்ததை சொல்லாமல் - தனக்கு நடந்த அனுபவங்களையே கட்டுரையாக்கி இருப்பது - அவரது தைரியத்தையும், கட்டுரைகளில் உண்மை தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லி செல்கிறது. " My life is my message " என்பது மாதிரி !

மோகன்குமாரை எனக்கு 22 ஆண்டுகளாக தெரியும். 1991-ல் முதலாண்டு சட்டம் படித்த போது - ராக்கிங்கில் பழக்கமாகி, அப்போது நான் பாலகுமாரனை படிப்பேன் என்று சொன்னதையும் மன்னித்து (!) என்னை தம்பியாக்கி கொண்டார் . அவர் வழி நான் நடந்தேன். (கொஞ்சம் அரைகுறை !) அவர் ACS -ல் சேர்ந்தார். நானும் சேர்ந்தேன். (இன்னும் முடிக்க வில்லை) அவர் தினமும் எழுதுகிறார். நான் என்றேனும். அந்த வகையில் மோகன்குமார் எனக்கு குருநாதர்

கல்லூரி காலத்தில் அவரது கவிதைகளில் " சுழித்து ஓடும் சலன ஆறு " என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரும். அந்த சலனங்களிலிருந்து, பயங்களிலிருந்து மீண்டு எப்படி வெற்றியாளர் ஆனார் என்கிற ஆச்சரிய குகையின் " அண்டா காகசம் - அபூ காகுசம் " தான் இந்த கட்டுரைகள்
*****
சுய வெறுப்பு மற்றும் கோபம் குறித்த கட்டுரைகள் " நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் ஆயிற்றே " என்று பலரையும் எண்ண வைக்கும்

                               

குறிப்பாக சுய வெறுப்பு பற்றிய கட்டுரையில் " நடந்ததை மாற்ற கடவுளாலும் கூட முடியாது" என்று அவர் சொல்லும்போது - அந்த செய்தி எவ்வளவு ஆழமானது என்பதை தாண்டி - இந்த புரிதல் எவ்வளவு பயனுள்ளது என்பது தான் எனக்கு தோன்றுகிறது

மனதின் அத்தனை குற்ற உணர்வுகளையும், கசப்புகளையும் களைந்து எறிந்து - நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இந்த புரிதல் நகர்த்தி செல்லக்கூடும். " இன்று புதிதாய் பிறந்தோம் " என்ற பைபிளின் வரிகளும் சொல்வது இதை தானோ ?

                                                             

கோபத்தின் காரணம் எந்த நிகழ்வும் அல்ல - உங்களின் எதிர்பார்ப்பு என்பதாகட்டும், சண்டை போட்டவர்களிடம் அடுத்த நாள் நான் பேசி விடுவேன் என்பதாகட்டும், பக்கத்துக்கு வீட்டு காரனிடம் அன்போடு பழகுவதன் அவசியம் சொல்வதாகட்டும் ( அவன் பத்த வைக்கும் பரட்டை ஆகி விடாமல் தடுக்க ) - இவை அனைத்தும் அன்பாலேயே காரியத்தை சாதித்து விடலாம் என ஆச்சரியப்படுத்துகின்றன !
**********


" பெரியோர் ஆசியும் ரோல் மாடலும்" என்பது சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு புதிதான கோணம்.

உங்கள் Idol-ஐ கண்டுபிடியுங்கள். அதே நேரம் உங்கள் Identiy - ஐ கை விடாதீர்கள் என்பது எவ்வளவு உண்மை !

இப்புத்தகம் புதுப்புது முன்னேற்றத்தின் காரணிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நம்மை பின்னிழுக்கும் ஆமை என பொறாமையை அடையாளம் காட்டும் ஒரு கட்டுரை " உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளப்போகிறீர்களா ?" என கேட்கும் போது நமக்கு நம்மையே பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவே வெற்றியின் ஒரு பக்கம் தான்.

பல நுணுக்கங்களை சொல்லிச்செல்கிற அதே போக்கில், அதனால் விளையும் நன்மைகளையும் (பல சமயங்களில் அது சுய நலமாகவே இருந்தாலும்) சொல்வது சுவாரஸ்யம்.

