Saturday, August 17, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அட்டகாச பாடல் ஒளி வடிவில்!

ற்றது தமிழ் ராமின் அடுத்த படைப்பான தங்க மீன்கள் ஆகஸ்ட் 30 வெளியாகிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. இதுவாவது நடக்கும் என்று உளமார நம்புவோம்.



ஏற்கனவே பாடல்கள் வெளியாகி நம் மனதை மயிலிறகால் வருடியது ஒருபுறமிருக்க - தற்போது "ஆனந்த யாழை மீட்டுகிறாய் " பாடலின் வீடியோ வடிவத்தை இயக்குனர் ராம் வெளியிட்டுள்ளார்

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை" என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்க பாடல் துவங்குகிறது

பாடலை பார்த்து விடுங்கள் :



கண்களில் நீரும் - உதட்டில் புன்னகையும் சேர்ந்து இப்பாடலை சில முறை பார்த்து ரசித்து விட்டேன்.

பாடல் துவங்கும் போது பாடல் வரிகள் ஒரு புறம் செல்ல, காட்சிகள் வேறெங்கோ இருக்கிறது. பாடலுக்கேற்ற காட்சிகள் தானா என்ற சந்தேகம் உதிக்க துவங்க , ஓரிரு வரிகளுக்கு பின் - பாடலின் வரிகளும் காட்சியமைப்பும் ஒன்றி விடுகிறது

அந்த லொக்கேஷன் - அடடா ... எங்கும் பசுமை சூழ, காற்று பிய்த்து கொண்டு அடிக்கும் இடம்.. அட்டகாசம் !

குட்டி பெண் .. மிக அற்புதமாய் முகபாவங்கள் காட்டுகிறாள். முயல் போல முன்புறம் நீட்டி கொண்டிருக்கும் இரு பற்கள் கூட ரசிக்க முடிகிறது.

ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் அந்த சின்ன பெண் ஏன் சுடிதாரும் - அதற்கு ஒரு துப்பட்டாவும் போட்டிருக்கிறாள் என்ற கேள்வி எழுகிறது.

சின்ன பெண்களுக்கு - பெரிய மனுஷிகள் போடும் உடைகள் மேல் தான் ஆசை அதிகம் இருக்கும். குறிப்பாக அவர்களை போல நானும் சுடிதார் போடுகிறேன் என அடம் பிடிப்பார்கள்.

"பெரியவளாகி அதை தான் வாழ்க்கையில் பெரும்பாலான நாள் போடப்  போகிறாய்; இப்போதைக்கு மிடி, பிராக் உள்ளிட்ட உடைகள் போடு என்று நாம் சொன்னாலும் அவர்களுக்கு சுடிதார் மீதான மோகம் குறையவே குறையாது .. இந்த பெண்ணும் அந்த வயது + மனநிலையில் தான் இருக்க கூடும் !

மகள்களின் ஹீரோவும் அப்பாதான். ஜோக்கரும் அப்பா தான் ! ஒவ்வொரு தந்தையும் தன் மகளுடன் எத்தனை எத்தனை விளையாட்டுகளை விளையாடுகிறான் !

யாரும் இல்லாத இடம் என்று தெரிந்தால் இருவரும் சேர்ந்து ஓவென்று கத்துவது ... (நானும் மகளும் ரயிலே மேம்பாலத்தின் கீழே செல்லும் போதெல்லாம் இப்படி கத்துவோம்.  சுவரில் பட்டு நம் குரல் எதிரொலிப்பதில் ஒரு குஷி .. )

இன்றைய ஜெனரேஷன் குட்டி பெண்கள் அடிஷனல் போனசாக அப்பாவை அடிப்பதும், மிதிப்பதும் செய்கிறார்கள் ! அப்பாக்களும் " என் பொண்ணு என்னமா  மிதிக்கிறா " என ஆனந்தமாய் சிரிக்கிறார்கள் ( மவனே .. 50 கிலோ தாண்டிய பின் இதே பழக்கத்தில் மிதிப்பா. அப்ப வலிக்கும்டா அப்பா டேய்...)

பனியையும் புகையையும் கைகளால் விரட்டும் காட்சி - காற்றில் அலையும் அந்த புல்வெளி- துப்பட்டாவை துரத்திய படி ஓடும் அப்பா - மகள்;  நிலவை பந்து போல விளையாடும் மகிழ்ச்சி. ... என பாட்டின் ஒவ்வொரு பகுதியும் கவிதையாக தான் இருக்கிறது !

மிக முக்கியமாக - வெட்டவெளியில் நடக்கும் இப்பாட்டில் - அப்பா மகள் தவிர வேறு எந்த நபரும் பாடலின் எந்த ஷாட்டிலும் பின்புலத்தில் கூட வர வில்லை கவனித்தீர்களா?

அப்பா - மகள் உறவும் அப்படித்தான்.. இங்கு மூன்றாம் நபருக்கு வேலையில்லை என்று சொல்லாமல் சொல்கிறாரா இயக்குனர் !

டிஸ்கி:

எனது தங்க மீன் - அண்மையில் எனது பிறந்த நாளுக்கு தந்த அட்டகாச நினைவு பரிசை முகநூலில் பகிர்ந்திருந்தேன்; நீங்கள் இதுவரை பார்க்கா விடில் - இங்கு பார்க்கலாம் -

https://www.facebook.com/mohan.kumar.1447/posts/607697389251117

********
தங்க மீன்கள் காண .. காத்திருக்கிறோம் !

4 comments:

  1. ஒவ்வொரு கணத்திலும் அநுபவித்து பதிவு செய்துளிர், மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாடலும் காட்சிகளும் மனதில் பதிந்துநிற்கிறது. நன்றி.

    ReplyDelete
  3. தங்க மீன் தப்பித்து வெளியாகுமா??? ....

    ReplyDelete
  4. //மகள்களின் ஹீரோவும் அப்பாதான். ஜோக்கரும் அப்பா தான் //

    There are three stages of a man's life: He believes in Santa Claus, he doesn't believe in Santa Claus, he is Santa Claus

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...