Corporate Life-ல் கற்று கொள்கிற முக்கிய பாடம் - எது செய்தாலும் அதில் Return of Investment (ROI) என்ன என பார்க்க வேண்டும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் ஒரு ROI- ஐ சொல்வது - இந்த கட்டுரைகள் ஒரு Seasoned executive-ஆல் எழுதியதால் சாத்தியப்பட்டது !
***********
திரு. சோம. வள்ளியப்பன் எனக்கு கல்லூரி காலத்தில் வகுப்பெடுத்தார். நான் தொடர்ந்து கவனிக்கும், வியக்கும் - சில விதங்களில் பின்பற்றும் மனிதர் அவர். அவரது நேர மேலாண்மை ஆச்சரியம் தரும். அப்போது அவர் ஒரு மேல் நாட்டு நிறுவனத்தில் - மதுராந்தகத்தில் வேலை பார்த்தார். அலுவலக பேருந்தில் பயணிக்கும் நேரத்திலும் எழுதி கொண்டே பயணித்தவர். மோகன் குமார் முன்னுரை யாரிடம் கேட்கலாம் என்று என்னிடம் கேட்டபோது முதலில் ஞாபகத்தில் வந்தவர் திரு. சோம. வள்ளியப்பன்.
                         


ஒரே நேரத்தில் Corporate executive ஆகவும் இருந்து கொண்டு வெவ்வேறு தளங்களில் சுணக்கம் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் மோகன் குமாரின் கட்டுரைகளுக்கு சோம. வள்ளியப்பன் சரியான முன்னுரையாளர் என்பது என் எண்ணம்.

திரு. வள்ளியப்பன் தனது முன்னுரையில் சொல்கிறார் " தேவைப்படுகிறவர்கள் - எதிர்பார்க்கிறவர்கள் மிகவும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகங்கள் அவசியம் தேவை.

குருவின் சொல் மந்திரம் !

                                                                                                                       தேவகுமார் 

*************
முதல் கருத்துரை வழங்கிய தேவகுமாருக்கு நன்றி !

நாளை காலை புத்தகம் குறித்த பிரபல பதிவர் ஒருவரின் கருத்துக்கள் வீடுதிரும்பலில் இடம் பெறும் !

****
வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது..

https://www.facebook.com/aganazhigai

Photo: வீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது.. 

https://www.facebook.com/aganazhigai

****
சனி, ஞாயிறு விழா குறித்த விபரங்கள் இதோ -



இரு நாளில் தங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அன்று அவசியம் கலந்து கொள்க ! உங்கள் வருகையும் இந்த எளிய, உண்மையான எழுத்துக்கு நீங்கள் தரும் ஆதரவும்  எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் !

Wednesday, August 28, 2013

பதிவர் விழா உணவு :சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு மெனு ! படங்களுடன்

சென்ற ஆண்டு இதே நாளில் ( 28 ஆகஸ்ட் 2012) சாப்பாட்டு பந்தி குறித்து எழுதிய இப்பதிவு - மிக அதிக நண்பர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது - அதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களில் ராஜி என்கிற எங்கள் அக்கா (அக்காவா? தங்கையா ?) அடித்த ரகளை.... 

அவர் எழுதிய பின்னூட்டங்களை வாசிக்க மறவாதீர்கள்... அதற்காகவே பழைய பின்னூட்டங்களுடன் சேர்த்து பப்ளிஷ் செய்கிறேன்.....

பதிவின் இறுதியில் இந்த ஆண்டு சாப்பாட்டு மெனுவும் விரிவாக உள்ளது !
*********
2012 சென்னை பதிவர் மாநாட்டில் கலக்கிய பதிவர்கள் சிலரையும், மாநாட்டின் சாப்பாட்டு பந்தியையும் பார்க்கலாம்.

பின்னூட்ட புயல் நீங்களா நானா - திண்டுக்கல் தனபாலன் Vs ரமணி

கேபிள்-சிபி இரு பதிவுலக மலைகளுக்கிடையே   வீடுதிரும்பல் மோகன்
போட்டோ எடுக்கும் வரை சாதாரணமாய் இருக்கும் சிபி, போட்டோ எடுக்கிறார்கள் என்றதும் நொடியில் கூலிங் கண்ணாடி எடுத்து போடுவது பார்க்க ஜாலியா இருக்கு

ஒவ்வொரு பதிவரும் உள்ளே நுழையும் போது வீடியோவில் தன்னை அறிமுகம் செய்த  பின்னரே நுழைந்தார்கள்.
இங்கு பிலாசபி மற்றும் கோவை நேரம் ஜீவா
ரெண்டு மூணு செட் டிரஸ் வைத்து கொண்டு மண்டபத்திலேயே அடிக்கடி கெட் அப் மாற்றினார் கோவை நேரம் ஜீவா !

பிலாசபிக்கு திருமணம் பிக்ஸ் ஆகிடுச்சு. செப்டம்பர் முதல் வாரம் நிச்சயதார்த்தம். அடுத்த வருட மே மாசம் கல்யாணம். சாருக்கு பத்து நிமிஷத்துக்கொரு முறை போன் வரும். ஓரமா போய் நின்னு 15 நிமிஷம் பேசுவார் ! மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு :))

நாய் நக்ஸ், மணிஜி, கோவை நேரம், ஆரூர் மூனா

அநியாய பாசக்காரர் நாய் நக்ஸ் அண்ணே. வீட்டில் செஞ்ச மீன் எடுத்துட்டு வந்து, சாப்பிடாட்டி ஊட்டியேவிடுவாராம் (நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு தான் !)

ஜாக்கி மேடைக்கு சென்ற போது ஒரு வாசகர் செமையா விசில் அடிச்சார். ஜாக்கி புதியவர்கள் எதை வேணா எழுதுங்க; தைரியமா எழுதுங்க என சொல்லிவிட்டு அமர்ந்தார்

ஜாக்கி பேசுவதை புன்னகையுடன் கேட்கிறார் பட்டிக்காட்டான் ஜெய் 

சித்தூர் முருகேசன், கேபிள், ரோஸ்விக், மோகன்குமார் 


இவங்க எல்லாருமே பிரபல பதிவர்கள் தான்.. விழா குழு ..ஒரு பகுதி 

விழா குழு இன்னொரு பகுதி

****
இனி சாப்பாட்டு பந்தியில் எடுத்த படங்கள்  

எனக்கு தெரிந்த வரை இது தான் மெனு; ஏதும் தவறு என்று யாரேனும் சொன்னால் திருத்தி கொள்கிறேன்

தக்காளி சூப்
சாலட்
கோபிமஞ்சூரியன்
சப்பாத்தி, குருமா
வடை
காய்கறி
உருளை கிழங்கு சிப்ஸ்
சாம்பார் சாதம் ( பிசிபெல்லா பாத்)
வெஜிடபிள் பிரியாணி
தயிர் சாதம்
ஊறுகாய்
மைசூர் பாகு ( சூப்பரா இருந்தது. ரெண்டாவது கேட்கலாம் என்ற ஆசையை அடக்கி கொண்டேன்)
ஐஸ்கிரீம்
***
இவை தவிர காபி, டி, பொவண்டோ, போண்டா போன்றவை அவ்வப்போது நிகழ்ச்சி அரங்கிலேயே சப்ளை ஆனது !
LK, பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன் & அருணேஷ்


முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்த பின்னும் நண்பர்கள் மிக பெரிய கூட்டமாய் பின்புறம் நின்று அதிக நேரம் பேசி களித்தனர்

தம்பி வடை இன்னும் வரலை- சிவாவிடம் பேசும் சிரிப்பு போலிஸ். அருகில் பெஸ்கி.

கருண், சீனா ஐயா, கணக்காயன் ஐயா

"நிறைய தண்ணி குடிச்சுக்குங்க; மதியம் நிறைய பேச வேண்டியிருக்கும்"
சுரேகாவிடம் சொல்லும் ரோஸ்விக்

ஐயாக்கள் ராமானுசம், சென்னைப்பித்தன், நடனசபாபதி

தானே பரிமாறுகிறார் காடரிங் உரிமையாளர் &  பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி     

(ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.. அவருக்கு மவுன அஞ்சலி மட்டுமே  2013-விழாவில் நம்மால் செலுத்த முடிகிறது !

சிரித்தபடி கரண்டியும் கையுமாய் இருக்கும் சிராஜுதீனை இன்று தான் முதலில் பார்த்தேன். பம்பரமாய் சுற்றி பந்தியிலும், விழாவிலும் அனைத்து வேலைகளும் செய்தார். மிக மகிழ்ச்சி சிராஜுதீன் !

சீனு மற்றும் அவர் நண்பர்கள், சிராஜுதீன், சிவா, பிலாசபி
ஆரூர் மூனா, மதுமதி, அரசன், ரஹீம் கஸாலி



உணவு ஒரு வேளை பற்றாமல் போனால் என்ன செய்வது என்பதால், விழா குழுவினர் மட்டும், மற்ற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தான் சாப்பிட வேண்டும் என பேசி வைத்திருந்தோம். அதன் படி கடைசியாய் சாப்பிடும் விழா குழுவினர் சிலர்..மேலே உள்ள இரு படங்களில் !
 *************************

2013 பதிவர் சந்திப்பில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவு வகைகள்
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி 
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

***
அட்ரா சக்க ! அட்ரா சக்க ! அட்ரா சக்க !  சிக்கன் பிரியாணியா !!! ரைட்டு !
***
அண்மை பதிவு :

வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை 

வெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை !

" வ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு புத்தகம் எழுதும் அளவு செய்தி இருக்கிறது " தலைவர் சுஜாதா இதனை ஒரு முறை Quote செய்திருந்தார்.

இவ்வரிகளின் உண்மையை நண்பன் லட்சுமணன் மறைவுக்கு பின் - அவனது கவிதை தொகுப்பை வெளியிட்ட போது முழுமையாக உணர்ந்தேன். அப்போதே "வாழ்நாளில் நாமும் ஒரு புத்தகம் வெளியிடணும் " என்ற எண்ணம் மிக ஆழமாக பதிந்து விட்டது.

ப்ளாக் எழுத துவங்கி- பல புத்தக வெளியீடுகள் பார்த்த பின் ஒரு புத்தகம் எழுதலாம் என நம்பிக்கை வந்தது. 2010 ல் எழுத துவங்கி - 10 பாகம் வரை வெளியாகி - மிக அதிக பாராட்டு பெற்ற - வாங்க முன்னேறி பார்க்கலாம் தான் - இப்போது வெற்றிக்கோடாக அகவொளி பதிப்பக வெளியீடாக வருகிறது


அவ்வப்போது மனைவியிடம் " வாழ்நாளில்  ஒரு புக் வெளியிட்டு விடுவேன் ; ஒருவேளை நான் வெளியிடா விட்டால் - என்னோட புக்கை நண்பர்கள் மூலம் நீ ரிலீஸ் பண்ணிடு " என சொல்லி கொண்டிருப்பேன்.

நிற்க . மனைவி இப்ப சொல்றார் - " அப்பாடா ! புத்தகம் வெளியிடுற வேலை எனக்கு இல்லை.  " :)) (அவர்களின் கவலையே கவலை !)

புத்தகம் குறித்த சில சுவாரஸ்யங்கள் இங்கு -
**********
சுய முன்னேற்ற புத்தகம் என்றும் இதனை கொள்ளலாம்; மோகன் குமார் என்பவனின் சிறு ஆட்டோ பயோகிராபி என்றும் சொல்லலாம்.

ஒவ்வொரு மனிதனும் முன்னேற பல்வேறு குணங்கள் தேவைப்படுகிறது. சில குணங்கள் / பழக்கங்கள் நம்மை முன்னேற்றும். வேறு சிலவோ - பரம பத - பாம்பு போல நம்மை கீழிழுக்கும்

இப்படி பாசிடிவ் மற்றும் நெகடிவ் குணங்கள் புத்தகத்தில் மாறி மாறி பயணிக்கிறது .
***
சற்றே பெரிய சைசில் (டம்மி சைஸ்) 104 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை - 80 ரூபாய். வரும் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு மட்டும் ரூ. 50 என்கிற விலைக்கு புத்தகம் கிடைக்கும்.

104 பக்கங்கள் உள்ள டம்மி சைஸ் புத்தகம் - 100 ரூபாய் போடலாம் என்று சில நண்பர்கள் சொன்ன போதும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலை குறைக்கப்பட்டது.

குறிப்பாக முதல் 2 நாளுக்கு விலை 50 ரூபாய் என்பது நிச்சயம் ஒரு செமையான ஆபர். தயவு செய்து இதை தவற விடாதீர்கள்.
***
புத்தகத்துக்கான வாழ்த்துரை வழங்கியவர் பல சுய முன்னேற்ற நூல்கள் எழுதிய திரு. சோம வள்ளியப்பன். ஒரே நாளில் புத்தகத்தை படித்து விட்டு, நான் மெயில் அனுப்பிய 24 மணி நேரத்துக்குள் மிக அழகான முன்னுரை எழுதி தந்தார் (அந்த வாழ்த்துரை மட்டும் முடிந்தால் தனி பதிவாக பின்னர் பகிர்கிறேன் )
***

சுகுமார் சுவாமிநாதன் - நம் ரசனைக்கேற்ப அழகாக படம் வரைந்தார். பல முறை சின்ன சின்ன மாறுதல் சொன்ன போதும் சிறிதும் மனம் கோணாமல் வரைந்த தம்பி சுகுமார் இந்த துறையில் அடைய போகும் உயரங்கள் மிக அதிகம் என்பது நிச்சயம் தெரிகிறது !
***

புத்தகத்தின் பதிப்பாளர் நம் நண்பராகவும் இருப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை ! அதுவும் அகநாழிகை வாசு போல ஒரு மென்மையான மனிதர் இப்புத்தகம் வெளியிடுவது மிக மகிழ்ச்சியாக .உள்ளது. ( மணிஜி உங்களின் பங்களிப்பையும் மறக்க முடியாது !)

ஒற்று பிழைகளை சரி செய்யவே அகநாழிகை வாசுவிற்கு " தாவு " தீர்ந்து விட்டது. கணினியில் எழுதுவதால் ஏராள பிழைகள் வருகிறது. தனது புதிய கடை திறப்பு விழா நடுவிலும் மிக பொறுப்புடனும், பொறுமையுடனும் இதை செய்த தோழர் அகநாழிகை வாசுவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
***
மிக குறைவான நேரத்தில் இதை புத்தகமாக அச்சிட்டு உதவும் பாலகணேஷ் - இந்த விழாவில் வெளியாகும் 3 புத்தகங்களின் அச்சு வேலையும் இவர் பொறுப்பே. அண்ணன் இருக்கிறார் என்பதால் - புத்தகம் எப்போது பிரிண்ட் ஆகும் - சரியான நேரத்தில் வந்து சேருமா போன்ற கவலைகள் இன்றி ஹாயாக இருக்கிறேன்
***
புத்தகத்தை வெளியிடுவது கேபிள் சங்கர். முதல் பிரதி பெற்று கொள்வோர் - ஜாக்கி சேகர் மற்றும் திருமதி. பத்மஜா நாராயணன்

இந்த தொடர் முதன்முதலில் வீடுதிரும்பலில் வரும்போதே - " இது புத்தகமாக போடணும் தலைவரே; சூப்பர் கான்செப்ட்டா இருக்கு ; எல்லாரும் அவர் பெரிய ஆள் ஆனார் - இவர் பெரிய ஆள் ஆனார்னு சொல்லுவாங்க - நீங்க உங்க கதையை சொல்றீங்க பாருங்க - அங்கே தான் இந்த புக்கு நிக்கும் " என்பார். சொன்னதோடு மட்டுமல்லாது அப்போதே அகநாழிகை வாசுவிடம் " இதை புக்கா போடுங்க " என பரிந்துரைத்து விட்டார். அப்படி அவர் சொன்னது கூட வாசு சொல்லித்தான் எனக்கு தெரியும் ! கேபிள் யூ ஆர் கிரேட் !

இந்த புத்தகத்துக்கான விதையை முதலில் தூவிய கேபிள் சங்கர் இப்புத்தகத்தை வெளியிடுவது எத்தனை பொருத்தம் ! இன்று அவர் ஒரு இயக்குனராக மாறியபோதும் - எளிமை மாறாமல் - " தலைவரே - இந்த புக்கு ரிலீசுக்கு எங்கே இருந்தாலும் வந்துடுவேன் " என்று சொல்லி மகிழ வைத்தார்.
***

"கேபிள் சங்கர் வெளியிட ஜாக்கி சேகர் பெற்று கொள்கிறார்" என்பது கேட்கவே அழகாக இருக்கிறது !

ஜாக்கி - மனதில் உள்ளதை அப்படியே எழுதுவதில் வித்தகர். Straight from heart -பேச்சு மற்றும் எழுத்து இவருடையது

ஸ்நேஹமான , எந்த ஒப்பனையுமில்லா எழுத்துக்கு சொந்தக்காரரான ஜாக்கி - மிக எளிய எழுத்தை கொண்ட - இப்புத்தகத்தை பெற்று கொள்கிறார்.
***

பத்மஜா நாராயணன் - கவிஞர் - அனைவரிடமும் மிக ஸ்நேகமானவர். குடும்பம் , வேலை, குழந்தைகள் என அனைத்தையும் பார்த்து கொண்டு - தனது ரசனைக்கும் நேரம் ஒதுக்கும், சென்னையில் நடக்கும் எந்த ஒரு விழாவையும் தவற விடாமல் கலந்து கொள்ளும் இவரை எப்போதும் ஆச்சரியமாக பார்ப்பேன். ஜாக்கியுடன் முதல் பிரதியை பெற்று கொள்பவர் இவர் என்பதில் பெரும் மகிழ்ச்சி !

(இவரது பேரை பரிந்துரைத்த - " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை இதே நாளில் வெளியிடும் தம்பி சங்கவிக்கு மனமார்ந்த நன்றி! புத்தகத்தை பலரிடம் சென்று சேர்க்க சங்கவி எடுக்கும் முயற்சிகள் அசத்தல் ரகம் !   )
***

வெற்றிக்கோடு புத்தகம் - முதல் 10 பகுதிகள் மட்டும் தான் ப்ளாகில் வந்தது. அப்போது கிடைத்த வரவேற்பை பார்த்து விட்டு " முழுக்க எழுதிட்டா எல்லாரும் இங்கேயே படிச்சு முடிச்சுடுவாங்க " என மீதத்தை ப்ளாகில் வெளியிடாமல் வைத்து விட்டேன் :))

முதல் 10 பகுதிகள் ப்ளாகில் வாசித்த நண்பர்கள் மீதம் பகுதிகள் புத்தகத்தில் தான் வாசிக்கணும் !
***

முக்கிய விஷயம்: ஒவ்வொரு பதிவரும் மிக விரும்பும் விஷயம் பின்னூட்டம் தான் ! சுவாரஸ்ய பின்னூட்டங்கள் தரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்புத்தகத்தின் பகுதிகள் வீடுதிரும்பலில் வெளியான போது நண்பர்கள் இட்ட பல பின்னூட்டங்கள் - அவர்களின் பெயர் மற்றும் வலைத்தள முகவரியுடன் புத்தகத்தின் இறுதியில் வெளியாகிறது ! உங்கள் பெயரும் - வலைத்தளமும் கூட அதில் இருக்கலாம் ! புத்தகத்தில் கண்டு மகிழுங்கள் !
***

புத்தகத்தை இலவசமாய் பெற்றால் - அதன் மதிப்பு தெரியாது - இலவசமாய் வந்த புத்தகத்தை பலர் படிக்காமலும் போகலாம். எனவே முதல் இரு நாட்களில் 50 ரூபாய் மட்டும் தந்து புத்தகம் வாங்கி வாசியுங்கள் ! உங்கள் நண்பனின் வேண்டுகோள் இது !
***

செப் 1 - ஞாயிறு மதியம் 3 மணிக்கு புத்தக வெளியீடும் - அதற்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அகநாழிகை புத்தக கடையில் நூல் குறித்த விமர்சன கூட்டமும் நடை பெற உள்ளது. இந்த இரு இடங்களிலும் புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கும்.




நூல் விமர்சன கூட்டம் மற்றும் புத்தக வெளியீடு இரண்டு நிகழ்வுக்குமோ, அல்லது குறைந்தது ஒரு நிகழ்வுக்கேனும் நீங்கள் வரவேண்டும் என்பது உங்கள் நண்பனின் எதிர்பார்ப்பு !
***

பதிவர் திருவிழாவில் புத்தகம் வெளியாகும் விபரங்கள்

தேதி & நேரம் - செப் 1, 2013 ஞாயிறு மாலை 3 மணிக்கு !

முகவரி -

இசை கலைஞர்கள் சங்கம்
கமலா தியேட்டர் அருகில்
வடபழனி, சென்னை

அவசியம் விழாவிற்கு வருக; திரும்ப செல்லும்போது கையில் இப்புத்தகத்தையும், நெஞ்சில் விழா குறித்து ஏராள நினைவுகளையும் எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்..
****
புத்தகத்தின் அட்டை மற்றும் விழா அழைப்பிதழ் இரண்டையும் முக நூல் மற்றும் கூகிள் பிளஸ்சில் பகிர, இரு இடங்களிலும் நண்பர்கள் தரும் உற்சாக வரவேற்பு நான் கனவிலும் நினைக்காத ஒன்று !

எவ்வளவு நண்பர்கள் ! எத்தனை அன்பு !

ஒரு நண்பனின் துயரத்தில் பங்கேற்க, ஆறுதல் சொல்ல எத்தனையோ பேர் கிடைக்கலாம் ஆனால் ஒரு நண்பனின் சிறு முன்னேற்றத்தை கண்டு ஆனந்தம் அடையும் நண்பர்கள் கிடைக்கப் பெற்றோர் பாக்கியவான்கள்

நான் பாக்கியவான் !

Monday, August 26, 2013

போட்டது ஒரு பதிவு ! கிடைத்தது ஒரு லட்சம் உதவி !

நீண்ட நாளைக்கு பின் மீண்டும் வீடுதிரும்பலுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கிறார் நண்பர் ஆதிமனிதன். பரபரப்பான தலைப்பு ஆதி மனிதன் ஸ்டைல்.. !
**********
ரே பதிவு - அது வெளியாகி ஓரிரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் பெற்று தந்தது எனில் உண்மையிலே அது சாதனை தான். ஆம். வீடுதிரும்பலில் வெளியான சேவை இல்ல பதிவுக்கு கிடைத்த உதவி தொகை தான்  தான் அது !

எங்கள் அம்மா ஆசிரியராகவும், பின் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தஞ்சை அரசு சேவை இல்லம் பற்றி ஆதி மனிதனில் வெளியான பதிவை தொடர்ந்து நண்பர் மோகன் குமார் அப்பள்ளி பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களை நாட, அதற்கான ஏற்பாடுகளை அம்மா செய்து கொடுத்தார். பின் வீடு திரும்பலில் வெளியான சேவை இல்லம் பற்றிய பதிவை பார்த்து, பதிவு வெளியான ஓரிரு மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் இருந்து தமிழர்களால் நடத்தப்படும் AIMS India என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து தொலை பேசி அழைப்பு ! பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அவர்கள் கூறியது போலவே நாங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓரிரு வாரங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான உதவி தொகை வந்து சேர்ந்தது. அதன் மூலம் பள்ளிக்கு நான்கைந்து வகுப்புகளுக்கு தேவையான 10 க்கும் மேற்பட்ட இரும்பினால் ஆன டேபிள் மற்றும் பெஞ்ச்சுகள் TANSI யில் ஆர்டர் கொடுத்து நல்ல தரத்துடனும், உட்கார, எழுத வசதியுடனும் அழகாக வண்ணம் பூசி ஓரிரு மாதங்களில் வந்து சேர்ந்தது.

AIMS India தொடர்பு கிடைத்ததிலிருந்து பள்ளிக்கு உதவிகளை ஒப்படைக்கும் வரை AIMS India வின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகுமார், AIMS India வின் தமிழக தொடர்பு NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவா , சேவை இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு), அலுவலர் திரு. அசோகன், நண்பர் மோகன் குமார் மற்றும் எனது அம்மா ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் இதன் மூலம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவர் திருவிழா நடைபெறும் இந்த தருணத்தில், பதிவர் ஒருவர் எழுதியதன் மூலம் கிடைத்த இந்த பெரியதொரு உதவி தொகை - பதிவர்களுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகிறேன்.

கடந்த அகஸ்ட்-15 ஆம் தேதி இரு பெரும் விழாவாக சுதந்திர தினம் மற்றும் உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பள்ளி பொறுப்பாளர்கள் அழைத்ததின் பேரில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தார்கள். அது தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் காணொளி கீழே.
***************

சேவை இல்லம் சார்பாக உற்சாக வரவேற்பு:


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (அம்மாவுக்கு)...


தமிழ்த்தாய் வாழ்த்து...


கண்காணிப்பாளர் திருமதி. என் . ராஜம் வரவேற்புரை....


அம்மாவுக்கு மரியாதை...


NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவாவுக்கு மரியாதை... 



வீடு திரும்பல் திரு. மோகன் குமாருக்கு மரியாதை...


விழாவில் பேசியோர்கள்...





மோகனுக்காக ஒரு ஸ்பெஷல் க்ளோஸ்-அப் ஷாட்...


நன்றியுரை சேவை இல்ல திரு. அசோகன் அவர்கள்...


மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்...



டேபிள் பெஞ்ச் சாம்பிள்....



மாணவிகளின் கலை நிகழ்சிகள்...


மதிய உணவுக்கு முன் சாமி கும்பிடும் மாணவிகள்...


மதிய உணவு கூடம். இதற்கும் யாராவது புண்ணியவான் மேஜை நாற்காலிகள் செய்து கொடுத்தால் கோடி கும்பிடலாம்.


தஞ்சை சேவை இல்லத்தில் சேர தகுதி மற்றும் அதன் சேவைகள் குறித்து பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இத்தகவலை அளித்து உதவலாம்.

Saturday, August 24, 2013

சென்னையில் இன்று 2 முக்கிய விழா ..வாங்க பேசலாம் !

டந்த 2 வாரங்களாக எனது நாளின் பெரும்பாலான நேரத்தை எடுத்து கொண்டது கம்பனி சட்டம் குறித்து இன்று நடக்க உள்ள இந்த விழா தான்.


நிகழ்வில் ஒரு ஆர்கனைசர் என்பதுடன் - புதிய தலைப்பில் பேச வேண்டும் என்ற இரட்டை பொறுப்பு.  ஒழுங்காய்  தூங்கி  கொஞ்ச நாள் ஆச்சு.

எங்கள் குழுவின் உழைப்பிற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி...விழா துவங்க  4 நாளுக்கு முன்பே, 150 பேர் அமரும்  ஹால் முழுதும் புக் ஆகி விட்டது. அருகிலேயே உள்ள இன்னொரு ஹால் புக் செய்து - அங்கு லைவ் ரிலே செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.  தற்போதைய நிலவரப்படி இந்த ஹாலும் நிரம்பி விட்டது !

ஓரிரு ஆங்கில பத்திரிக்கைகளிலும் - தந்தி டிவி செய்திகளிலும் இந்த விழா குறிப்புகள் நாளை இடம்பெறும் !

**************

மாலை நடக்கும் விழா உங்களுக்கும் தொடர்புள்ள ஒன்று !

அகநாழிகை வாசு மற்றும் மணிஜி துவங்கும் புத்தக கடை திறப்பு விழா இன்று .. மனுஷ்ய புத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், பாஸ்கர் சக்தி ஆகியோர் பேசுகிறார்கள்

வாசு மற்றும் மணிஜி இருவருக்குமே நண்பர்கள் மிக அதிகம் . எனவே இன்று மாலை நீங்கள் அகநாழிகை பதிப்பகம் வந்தால் - புத்தகங்களை மட்டுமல்ல சென்னையின் ஏராள பதிவர்களையும்   ஒருங்கே பார்க்கலாம்.


அண்ணா சாலையில் சைதை  - பேருந்து நிலையம் மிக அருகில் உள்ளது இந்த புத்தக கடை !

மாலை அகநாழிகை விழாவில் சந்திப்போம் நண்பர்களே !

Friday, August 23, 2013

உணவகம் அறிமுகம்: மடிப்பாக்கம் அல் - நூர் பிரியாணி கடை !

டிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிதாய் முளைத்துள்ளது இந்த அல் - நூர் பிரியாணி கடை !

வந்து 2 மாதம் தான் ஆகிறது. கீழே ஹோட்டல் நடத்தும் இளைஞரின் வீடு. மொட்டை மாடியில் கூரை போட்டு, உள்ளே பால்ஸ் சீலிங் செய்து ஹோட்டல் கெட் அப் கொண்டு வந்துள்ளனர்.


2 நண்பர்கள் புதிதாய் சேர்ந்து இந்த பிசினஸ் துவங்கியுள்ளனர். சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் இருந்த சமையல் காரரை அழைத்து வந்துள்ளனர். மனிதர் தந்தூரி ஸ்பெஷலிஸ்ட்-டாம் ! பிரியாணியில் இப்ப தான் பயிற்சி எடுக்கிறார் போலும் !




மட்டன் பிரியாணி - 120
சிக்கன் பிரியாணி - 80
குஸ்கா - 60

மட்டன் பிரியாணி - செம காரம் ! செயற்கையாய் எதோ கலர் வேறு போட்டு தொலைக்கிறார்கள் :(

சிக்கன் மற்றும் குஸ்கா பிரியாணி ஓகே

பிரியாணி சில நேரம் நன்றாகவும் ஒரு சில நேரம் சொதப்பலாகவும் இருக்கிறது !

வெரைட்டி வேண்டுவோர் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம். நிச்சயம் ஓஹோ அல்ல. ஜஸ்ட் அவரேஜ் பிரியாணி இது !
Related Posts Plugin for WordPress, Blogger...